/indian-express-tamil/media/media_files/2025/01/18/BjbOsE62gWhm7bEIDwgz.jpg)
பூமியில் நிலவும் வானிலை, ராக்கெட்டை செலுத்தலாமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிப்பது போல, செயற்கைகோள்களை நிறுவுவதில் விண்வெளி வானிலையும் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: How ISRO’s maiden satellite docking exercise was aided by favourable space weather
கடந்த வியாழக்கிழமை, இஸ்ரோ தனது முதல் 'டாக்கிங்' பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதற்கு சாதகமான சூரிய செயல்பாடு இருந்ததும் மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதன் மூலம் 'டாக்கிங்'-ஐ வெற்றிகரமாக நிறைவேற்றிய நான்காவது நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்த சூழலில் விண்வெளி வானிலை, SpaDeX மிஷன் ஆகியவற்றுக்கான விடையை இதில் பார்க்கலாம்.
விண்வெளி வானிலை என்றால் என்ன?
சூரியன் தொடர்ந்து வாயுக்களையும், துகள்களையும் சூரியக் காற்றின் வடிவத்தில் விண்வெளியில் செலுத்துகிறது. இந்த துகள்கள் சூரிய கரோனா எனப்படும் சூரியனின் வெப்பமான வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து வருகின்றன. சூரியக் காற்று ஒரு மணி நேரத்திற்கு மில்லியன் கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து, சூரிய குடும்பத்தின் தொலைதூர பகுதிகளை அடையும். இந்த சூரியக் காற்று விண்வெளி வானிலையை உருவாக்குகிறது. சூரிய செயல்பாட்டின் சுழற்சியின் அடிப்படையில் அவற்றின் அதிர்வெண் மற்றும் தீவிரம் மாறுபடுகிறது. தற்போதைய சூரிய சுழற்சி 2019 இன் பிற்பகுதியில் தொடங்கியது. நவம்பர் 2023 இல் சுழற்சி அதன் அதிகபட்ச கட்டத்தை அடைந்தது.
விண்வெளி வானிலை செயற்கைகோள்கள் மற்றும் விண்கலங்களை எவ்வாறு பாதிக்கிறது?
"சாதாரண சூழ்நிலைகளில் கூட துல்லியமான 'டாக்கிங்' மிகவும் சவாலானது" என்று இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) சூரிய இயற்பியலாளரும், இந்திய விண்வெளி அறிவியல் மையத்தின் (CESSI) தலைவருமான திபியேந்து நந்தி தெரிவித்துள்ளார்.
பூமியின் வளிமண்டலம் பெரும்பாலும் விண்வெளி வானிலையின் மாறுபாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ஆனால், செயற்கைகோள்கள் மற்றும் விண்கலங்கள் ஆகியவை, அவற்றுக்கு நேரடியாக வெளிப்படும் தன்மையை கொண்டுள்ளன. இதன் காரணமாக தகவல் தொடர்பு செயலிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
'டாக்கிங்' பணிகளுக்கு இரண்டு விண்கலங்கள் அவற்றுக்கிடையே மிகக் குறைவான தொடர்புடைய வேகத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, விண்வெளி வானிலை இதற்கு சவாலாக அமைகிறது. "ஆனால் SpaDeX 'டாக்கிங்' பணியின் போது, சூரியனில் குறைவான புள்ளிகள் மற்றும் பிற காந்த கட்டமைப்புகள் இருந்தன. இதுவும் 'டாக்கிங்' பணி வெற்றிகரமாக நடைபெற்றதற்கு ஒரு காரணம்" என திபியேந்து நந்தி தெரிவித்துள்ளார்.
SpaDeX என்றால் என்ன? இதன் பணி ஏன் முக்கியமானது?
டிசம்பர் 30 அன்று, SDX01 ('சேசர்') மற்றும் SDX02 ('டார்கெட்') என்ற இரண்டு சிறிய விண்கலங்களை குறைந்த பூமியின் வட்ட சுற்றுப்பாதையில் இஸ்ரோ செலுத்தியது. பின்னர் விண்வெளியில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அவற்றைப் பிரித்தது.
செயற்கைகோள்களுக்கிடையேயான ஆரம்பப் பிரிவிற்குப் பிறகு, 'சேசர்' படிப்படியாக 'டார்கெட்'க்கு அருகில் வந்தது. அதாவது, 5 கிமீ, 1.5 கிமீ, 500 மீ, 225 மீ, 15 மீ மற்றும் 3 மீ தொலைவு என்ற அளவில் இறுதியாக கடந்த வியாழன் அன்று டார்கெட்-ஐ இணைந்தது
சந்திரயான்-4 போன்ற எதிர்கால விண்வெளிப் பயணங்களில் அல்லது இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அன்ட்ரிக்ஷா நிலையத்தை நிறுவ இத்தகைய நடவடிக்கைகள் தேவைப்படும்.
"இஸ்ரோவின் தொழில்நுட்ப திறன்களை நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட விண்வெளி வானிலை முன்னறிவிப்புகளில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் SpaDeX பணி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கடுமையான வானிலை நிகழ்வுகளிலிருந்து மனித உயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் காப்பாற்ற பூமியில் மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு இன்றியமையாதது போல, விண்வெளி வானிலை முன்னறிவிப்புகளை சரியான நேரத்தில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது" என திபியேந்து நந்தி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.