scorecardresearch

மேற்கு உ.பி தேர்தல்: பாஜகவும், ஜாட் சமூகத்தின் அரசியல் பலமும்

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமூகத்தின் வரலாறு மற்றும் அரசியல் பலம் என்ன? அதன் தலைவர்கள் யார்? வரவிருக்கும் தேர்தலில் ஜாட் சமூகத்தின் வரலாற்றின் முக்கியத்தவம் போன்ற பல கேள்விகளுக்கான விடையை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

மேற்கு உ.பி தேர்தல்: பாஜகவும், ஜாட் சமூகத்தின் அரசியல் பலமும்

அமித் ஷா கூட்டணிக்கான அழைப்பு விடுத்துள்ள நிலையில், நான் ஒன்றும் 25 பைசா நாணயம் அல்ல சுண்டிவிடுவதற்கு என ஜெயந்த் சவுத்ரி பதிலடி அளித்துள்ளார். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமூக மக்கள் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அவர்கள் பாஜகவுக்கு எவ்வளவு முக்கியம் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

ஜெயந்த் செளத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தள கட்சியும், அதன் கூட்டாளியான அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும், 2017இல் பாஜக சிறப்பாக செயல்பட்ட மேற்கு உபியை கைப்பற்றுவதற்கரான தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளனர். தற்போது, மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றுள்ளதால், பஞ்சாப் உள்பட மற்ற பகுதிகளை காட்டிலும் அனைவரது கவனமும் மேற்கு உ.பி., மீது திரும்பியுள்ளது.

ஜாட் என்பவர்கள் யார்?

1891 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 1,791 வெவ்வேறு ஜாட் சமூகங்கள் இருந்துள்ளன. பீப்பிள் ஆஃப் இந்தியா தொடரின் ஆசிரியர் கே எஸ் சிங், “இந்து, முஸ்லீம், சீக்கிய ஜாட்கள் இருந்ததாகவும், இந்தப் பிரிவுகள் அவர்களது திருமண உறவுகளை ஒழுங்குபடுத்துகின்றன என்பதை குறிப்பதாக தெரிவித்திருந்தார்.

ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பெரும்பான்மையான ஜாட் மக்கள் விவசாய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மத்திய பட்டியலில் உள்ள ஓபிசி பிரிவில் ஜாட் சமூகத்தையும் சேர்க்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே, உ.பி., ராஜஸ்தான், டெல்லி ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ஜாட் சமூகம் ஓபிசி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜாட் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த சமூகம் ஆகும். அவர்களால், உ.பி., ஹரியானா, ராஜஸ்தான், டெல்லியில் உள்ள கிட்டத்தட்ட 40 மக்களவைத் தொகுதிகள், சுமார் 160 சட்டமன்றத் தொகுதிகள் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். உ.பி.,யை பொறுத்தவரை, அவர்கள் மேற்கு மாவட்டங்களில் அதிகளவில் இருக்கின்றனர். கரும்புகளை பயிரிட்டு, மாநிலத்தின் பணக்கார விவசாய சமூகமாக திகழ்கின்றனர்.

ஜாட் பிரிவின் முக்கிய தலைவர்கள்?

1950-60களில், தேவி லால் மற்றும் ரன்பீர் சிங் ஹூடா (முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் தந்தை) பிரிக்கப்படாத பஞ்சாபின் முக்கிய ஜாட் தலைவர்கள் ஆவர். அதேபோல், ராஜஸ்தானில் நாதுராம் மிர்தாவும், உ.பி.யில் சவுத்ரி சரண் சிங்கும் இருந்தனர்.

1966 இல் ஹரியானா உருவான பிறகு, பன்சி லால் என்ற தலைவர் உருவெடுத்தார். ஹரியானாவில் ஜாட் சமூகம் 25 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. அங்கு அரசியலில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்துகிறது.

1987இல் இறக்கும் வரை, சரண் சிங் என்பவர் ஜாட் சமூகத்தின் சக்திவாய்ந்த தலைவராக இருந்தார். அவர், உ.பி.,யில் இரண்டு முறை முதலமைச்சராகவும், துறை பிரதமராகவும், 1979-80ல் ஆறு மாதங்களுக்கும் குறைவான காலம் பிரதமராகவும் பதவி விகித்திருந்தார்.

உ.பி.,யில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு முன்னோடியான பாரதிய ஜனசங்கத் கட்சிகள் மத்தியில், விவசாய சமூகத்தை சரண் சிங் வழிநடத்தி வந்தார். அப்போது, அந்த சமூகத்தை சேர்ந்த பல எம்எல்ஏக்கள் தேர்தலில் வெற்றிப்பெற்றிருந்தனர்.

சரண் சிங்கின் அரசியல் வாரிசாக அவரது மகன் அஜித் சிங் வளம்வந்தார். ஆனால் மண்டல் மற்றும் இந்துத்துவாவின் வருகை உ.பி.யில் அரசியலின் அடிப்படையை மாற்றியது. அஜித் சிங்கின் கீழ் ஜாட் சமூகம் அடுத்த காலத்திற்கு தேவைக்கேற்ப பல மாற்றங்களைச் செய்ய வேண்டியதாக இருந்தது.

உ.பி.,யில் ஜாட் சமூகம் வாக்குகள்?

மேற்கு உ.பி.யில் ஒரு டஜன் மக்களவை தொகுதிகளிலும், சுமார் 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜாட் சமூகம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது. அவர்கள் சுமார் 15 மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாக்பத், முசாபர்நகர், ஷாம்லி, மீரட், பிஜ்னூர், காசியாபாத், ஹாபூர், புலந்த்ஷாஹர், மதுரா, அலிகார், ஹத்ராஸ், ஆக்ரா மற்றும் மொராதாபாத் ஆகிய இடங்களில் ஜாட் மக்கள் அதிகளவிலும், ராம்பூர், அம்ரோஹா, சஹாரன்பூர் மற்றும் கௌதம் புத் நகர் ஆகிய இடங்களில் சிறிய எண்ணிக்கையிலும் வாழ்கின்றனர்.

உ.பி.,யில் உள்ள ஜாட் பிரிவினர் ஆளும் கட்சியிடம் ஆதரவு கரத்தை நீட்டி வருகின்றனர். சரண் சிங்கால் உருவாக்கப்பட்ட அரசியல் அடித்தளத்தை முலாயம் சிங் யாதவ் பயன்படுத்திக் கொண்டார். கடந்த பத்தாண்டுகளில் ஜாட்களின் பெரும் பகுதியினர் பாஜகவுக்கு மாறினர்.

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முசாபர்நகர், ஷாம்லி, மீரட், காசியாபாத், ஹப்பூர், பாக்பத், புலந்த்ஷாஹர், கவுதம் புத் நகர், அலிகார், மதுரா, ஆக்ரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், பிஜ்னூர், மொராதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, பரேலி, படாயுன் மற்றும் ஷாஜகான்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பெரும்பாலான தொகுதிகளில் ஜாட் சமூகம் ஆதிக்கம் செலுத்துகிறது.

அஜித் சிங்கின் அரசியல் வாழ்க்கை?

ஐஐடியில் படித்த சரண் சிங்கின் மகன் சவுத்ரி அஜித் சிங், தேசிய மற்றும் உ.பி அரசியலில் அவ்வப்போது தனது இருப்பை மாற்றி கொண்டே இருந்தார்.

1995 இல் காங்கிரஸில் இருந்து விலகி பி வி நரசிம்ம ராவ் அரசாங்கத்தில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாக்பத்தில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். ஆனால் அடுத்தாண்டு எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதிய கிசான் கம்கர் கட்சியை (BKKP) உருவாக்கினார்.

1998 லோக்சபா தேர்தலில், அஜித் சிங் தனது பாரம்பரியமான பாக்பத் தொகுதியை இழந்தார். இதையடுத்து, 1999 இல் ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) கடைசியை ஐ உருவாக்கினார். அந்த கட்சி, மக்களவைத் தேர்தலில் பாக்பத் மற்றும் அதை ஒட்டிய கைரானாவில் இரண்டு இடங்களை வென்றது. பின்னர் 2004 தேர்தலிலும், தனது இடத்தை தக்க வைத்துகொண்டது.

அஜித் சிங் அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் சேர முயன்றார். ஆனால் அதுநிறைவேறவில்லை.

தொடர்ந்து, 2009இல் பாஜகவுடன் இணைந்த ராஷ்ட்ரிய லோக் தளம், 9 இடங்களில் போட்டியிட்டு, 5 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால், 2011ல் அஜித் சிங், பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் சேர்ந்தார். அடுத்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் RLDக்கு மிகப்பெரிய அடி ஏற்பட்டது. அஜித் சிங்கும், அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி இருவரும் தோல்வி அடைந்தனர். கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அஜித் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மண்டல்-கமண்டல் காலத்தில் உ.பி.,யில் ஜாட் செயல்பாடுகள்?

BKKP என்பது அஜித் சிங்கின் ஒன்பதாவது அரசியல் மாறுதலாகும். 1996 ஆம் ஆண்டு உ.பி., தேர்தலில், விவசாயி தலைவர் மகேந்திர சிங் டிகாயத்தின் ஆதரவை கோரி, முலாயம் சிங்கின் எஸ்.பி.யுடன் இருக்கை ஒதுக்கீட்டில் ஈடுபட்டார்.38 இடங்களில் போட்டியிட்ட அவர், 8 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றார்.

2002 தேர்தலில் BJP உடன் கூட்டணி வைத்து RLD களமிறங்கியது. அப்போது, போட்டியிட்ட 38 இடங்களில் 14 இடங்களில் வெற்றி பெற்றது. மாயாவதி தலைமையிலான பிஜேபி-பிஎஸ்பி அரசாங்கத்தில் இணைந்த ஆர்எல்டி, விரைவாகவே கூட்டணியை முறித்துக்கொண்டது.

2003 இல் முலாயம் சிங் பதவியேற்றபோது, ​​அஜித் சிங்கின் எம்எல்ஏக்கள் அரசாங்கத்தில் இணைந்தனர். ஆனால் மீண்டும், 2007 UP தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, RLD முலாயமின் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது.

2007 தேர்தலுக்கு பிறகு, உபி வாக்காளர்களிடையே வந்த தெளிவான யோசனையால், ஆர்எல்டி கட்சி தோல்விகளை சந்திக்க தொடங்கியது. 2007 இல் BSPயிலிருந்து விலகிய ஆர்எல்டி போட்டியிட்ட 254 இடங்களில் 10 இடங்களில் மட்டுமே வென்றது.

2012 இல் , அஜித் சிங் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, ​​RLD காங்கிரஸுடன் போட்டியிட்டு, வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஜாட் சமூகத்தில் பாஜகவின் தாக்கம்

ஆர்எல்டி உடனான கூட்டணி பாஜகவுக்கு ஒருபோதும் உதவவில்லை. பாஜக தனது வாக்குகளை RLD வேட்பாளர்களுக்கு கிடைக்கவைத்தது. ஆனால், ஆர்எல்டி வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை.

இதையறிந்து, நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான புதிய பாஜக, ஆர்எல்டியுடன் கூட்டணி வைத்திட வேண்டாம் என முடிவு செய்தது. அதற்கு பதிலாக, தானே சொந்தமாக ஜாட் வேட்பாளர்களை நிறுத்தியது.

2013 இல் முசாபர்நகரில் நடந்த வகுப்புவாத கலவரம் அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது 2014 மக்களவைத் தேர்தலில் மோடி அலை வீச காரணமாகவும் அமைந்தது.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு உ.பி.யின் 17 மாவட்டங்களில் மொத்தமுள்ள 94 இடங்களில் பாஜக 73 இடங்களில் வெற்றி பெற்றது. SP 15 இடங்களிலும், BSP 3 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், ஜாட்களின் கட்சியான ஆர்எல்டி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன.

விவசாயி சமூகங்களில் யாதவர்கள் பாஜகவுக்கு எதிரானவர்களாகவும், சமாஜ்வாதியின் வாக்கு வங்கியாகவும் கருதப்படுகிறார்கள். குர்மிகள், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

மௌரியா-ஷாக்யா-சைனி-குஷ்வாஹா சமூகம் 2014, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தனர். இந்தக் குழுவிலிருந்து சக்தி வாய்ந்த தலைவர்கள் சமீபத்தில் வெளியேறியது கட்சிக்கு ஒரு பின்னடைவாக மாறியுள்ளது.

முசாபர்நகர் வன்முறை, இறுதியாக சரண் சிங் உருவாக்கிய ஜாட் மற்றும் முஸ்லிம்களின் பழைய கூட்டணியை உடைத்தது. இருப்பினும், அதற்கு முன்னரே பல ஆண்டுகளாக ஜாட்கள் படிப்படியாக பாஜகவின் பிராமணர்-பனியா-தாக்கூர் கூட்டணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.

வி பி சிங் தனது சக்திவாய்ந்த துணைப் பிரதமர் தேவி லாலை எதிர்த்து மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்திய பிறகு, ஜாட்களிடயை சலசலப்பு ஏற்பட்டது. பல ஆண்டுகளாக, ஓபிசி என வகைப்படுத்தப்பட்ட ஜாட் மற்றும் பிற விவசாய சமூகங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்தது.

வரவிருக்கும் தேர்தலில் நிலைமை என்ன?

2017 இல் பாஜக சார்பில் 15 ஜாட் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதில் 14 பேர் வெற்றி பெற்றனர். அதன்படி, இம்முறை ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 17 வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளது. RLD 12 ஜாட் வேட்பாளர்களையும், SP ஆறு வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது

இம்முறை புதிய வேளாண் சட்டங்களால் அதிருப்தியில் உள்ள ஜாட் சமூகம், சட்டங்கள் வாபஸ் பெற்றாலும் கோபத்தில் உள்ளனர். அதேபோல், கரும்புக்கான நிலுவைத் தொகையை செலுத்துவது போன்ற பிரச்சனைகளும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அகிலேஷ்-ஜெயந்த் கூட்டணியை பொறுத்தவரை, ஜாட் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் மீண்டும் ஒன்றிணைவது முக்கியமானது. மறுபுறம், பாஜக தேர்தலை இந்து-முஸ்லிம் அடிப்படையில் வெற்றிபெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Jats and the bjp in uttar pradesh