/indian-express-tamil/media/media_files/2025/02/05/bwu4wN6VemWYgIGT7GgY.jpg)
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் விமானம், தற்போது வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து புறப்பட்ட C-17 ரக விமானத்தில் 205 இந்தியர்கள் அனுப்பப்பட்டனர். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறும் போக்கை தான் ஒடுக்குவேன் என டிரம்ப் கூறியிருந்தார். அதன்படி, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ராணுவ விமானத்தில் இவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Indian migrants sent back from US: Why Trump is using expensive military planes for deportation
நாடு கடத்துதலுக்காக ராணுவ விமானங்களை பயன்படுத்துவது என்பது, அமெரிக்காவில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு இல்லை. இத்தகைய விமானங்கள் விலை உயர்ந்தவை. சமீபத்தில் நாடு கடத்தப்பட்டவர்களை சுமந்து வந்த ராணுவ விமானத்தை ஏற்க கொலம்பியா நாடு மறுத்தது. அதன்படி, சாதாரண பயணிகள் விமானத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் என கொலம்பியாவின் அதிபர் தெரிவித்தார்.
அப்படியென்றால், எதற்காக இதே நடவடிக்கையை டிரம்பின் நிர்வாகம் தொடர்கிறது? நாடு கடத்துவதற்கு ராணுவ விமானத்தை பயன்படுத்த எவ்வளவு செலவாகும்?
நாடு கடத்துவதற்கு வணிக விமானங்களையே அமெரிக்கா வழக்கமாக பயன்படுத்தும். இவை, அமெரிக்க சுங்கம் மற்றும் குடிவரவு அமலாக்கத் துறையால் (ICE) இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் தற்போதும் நாடு கடத்துவதற்கு பயன்படும் போது, C-17 ரக ராணுவ விமானங்களும் இந்தப் பணிக்கு வலிந்து திணிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு விமானங்களையும் பயன்படுத்த ஆகும் செலவை ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒப்பிட்டுள்ளது. குவாத்தமாலாவிற்கு அனுப்பப்பட்ட இராணுவ விமானத்தில் ஒரு நபருக்கான செலவு ஏறத்தாழ 4,675 அமெரிக்க டாலர் எனக் கூறப்படுகிறது. இது, அமெரிக்க ஏர்லைன்ஸின் முதல் வகுப்பு பயண டிக்கெட்டின் விலையான 853 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும் போது, ஐந்து மடங்கு அதிகம்.
கடந்த 2023 ஏப்ரல் மாதம் ICE விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்ட போது, 135 பேர் சென்ற ஒரு விமானத்திற்கு 17,000 அமெரிக்க டாலர்கள் செலவானதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
C-17 ராணுவ விமானத்தை இயக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 28,500 அமெரிக்க டாலர் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட விமானத்தின் பயண நேரம் மிக அதிகமாகும். குவாத்தமாலா, பெரு, ஹோண்டுராஸ் மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கு இந்த வகையான விமானங்கள் சென்றுள்ளன. கொலம்பியாவிற்கும் இதே ரக விமானம் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த விமானத்தை திருப்பி அனுப்பிய கொலம்பியா, தங்கள் நாட்டவரை அழைத்து வர தங்களுடைய விமானத்தையே அனுப்பியது.
ராணுவ விமானங்களில் நாடு கடத்துவதை எதற்காக டிரம்ப் விரும்புகிறார்?
டிரம்பின் இந்த செயல் குறியீடு தொடர்பானது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை, அயலகத்தவர் என்றும் குற்றவாளிகள் என்றும் அவர்கள் அமெரிக்காவில் படையெடுத்துள்ளனர் என்றும் டிரம்ப் கூறி வந்தார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை இந்த விமானங்களில் ஏற்றும் காட்சிகளை பார்க்கும் போது, குற்றத்திற்கான தண்டனை என்பதை டிரம்ப் வலியுறுத்த முயல்வது புலப்படுகிறது. குறிப்பாக, அவர்கள் அனைவருக்கும் கை விலங்குகள் இடப்படுகிறது.
"வரலாற்றில் முதன்முறையாக, சட்ட விரோதமாக குடியேறிய அயலகத்தவர்களை, ராணுவ விமானங்கள் மூலம் அவர்கள் இடத்திற்கே அனுப்புகிறோம். இத்தனை நாட்களாக எங்களை முட்டாள்கள் எனக் கருதி சிரித்தவர்களிடையே, எங்கள் மரியாதையை மீட்டெடுக்கிறோம்" என டிரம்ப் கூறினார்.
"நாடு கடத்தும் பணிகள் தொடங்கி விட்டன. இந்த உலகத்திற்கு வலிமையான மற்றும் தெளிவான செய்தியை டிரம்ப் வழங்குகிறார். சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தால், பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என கடந்த ஜனவரி 24 அன்று, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்யாமல், அவர்களை விரைவாக நாடு கடத்தவே டிரம்ப் விரும்புகிறார். "சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு முகாம்களில் அடைத்து வைத்திருக்க நான் விரும்பவில்லை. அவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட நாடுகள் அவர்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.