இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிறிய செயற்கைக் கோள் ஏவுதல் வாகனத்தை (எஸ்.எஸ்.எல்.வி) வெற்றிகரமாக ஏவியது.
SSLV-D3 ராக்கெட் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் EOS-08 ஐ செயற்கைக் கோளை சுமந்து சென்று நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியது.
எஸ்.எஸ்.எல்.வி என்றால் என்ன?
இஸ்ரோவின் சிறிய செயற்கைக் கோள் ஏவுதல் வாகனம் (எஸ்எஸ்எல்வி) என்பது மூன்று திட உந்துவிசை நிலைகளுடன் கட்டமைக்கப்பட்ட மூன்று-நிலை ஏவுகணை வாகனமாகும். இது ஒரு திரவ உந்துவிசை அடிப்படையிலான வேகம் டிரிம்மிங் மாட்யூலை (VTM) டெர்மினல் நிலையாகக் கொண்டுள்ளது.
அடிப்படையில், எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிப்பின் பின்னால் உள்ள நோக்கம், குறைந்தபட்ச உள்கட்டமைப்புத் தேவைகள் கொண்ட குறைந்த விலை ஏவுகணை வாகனங்களை தயாரிப்பதாகும்.
எஸ்.எஸ்.எல்.வி ஆனது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவ முடியும் மற்றும் பல செயற்கைக்கோள்களை அதில் வைத்து அனுப்ப முடியும்.
எஸ்.எஸ்.எல்.வி தயாரிப்புக்கு முன், சிறிய பேலோடுகளை பல, பெரிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் மற்ற ஏவுகணை வாகனங்களைப் பயன்படுத்தி விண்வெளிக்கு அனுப்ப வேண்டியிருந்தது. இது தற்போது மாறியுள்ளது.
பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி என்றால் என்ன?
போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (பி.எஸ்.எல்.வி) மூன்றாவது தலைமுறை இந்திய செயற்கைக் கோள் ஏவுதல் வாகனமாகும். இது முதன்முதலில் 1994-ல் பயன்படுத்தப்பட்டது.
இன்றுவரை 50க்கும் மேற்பட்ட முறை பி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்படுள்ளது.
அதிக வெற்றி விகிதத்தை ராக்கெட் படைத்துள்ளது.
குறிப்பாக குறைந்த புவி சுற்றுப்பாதையில் (2,000 கி.மீ க்கும் குறைவான உயரத்தில்) பல்வேறு செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி உள்ளது. PSLV-XL ஆனது சுமார் 1,860 கிலோ எடையை சுமந்து செல்லும்.
மறுபுறம், ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (ஜி.எஸ்.எல்.வி) தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் (geosynchronous transfer orbit) செலுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் அதிக திறன் கொண்டவை, ஏனெனில் செயற்கைக்கோள்களை தொலைத் தூர விண்வெளிக்கு அனுப்ப அதிக சக்தி தேவைப்படுகிறது. இதில் மற்ற ராக்கெட் என்ஜின்களை விட அதிக உந்துதல் தேவைப்படுவதால் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் கொண்ட கிரையோஜெனிக் என்ஜின்கள் ஜி.எஸ்.எல்.வியில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: ISRO launches SSLV: What is the aim behind developing Small Satellite Launch Vehicles?
GSLV Mk-II 2,200 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களையும், Mk-III 4,000 கிலோ எடையையும் சுமந்து செல்லும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“