இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும், நிலம் மற்றும் கடற்பரப்பு வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில், 2020 ஜனவரி மாதம் அதிக வெப்பநிலை கொண்ட மாதமாக இருந்துள்ளதை வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், (US National Oceanic and Atmospheric Administration (NOAA)) தெரிவித்துள்ள தகவலின்படி, 2020 ஜனவரி மாதம் அதிக வெப்பநிலை உடைய மாதமாக விளங்கியுள்ளது. இந்த அமைப்பு, 1880 ஆண்டு முதலான புள்ளிவிபரங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், 1919ம் ஆண்டுக்கு பிறகு அதிக வெப்பநிலை கொண்ட மாதமாக 2020 ஜனவரி மாதம் விளங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) தெரிவித்துள்ளது. இந்த மையம் 1901ம் ஆண்டு முதலான புள்ளிவிபரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதத்தில் சராசரியான குறைந்தபட்ச வெப்பநிலை 20.59°C ஆக இருக்கும். ஆனால், 2020ம் ஆண்டில் இந்த வெப்பநிலை 21.92°C ஆக இருந்தது. இது வழக்கத்தைவிட 1.33°C அதிகம் ஆகும்.
1919 ஜனவரி மாதத்தில் 22.13°C ஆக இருந்த குறைந்தபட்ச வெப்பநிலைக்கு பிறகு தற்போதுதான் (2020) இந்த அதிகபட்ச அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1901ம் ஆண்டில் 1.23°C, 1906ல் 1.1°C மற்றும் 1938ல் 1.05°C வீதத்திற்கு வெப்பநிலை அதிகரித்திருந்ததாக IMD தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில், 2020 ஜனவரி மாதத்தில் 30.72°C ( சராசரியாக 30°C), 2016ம் ஆண்டில் 1.1°C மற்றும் 2013ம் ஆண்டில் 0.95°C அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை 1901ம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் 1°C அளவிற்கு அதிகரித்துள்ளது.அதாவது 1901ம்ஆண்டில் 25.3°C ஆக இருந்தநிலையில், தற்போது 26.32°C ஆக அதிகரித்துள்ளது. மற்ற ஆண்டுகளின் ஜனவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2016ல் 0.88°C, 2013ல் 0.87°C, 1998ல் 0.78°C மற்றும் 2005ம் ஆண்டில் 0.57°C வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இந்த சராசரி வெப்பநிலை அதிகரிப்பின் விளைவாக இந்தாண்டு குளிர்காலம் மிகக்கடுமையாக இருக்கும் என்றும், ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் கடும்பனிப்பொழிவு இருக்கும். டில்லி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் குளிர் 4°C வரை குறைய வாய்ப்புள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடுங்குளிர் நிலவ வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அளித்துள்ள புள்ளி விபரங்களின் படி 141 ஆண்டுகளுக்கு பிறகு, 2020 ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது.
2016 மற்றும் 2020ம் ஆண்டுகளின் ஜனவரி மாதங்களிலேயே சராசரி வெப்பநிலை 1°C அளவிற்கு மேல் அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டுக்கு பிறகு வந்துள்ள 4 ஜனவரி மாதங்களிலும் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், 2002ம் ஆண்டு முதல் 10 அதிக வெப்பநிலை கொண்ட ஜனவரி மாதங்கள் பதிவாகியுள்ளன.
பசிபிக் கடற்பகுதியில் நிலவிய எல் நினோவின் தாக்கத்தாலேயே இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில், 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிக வெப்பநிலை கொண்ட மாதமாக விளங்கியதற்கு காரணமாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.