Shamik Chakrabarty
டி 20 உலகக் கோப்பை ஒத்திவைப்பு, இந்த ஆண்டின் இந்திய பிரீமியர் லீக்கை (ஐபிஎல்) ஏற்பாடு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) ஒரு கதவைத் திறந்துள்ளது. ஒப்புதல்களுக்கு உட்பட்டு, ஐபிஎல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இல் நடைபெறும். அங்கு இந்தியாவைப் போலன்றி, கோவிட் பாதிப்பு மிகவும் குறைவாகும். மக்கள் கூட்டங்களை மைதானங்களில் அனுமதிக்கக் கூட வாய்ப்புள்ளது.
ஐபிஎல் எப்போது நடக்கும்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் நடத்த ஏற்பாடு செய்ய அனுமதி கோரி பிசிசிஐ இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, போட்டிக்கான தேதிகளை வாரியம் அறிவிக்கும். அனைத்து பங்குதாரர்களுக்கும் போட்டி அட்டவணை மற்றும் standard operating procedure (எஸ்ஓபி) ஆகியவற்றை முறையாக அறிவிக்க ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும். டி20 உலகக் கோப்பையை ஒத்திவைத்திருப்பது ஐபிஎல் நடத்துவதற்கான கதவைத் திறந்துள்ளது. ஐபிஎல் உரிமையின் தலைமை நிர்வாகி ஒருவர் தெரிவித்தபடி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ, ஐபிஎல் அணிகளுக்கு வாய்மொழியாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) அதிகாரப்பூர்வ கடிதத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2020 பதிப்பை நடத்த பி.சி.சி.ஐ.யின் நோக்கம்.
ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுமா?
பி.சி.சி.ஐ அதிகாரிகள் கூறுகையில், உள்ளூர் நிர்வாகங்கள் சில, ரசிகர்களை அனுமதிப்பதில் முட்டுக்கட்டை போடுகிறது. ஐ.பி.எல் தொடங்கும் நேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலைமை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள தகவல் படி, ஜனவரி 29 முதல் ஜூலை 26 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 58,562 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன, இதில் 343 பேர் உயிரிழந்துள்ளனர். 51,628 என்ற மீட்பு வீதமும் எமிரேட்ஸில் மிகவும் அதிகமாக உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள், உள்ளூர் விளையாட்டு நிகழ்வுகள் துபாயில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபிஎல்லுக்கு முன் ஐரோப்பிய டூர் கோல்ப் இறுதிப் போட்டியை துபாய் நடத்தும். எனவே ஐபிஎல் போட்டிகளுக்கான இடங்களில் சில ரசிகர்களை அனுமதிக்க வாய்ப்புள்ளது.
மீண்டும், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) உறுப்பினர் ஒருவர்தகவலின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களை ஈசிபி மறுபரிசீலனை செய்து, நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை ஆய்வு செய்கிறது. 20-30 சதவிகித பார்வையாளர்கள் கூட அனுமதிக்கப்பட்டால், ஒவ்வொரு இடத்திற்கும் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.
போட்டிகளைக் காண ரசிகர்கள் பயணிக்க முடியுமா?
ஆம், கோவிட் -19 சோதனையில் எதிர்மறையாக ரிசல்ட் வந்தால், அவர்களால் முடியும். உதாரணமாக துபாயில் போட்டிகள் நடத்தப்பட்டால், ரசிகர்கள் பயணத்தை தொடங்குவதற்கு 96 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது அங்கு சென்ற பிறகு எடுக்க வேண்டும். சோதனை செய்யப்பட்டவர்களில் கொரோனா தொற்று உள்ளவர்கள் மட்டுமே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று துபாய் விளையாட்டு கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கில் சர்வதேச விமானங்கள் தவறாமல் இயங்கும் ஒரே நாடு ஐக்கிய அரபு அமீரகமாகும்.
ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டால் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுமா?
ஆம்! gate receipts வாயிலாக அவர்கள் வருமானத்தை இழப்பார்கள். வெவ்வேறு உரிமையாளர்களுக்கு gate receipts மாறுபடும். எடுத்துக்காட்டாக, 67,000 இருக்கைகள் கொண்ட ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் அதிக அளவில் ரசிகர்கள் திரண்டிருப்பார்கள். குறைந்த இருக்கைகளை சொந்த மண்ணில் கொண்டிருக்கும் அணிகள், ரசிகர்கள் டிக்கெட் எடுப்பதன் வாயிலாக பெரிய அளவில் இழப்பை சந்திக்கும். வழக்கமாக, கேட் வருவாய் மூலம், எட்டு அணிகளுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.250 கோடிவருவாய் கிடைக்கும். ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்தினால். குறைந்தது ரூ .15-20 கோடியை இழக்க நேரிடும்.
ஐ.பி.எல்லில் கலந்து கொள்ள அணிகள் தயாராக உள்ளனவா?
ஆம். அவர்கள் தயாராக உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அதிகாரி ஒருவர் கூறியது போல், அணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஹோட்டல்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். பல உரிமையாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கினர். ஒவ்வொரு அணிக்கும் போட்டிக்கு முன்னர் ஒரு முகாம் இருக்கும், ஆனால் முகாம்கள் எப்போது நடத்தப்படலாம் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. வெளியுறவு அமைச்சகத்திலிருந்து (MEA) தங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கான விசா உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை என்று ஒரு அணியின் அதிகாரி தெரிவித்தார்.
உதாரணமாக, சி.எஸ்.கே, தங்கள் இந்திய வீரர்களை துபாயில் ஒரு முகாமுக்கு இந்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் துபாயில் தங்கள் அணிக்கு ஒரு முகாம் இருக்கும் என்று அந்த அணியின் அதிகாரி தெரிவித்தார். ஒரு சில உரிமையாளர்கள், தங்கள் இந்திய வீரர்களுக்காக மூன்று வார முகாமை விரும்புகிறார்கள். அனைத்து அணியின் வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக துபாயில் சோதனை செய்வார்கள், ஆனால் அணிகளுக்கு தங்கள் வெளிநாட்டு வீரர்கள் எப்போது வருவார்கள் என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில், இதுவரை எந்த சர்வதேச விமானமும் இயக்கப்படவில்லை. எனவே வெளிநாட்டு வீரர்கள் பேட்ச் பேட்சாகத் தான் வருவார்கள்.
அணிகள் ஸ்பான்சர்ஷிப் வருவாயை இழக்குமா?
நவீனகால விளையாட்டில் வணிக ரீதியான வெற்றி, டிவி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கில் உள்ள பார்வைகளால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே பி.சி.சி.ஐ மற்றும் ஹோஸ்ட் ஒளிபரப்பாளரின் பார்வையில், ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல் போட்டிகள் விளையாடப்படுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் இது பொருந்தும். ஆனால் ஒரு அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியது போல், “தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் நடுவில், ஒட்டுமொத்த நிதியுதவி வருவாய் 10-15 சதவீதம் குறையும்”. தொழில்துறை மதிப்பீடுகளின்படி,மொத்தமாக எட்டு உரிமையாளர்களும் ரூ .450-500 கோடி மதிப்புள்ள ஸ்பான்சர்ஷிப் வருவாயைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு லாபம் தரப்போவதில்லையா?
இது அவர்களின் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் இந்த விஷயத்தில், ஐபிஎல் சீசனை கிக்ஸ்டார்ட் செய்வது போட்டி நடத்தப்படாமல் இருப்பதை விட சிறப்பானதாகும். துபாயில் நடத்தப்படுவதால், ஐபிஎல் மேல்நிலை செலவுகள் குறைந்தது 10-15 சதவீதம் அதிகமாக இருக்கும். அணிகளுக்கான உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பி.சி.சி.ஐ கவனித்துக்கொள்வதா அல்லது அணிகள் தாங்களாகவே செய்ய வேண்டுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும், ஸ்பான்சர்ஷிப் மற்றும் கேட் வருவாய் இழப்புகளை, உரிமையாளர்களுக்கு பி.சி.சி.ஐ ஈடுசெய்யுமா என்பது தெரியவில்லை. மேலும், ஒரு அணியின் அதிகாரி கூறியது போல்: "ஐபிஎல் இல்லாவிட்டால், எங்களுக்கு பூஜ்ஜிய வருவாய் (ஒளிபரப்பு வருவாய், ஸ்பான்சர்ஷிப் வருவாய் போன்றவை) இருந்திருக்கும், இந்த ஆண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருந்தால், உரிமையாளர்களுக்கு தலா ரூ .250 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்.
பிசிசிஐக்கு ஐபிஎல் எவ்வளவு முக்கியமானது?
ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் பி.சி.சி.ஐ.யின் வருவாய் இழப்பு ரூ .2,000 கோடிக்கு மேல் இருந்திருக்கும். தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம் ஆண்டுக்கு ரூ .3,270 கோடி செலுத்துகிறது. இது 50:50 விகிதத்தில் உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. எனவே பி.சி.சி.ஐ ரூ .1,500 கோடிக்கு ஒளிபரப்பு வருவாய் இழப்பை சந்தித்திருக்கும். ஐபிஎல்லின் தலைப்பு ஸ்பான்சரான விவோ, பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ .439 கோடியை அளிக்கிறது, அதே நேரத்தில் ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ பார்ட்னரான ட்ரீம் 11 ஆண்டுதோறும் ரூ .161 கோடியை வழங்குகிறது. வாரியம் அதையும் தவறவிட்டிருக்கும். அனைத்து வருவாய் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஐபிஎல் நடத்தாவிடில், பிசிசிஐ ரூ .3,000 கோடி இழப்பை சந்தித்திருக்கும். பி.சி.சி.ஐ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒளிபரப்பு வருவாயில் 70 சதவீதத்தை அதன் உறுப்பினர்களிடையே பகிர்ந்து அளிக்கிறது, அதே நேரத்தில் 26 சதவீதம் கிரிக்கெட் வீரர்களுக்கு செல்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.