இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான சிஇஓ சலீல் பரேக் மற்றும் சிஎப்ஓ நிலஞ்சன் ராய் ஆகியோர் குறுகிய கால வருவாய் மற்றும் லாபத்தை உயர்த்துவதற்காக, நெறிமுறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, ஒரு குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை, அந்நிறுவன பங்குகளின் மதிப்பு 15.9 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்துக்கு இதுபோன்ற புகார் வந்துள்ள நிலையில், இதேபோன்றதொரு குற்றச்சாட்டை, நிறுவனத்தின் கொள்கைகளில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக ஆடிட்டிங் குழுவிவரும் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் நீலகேணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்குகளின் மதிப்பு வீழ்ச்சி குறித்த எந்த தகவலும் இல்லை. நந்தன் நீலகேணியின் அறிக்கையில், நிறுவனத்தின் மீதான புகார் குறித்து விசாரிக்க சர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் அண்ட் கோ என்ற நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக, அந்நிறுவனம் முழு விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸில் என்னதான் நடந்தது?
இன்போசிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும், மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று நெறியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு புகாரை, நிறுவன ஊழியர்களும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சில நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் தொடர்பான தகவல்களை தவறாகவும், திரித்தும், மறைத்தும் பங்குச் சந்தைகள் உள்ளிட்ட சட்டரீதியான அமைப்புகளுக்கு அளித்திருப்பதாகவும் தலைமை அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது மோசடிகளை ஆடிட்டர் குழுவுக்கும், இன்ஃபோசிஸ் நிறுவன குழுவுக்கும் கூட தெரியாமல் தலைமை அதிகாரிகள் பார்த்துக்கொண்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரால் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?
கார்பரேட் நிர்வாகத்தில் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும், இன்போசிஸ் நிறுவனம் முன்னணி இடத்தில் இருந்தது. 2017ம் ஆண்டில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஷால் ஷிக்கா, அந்த பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆட்டம் காண ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் நிறுவனத்தின் சமீபத்திய இந்த புகாரால், அதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் இடையே பெரும்கலக்கம் உருவாகியுள்ளது என்பதை மறுக்க இயலாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.