இந்தியாவில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜோவர், பஜ்ரா, ராகி போன்ற அவற்றின் ஆரோக்கிய நன்மைகளை மேற்கோள் காட்டி யூனியன் பட்ஜெட்டில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்தியா சிறுதானியங்கள் ஏற்றுமதியில் 2-வது பெரிய நாடாக உள்ளது. சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகள், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மையமாக, இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனம்- ஹைதராபாத் ஆதரிக்கப்படும் என்று கூறினார்.
சர்வதேச சிறுதானிய ஆண்டு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முன்மொழிவை ஐ.நா பொதுச் சபை கூட்டம் ஏற்றுக்கொண்டது. இந்த ஆண்டு முழுவதும், பல மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்த “ஊட்டச்சத்து தானியத்தை” ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படும். இந்தியாவில் நடக்கும் G20 கூட்டத்திலும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிறுதானிய உணவு பரிமாறப்படும் மற்றும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசுத் துறை கேன்டீன்களின் உணவு பட்டியலில் சிறுதானியங்களை சேர்க்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) விரைவில் வழிகாட்டுதல்களை உருவாக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மார்ச் முதல் சிறுதானிய உணவுகளை வழங்க “சிறுதானிய கேன்டீன்” அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இளைஞர் விவகார அமைச்சகம் ஃபிட் இந்தியா செயலி மூலம் சிறுதானியங்கள் குறித்து முன்னணி விளையாட்டு வீரர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்களுடன் கருத்தரங்கு மற்றும் வெபினார் நடத்துகிறது.
உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சிறுதானியங்கள் கண்காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் இந்தியாவின் சிறுதானிய திட்டம் குறித்து விளக்கி காட்சிப்படுத்தப்படும். 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் சிறுதானிய உணவு போட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
பொது விநியோக திட்டத்தின் கீழ் இந்த தானியங்களின் கொள்முதலை அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடந்த ஆண்டு, பொது விநியோகத் திட்டங்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு மிகவும் மாறுபட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று கூறினார்.
சிறுதானியங்களின் நன்மைகள் என்ன?
பொதுவான சாப்பிடப்படும் தானியங்களை விட சிறுதானியங்கள் ஆரோக்கியமானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
அரிசி, கோதுமை விளைவிக்க தேவைப்படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு நீர் தேவைப்படுகிறது. புல் வகைகளைச் சேர்ந்த சிறுதானியங்கள் வறட்சி மற்றும் தீவிர வானிலைக்கும் அதிக சகிப்புத்தன்மை கொண்டவை. எந்த மண்ணிலும் மலைப்பகுதிகளிலும் வளரக்கூடியவை.
உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற நோய்களைத் தடுக்க சிறுதானியங்கள் ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். இந்தியாவில் அதிகப்படியானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 69.9 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களும் இளம் வயதிலேயே இருதய நோய்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.
தானியங்கள், பதப்படுத்தப்பட்ட அரிசி அல்லது கோதுமையைக் காட்டிலும் சிறந்தது. ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பிறகு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு எவ்வளவு உயர்கிறது என்பதைக் காட்டும் அளவீடாக, கிளைசெமிக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. சிறுதானியங்களில் இது மிகவும் குறைவாகக் கொண்டுள்ளது. குறைந்த கிளைசெமிக் உணவு எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதன் விளைவாக இதய நோய், புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. சிறுதானியங்கள் பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.
நீரிழிவு மருத்துவர் அம்ப்ரிஷ் மித்தல் கூறுகையில், “சிறுதானியங்களில் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டிருந்தாலும், அவை குறைந்த கலோரி விருப்பம் அல்ல. சிறுதானியங்களிலும் பகுதி கட்டுப்பாடு முக்கியமானது.
நீங்கள் கட்டுப்பாடற்ற அளவில் சிறுதானியங்களை உட்கொண்டால் ஊட்டச்சத்தை இழக்க நேரிடும். அரிசி அல்லது கோதுமை போன்ற தானியங்களை மெருகூட்டவோ அல்லது பதப்படுத்தவோ கூடாது – அவ்வாறு செய்வது அவற்றின் கிளைசெமிக் குறியீட்டை உயர்த்தும், மேலும் நன்மைகளை இழக்க கூடும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/