இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஜாலியன் வாலாபாக்கிற்கு முன்னும் பின்னும் பல அட்டூழியங்களுக்கு வழிவகுத்த அதே வேளையில், நிராயுதபாணியான பொதுமக்கள் மீது வெளிப்பட்ட வன்முறையின் தன்மை பரவலான கண்டனத்திற்கு வழிவகுத்தது. வின்ஸ்டன் சர்ச்சில் அந்த நாளை ‘கொடூரமான நாள்’ என்று விவரித்தார்.
ஏப்ரல் 13, 1919-ல் அன்றைக்கு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில், பஞ்சாபில் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற வளாகத்தில் இந்தியர்களின் போராட்டக் கூட்டம் கூடி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அது காலனித்துவ கால ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்தின் மிக நீண்ட நினைவுகளில் ஒன்றாக மாறிய வன்முறைக்கு சாட்சியானது.
ரெஜினல்ட் எட்வர்ட் ஹாரி டயர் என்ற பிரிட்டிஷ் கர்னல், வீடுகள் மற்றும் குறுகிய பாதைகளுக்கு இடையில் அமைந்துள்ள வளாகத்தை சுற்றி வளைக்குமாறு துருப்புக்களுக்கு உத்தரவிட்டார், மேலும், தப்பிக்க வழியில்லாமல் கூடியிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர்களில் சிலர் தோட்டாக்களில் இருந்து தப்பிக்க வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தனர். ஆங்கிலேயர்களின் கணக்குப்படி, துப்பாக்கிச் சூட்டில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 9 வயது சிறுவர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை என 1,000 பேர் இறந்தனர் என்று இந்திய வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஜாலியன் வாலாபாக்கிற்கு முன்னும் பின்னும் பல அட்டூழியங்களுக்கு இட்டுச் சென்றது. நிராயுதபாணியான பொதுமக்கள் மீது வெளிப்பட்ட வன்முறையானது பிரிட்டிஷ் அதிகாரிகள் உட்பட பலரின் பரவலான கண்டனங்களுக்கு உரித்தானது. போர்க்கால பிரிட்டிஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் அந்த நாளை ‘கொடூரமான நாள்’ என்று விவரித்தார், மேலும், டயர் துப்பாக்கிச்சூடு நடத்த பிறப்பித்த உத்தரவுகள் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது என்ன?
ஏப்ரல் 13-ம் தேதி சீக்கியர்களின் பண்டிகையான பைசாகி கொண்டாடப்படுகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குளிர்கால பயிர்களின் அறுவடையையும் குறிக்கிறது. அதே நேரத்தில், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இயக்கம் அந்த நேரத்தில் சீராக எழுந்து வந்தது. மேலும், காலனித்துவ உத்தரவுகளை மீறி ஜாலியன்வாலாபாக்கில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது. காலனித்துவ உத்தரவுகளை மீறி, அன்றைய காலத்தில் நிறைவேற்றப்பட்ட ரவுலட் மசோதாக்களுக்கு எதிராக ஜாலியன் வாலாபாக்கில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மசோதாக்கள் இந்தியர்களின் பொது சுதந்திரத்தை கட்டுப்படுத்தியது. இந்த சட்டம் காலனித்துவ சக்திகள் எந்த உத்தரவும் அல்லது விசாரணையும் இல்லாமல் மக்களை கைது செய்ய அனுமதித்தது. இந்த சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதிநிதிகளின் ஆட்சேபனைகளைப் புறக்கணித்து, இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய சட்டங்களில் ஒன்று. சட்ட மேலவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, பம்பாய் (இப்போது மும்பை) மற்றும் லாகூர் நகரங்களிலும் சில வன்முறைப் போராட்டங்கள் காணப்பட்டன. அதே நேரத்தில், மகாத்மா காந்தி அகிம்சை வழியில் அமைதியான போராட்டத்தைத் தொடங்க அழைப்பு விடுத்தார்.
லாகூர் மற்றும் அமிர்தசரஸில் ஏப்ரல் 11-ம் தேதி சர் மைக்கேல் ஓ ட்வயர் ராணுவ கட்டுப்பாட்டை விதித்தார். ஆனால், இந்த உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதிதான் அமிர்தசரஸை அடைந்தது. அவர் ஜலந்தர் கன்டோன்மென்ட்டில் இருந்து பிரிகேடியர் ஜெனரல் பதவியில் இருந்த கர்னல் டயரையும் அமிர்தசரஸுக்கு அனுப்பினார்.
ஏப்ரல் 13-ம் தேதி ஒரு ஞாயிற்றுக்கிழமை, கர்னல் டயரின் துருப்புக்கள் நான்கு பேர் கூட்டமாக கூடுவதற்கு எதிராக எச்சரிக்க நகரத்தின் வழியாக அணிவகுத்துச் சென்றனர். ஆனால், இந்த அறிவிப்பு பெரும்பாலான மக்களை சென்றடையாததால் பக்தர்கள் பொற்கோயிலை நோக்கி சென்றனர். மாலை 4 மணி அளவில், ரௌலட் சட்டத்தை எதிர்த்ததற்காக டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிட்ச்லேவ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பலர் பொதுக்கூட்டத்தில் கூடினர்.
டயர் இந்த கூட்டம் கூடியதை அரசு உத்தரவை மீறுவதாகப் பார்த்தார். “அவர்கள் எனக்கு கீழ்படிய மறுத்தால், அவர்கள் சண்டையிட வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். நான் அவர்களுக்கு பாடம் கற்பிக்கப் போகிறேன்…… நான் அவர்களை தண்டிக்கப் போகிறேன். ராணுவக் கண்ணோட்டத்தில் எனது எண்ணம் பரந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது” என்று நகரங்கள் முழுவதும் உள்ள இடையூறுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட 1920-ம் ஆண்டின் ஹண்டர் கமிட்டிக்கு (குறைபாடுகள் பற்றிய விசாரணைக் குழு என்றும் அழைக்கப்படுகிறது) டயர் கூறினார். அதில் டயரின் நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்ளது.
டயர் தனது துருப்புகளுடன், உள்ளே நுழைவதற்கும், வெளியே செல்வதற்கும் ஒரே வழியாக இருந்த குறுகிய பாதை வழியாக நுழைந்தார். 25 கூர்க்கா வீரர்கள் மற்றும் 25 பலுச்சிகள் துப்பாக்கிகளுடன், 40 கூர்க்காக்கள் குக்ரிகள் மற்றும் இரண்டு கவச கார்களுடன் ஜாலியன் வாலாபாக்கிற்குள் டயர் நுழைந்ததாக 1920-ம் ஆண்டு அறிக்கை குறிப்பிட்டது. அப்போது அங்கே சுமார் 10 முதல் 12,000 பேர் வரை கூடியிருந்தனர்.
“கூட்டத்தை கலைக்க எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல், அவர்கள் தனது அறிவிப்பை மீறியதால் எச்சரிக்கை அளிப்பது தேவையற்றது என்று அவர் கருதினார், அவர் தனது துருப்புகளுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இந்த துப்பாக்கிச் சூடு சுமார் பத்து நிமிடங்கள் தொடர்ந்தது” என்று அறிக்கை கூறுகிறது. சிலர் தடிகளை ஏந்தியிருந்தனர் என்றாலும் கூட்டத்தில் யாரும் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லவில்லை என்று அது குறிப்பிட்டது.
வீரர்கள் மொத்தம் 1,650 ரவுண்டுகள் துப்பாகியால் சுட்டனர். பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 379-க உயர்ந்தது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்திய தலைவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்த கொலைகளுக்கு பதிலடி கொடுத்தனர். நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தனது ‘நைட்’ பட்டத்தை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனரல் டயர் யார்?
டயர் 1854-ல், இன்றைய பாகிஸ்தானில் உள்ள முர்ரியில் பிறந்தார். 1885-ல் மேற்கு சர்ரே படைப்பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர், இந்திய ராணுவத்திற்கு மாற்றப்பட்டார். அவர் 1886-87-ல் மியான்மரில் முகாமிட்டிருந்தார். கிழக்கு பாரசீக சுற்றிவளைப்பின் பொறுப்பில் முதலாம் உலகப் போரில் (1914-18) பங்கேற்றார், இதன் நோக்கம் ஆப்கானிஸ்தானுக்குள் ஜெர்மன் நுழைவதைத் தடுப்பதாகும்.
ஜாலியன் வாலாபாக் சம்பவம் அவரது நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வழிவகுத்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, டயர் இந்தியர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டதாக அறியப்பட்டது. ஏப்ரல் 10, 1919-; மார்செல்லா ஷெர்வுட் என்ற கிறிஸ்தவ மிஷனரி, தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது, அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் சிலர் தலையிட்டு அவரை காப்பாற்றினர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, ஷெர்வுட் தாக்கப்பட்ட விதம் குறித்து டயருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஷெர்வுட் தாக்கப்பட்ட தெரு வழியாக யாரும் நடக்கக் கூடாது என்று அவர் உத்தரவு பிறப்பித்தார். அவ்வழியாக செல்ல வேண்டியவர்கள், ஊர்ந்து செல்லுமாறு கூறினார். இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு கசையடி கொடுக்கப்பட்டது.
ஹண்டர் கமிட்டி அறிக்கையின் ஒரு பகுதியாக, அதற்கு கொடுக்கப்பட்ட டயரின் அறிக்கைகள், ஏப்ரல் 13-ம் தேதி அவர் செய்த செயலுக்கு அவர் குறிப்பிட்ட வருத்தம் காட்டவில்லை, கூட்டத்தை அடக்குவது நியாயமானது என்று நம்பினார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, “நான் எனது முடிவை எடுத்திருந்தேன். நான் அதைச் செய்யலாமா வேண்டாமா என்று மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தேன்…. நிலைமை மிக மிக தீவிரமாக இருந்தது. கூட்டத்தைத் தொடர்ந்தால், எல்லா மனிதர்களையும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று நான் தீர்மானித்திருந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அவர் ஏன் இவ்வளவு அடக்குமுறையைப் பயன்படுத்தினார் என்பது குறித்து, டயர் கூறுகிறார், “ஆம், துப்பாக்கிச் சூடு நடத்தாமல்கூட நான் அவர்களைக் கலைத்திருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்… நான் அவர்களை சிறிது நேரம் கலைக்க முடியும், பின்னர் அவர்கள் அனைவரும் திரும்பி வந்து என்னைப் பார்த்து சிரிப்பார்கள், நான் என்னை முட்டாளாக்கிக் கொள்வேன் என்று நினைத்தேன்… அவர்கள் எனக்கு கீழ்படிய மறுத்தால்அவர்கள் சண்டையிட வந்திருக்கிறார்கள், நான் அவர்களுக்கு பாடம் கற்பிக்கப் போகிறேன்…… நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். ராணுவக் கண்ணோட்டத்தில் எனது யோசனை பரந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தைக் கலைக்க பயன்படுத்தப்பட்ட சக்தியின் அடிப்படையில் அவரது நடவடிக்கைகள் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் கடமை உணர்வின் மூலம் அவற்றை விளக்க முயற்சி செய்ததாகவும் அந்த அறிக்கை கூறியது.
“நாங்கள் இந்த முடிவுக்கு வருவது வேதனையாக் இருந்தது. ஏனென்றால், ஜெனரல் டயர் ஒரு சிப்பாயாக இருந்த பெருமையையோ அல்லது சமீபத்திய ஆப்கானிஸ்தான் போரின் போது தால் காரிஸனில் அவர் செய்த துணிச்சலான நிவாரணத்தையோ நாங்கள் மறக்கவில்லை” என்று அந்த அறிக்கை கூறியது. “உண்மையானது மற்றும் கடுமையானது என்றாலும் தவறான கடமை உணர்வு மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” இறுதி தாக்கத்தின் அடிப்படையில் அவை எவ்வளவு தீங்கு விளைவித்தாலும் கட்டற்ற சக்திகளை ஊக்கப்படுத்த வழிவகுத்தன.” என்று கூறுகிறது.
ஜாலியன் வாலாபாக் நிகழ்வுக்குப் பிறகு, டயருக்கு என்ன ஆனது?
ஹண்டர் கமிட்டி இந்த சம்பவத்தை கண்டித்தது. ஆனால், டயருக்கு எந்த தண்டனையும் விதிக்கவில்லை. இறுதியில், ராணுவத்தின் தலைமைத் தளபதி, பிரிகேட் கமாண்டர் பதவியை ராஜினாமா செய்யும்படி பிரிக் ஜெனரல் டயருக்கு உத்தரவிட்டார். மேலும், அவருக்கு இந்தியாவில் எந்த வேலையும் கிடைக்காது என்று அவருக்குத் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த நேரத்தில் டயர் ஒரு பிளவுபடுத்தும் நபராகவே இருந்தார். ஏகாதிபத்தியவாதிகள், இந்தியாவில் அமைதியின்மை என்று அவர்கள் கூறியதற்கு எதிராக டயர் செய்த செயல்களுக்காக உள்நாட்டில் அவரைப் பாராட்டினர். பின்னர், இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் செய்தித்தாள்கள் மற்றும் நிறுவனங்கள் டயருக்கு ஒரு நிதியை ஏற்பாடு செய்து கணிசமான தொகையை சேகரித்தன.
எம்.பி.யாகவும் இங்கிலாந்து பிரதமராகவும் ஆன வின்ஸ்டன் சர்ச்சில், டயரின் செயல்களை மீண்டும் செய்யவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கூறினார், “இந்தியாவிலோ வேறு எங்கும் நம்முடைய ஆட்சியானது உடல் வலிமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருந்ததில்லை, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை மட்டுமே நாம் அடிப்படையாகக் கொள்ள முயற்சித்தால் அது மரணத்தை ஏற்படுத்தும்.” என்று கூறினார்.
டயர் ஓய்வு பெற்று பிரிட்டனில் வாழ்ந்தார். தற்செயலாக, ராணுவச் சட்டத்தை பிறப்பிக்கும் அதிகாரியான மைக்கேல் ஓ' டயர், அவருடைய ஓய்வுக்குப் பிறகு, 1940-ல் ஜாலியன்வாலாபாக்கில் இருந்த சர்தார் உதம் சிங் என்ற இந்தியரால் படுகொலை செய்யப்பட்டார். அவரது தனிப்பட்ட நாட்குறிப்பில் அவர் ஓ. ட்வயர் டயர் என்று அடிக்கடி குறிப்பிட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அனேகமாக, அவர் இருவரையும் குழப்பிக் ஒண்டிருக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.