பிரதமர் நரேந்திர மொடி அமிர்தசரஸில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் வளாகத்தை சனிக்கிழமை (ஆகஸ்ட் 28) மாலை திறந்து வைத்தார்.
ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னம் முதன்முதலில் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் ஏப்ரல் 13, 1961 அன்று திறந்து வைக்கப்பட்டது. தேசியவாதத் தலைவர்கள் சைஃபுதீன் கிட்ச்லு மற்றும் சத்ய பால் ஆகியோரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாலியன் வாலபாக் நகரில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்த போது, ஏப்ரல் 13, 1919 அன்று படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஒரு தேசத்தின் அஞ்சலியாக இந்த நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது.
இந்த பிரம்மாண்ட கூட்டத்திற்கு எதிராக பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் ரெஜினல்ட் எட்வர்ட் ஹாரி டயர் தனது படைகளுக்கு கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார். அதில் பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்ன வளாகத்தில் என்ன இருக்கிறது. முன்பு இருந்த நினைவுச் சின்னத்தில் இருந்து என்ன மாறியிருக்கிறது? என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
நினைவுச் சின்னம் திறப்பு நிகழ்ச்சி
ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னம் அறக்கட்டளையின் தலைவர் பிரதமர் மோடி, அறக்கட்டளையின் மற்ற உறுப்பினர்கள் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பட்னோர் மற்றும் அந்த பகுதியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில், முன்னிலையில் பொதுமக்களுக்கு ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அர்ப்பணித்தார்.
ஒரு மணி நேரம் காணொளி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி குர்பானி வாசிப்புடன் தொடங்கியது. ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரிட்டிஷ் தோட்டாக்களுக்கு பலியாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்க வந்திருந்தனர்.
என்ன மாறியுள்ளது
2019ம் ஆண்டில், ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவேந்தலுக்காக கிட்டத்தட்ட ரூ.20 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது.
மறுசீரமைப்பு, பாதுகாப்புப் பணிகள் மற்றும் அங்கே கட்டடத்தில் கழிப்பறைகள், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் குடிநீர்வசதி போன்ற வசதிகளை உருவாக்குதல் ஆகியவை கலாச்சாரத் துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகள் அரசுக்கு சொந்தமான என்.பி.சி.சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டதால் இந்த நினைவுச் சின்னம் பிப்ரவரி 2019 முதல் பொதுமக்களுக்காக மூடப்பட்டுள்ளது.
ஜாலியன் வாலாபாக் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்கள் மாற்றப்பட்டு, பிரதான நினைவிடத்தைச் சுற்றி ஒரு தாமரை குளம் கட்டப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக சுடப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து தப்பிக்க மக்கள் குதித்த புகழ்பெற்ற ‘ஷாஹிதி கு’ அல்லது தியாகிகள் கிணறு, இப்போது ஒரு கண்ணாடி மூடியால் அடைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சர்ச்சைக்குரிய முடிவு என்றும் இது கிணற்றை பார்ப்பதை தடுப்பதாக கருதப்படுகிறது.
ஜாலியன் வாலாபாக்கில் புதியதாக என்ன இருக்கிறது?
28 நிமிட ஒலி ஒளி நிகழ்ச்சியில் ஏப்ரல் 13, 1919 அன்று நடந்த நிகழ்வுகள் மீண்டும் ஒவ்வொரு மாலையும் இலவசமாகக் காட்டப்படும். தியாகிகளை கௌரவிப்பதற்காக பார்வையாளர்கள் அமைதியாக அமர ஒரு ரட்சிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது.
குறுகிய பாதையின் உயரமான சுவர்களில் தியாகிகளின் பல புதிய சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாகத்தான் பார்வையாளர்கள் வளாகத்திற்குள் நுழைகிறார்கள். இவர்கள் வெவ்வேறு பஞ்சாபியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சிலையாக இருப்பவர்கள் அந்த சம்பவம் நடந்த நாளில் பூங்காவிற்குள் நுழைந்தார்கள். ஆனால், உயிருடன் திரும்பவில்லை.
அந்த காலகட்டத்தில் பஞ்சாபில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்று மதிப்பைக் காண்பிப்பதற்காக வளாகத்தில் உள்ள பலவீனமான கட்டிடங்களை மாற்றியமைப்பதன் மூலம் 4 புதிய காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காட்சியகங்கள் பஞ்சாபின் வரலாறு, சுதந்திர இயக்கத்தின் வரலாறு மற்றும் கதர் இயக்கம் ஆகியவற்றை சித்தரிக்கின்றன.
அதில் குரு நானக் தேவ், சீக்கிய போர் வீரர் பண்டா சிங் பகதூர் மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலைளும் உள்ளன.
தேசியவாத அரசியல்
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசியவாத அரசியல் மைய இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது. கடந்த வாரம், பஞ்சாப் முதல்வர் ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவுப் பூங்காவை துவக்கி வைத்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத தியாகிகளுக்கு அஞ்சலி என்ற இரண்டாவது நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தார். இது அடையாளம் காணப்பட்ட தியாகிகளை நினைவுகூர உண்மையான இடத்தில் நினைவுச்சின்னம் இருப்பதைக் கூறுகிறது.
இரண்டாவது நினைவிடம் ஜாலியான் வாலாபாக் நினைவிடத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள ரஞ்சித் அவென்யூவில் உள்ள அம்ரித் ஆனந்த் பூங்காவில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
ஜாலியன் வாலாபாக் அறங்காவலர் கேப்டன் அமரீந்தர் சிங் சனிக்கிழமை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மக்களவை எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவரும் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர். 2019ம் ஆண்டில், காங்கிரஸ் தலைவரை அறங்காவலர்கள் பட்டியலில் இருந்து நீக்க ஜாலியன்வாலா பாக் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.