டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் ஜேவர் நகரப் பஞ்சாயத்தில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் வரவிருக்கிறது. விமான நிலையத்தை கட்டுவதற்காக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சூரிச் சர்வதேச விமானநிலையம் கடந்த நவம்பர் 29ம் தேதி நடைபெற்ற ஒப்பந்த ஏலத்தில் வெற்றியடைந்தது. பணி முடிவடைந்தவுடன் ஆறு முதல் எட்டு விமான வழித்தடங்களாக இயக்கப்படும் என்று தெரியவருகிறது (குறிப்பு : சென்னை விமான நிலையம் இரண்டு வழித்தடங்கள்).
ஜெவர் நகரப் பஞ்சாயத்தில் விமான நிலையத்தின் தேவை என்ன?
டெல்லியில் தற்போது இயங்கி வரும் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தின் சுமையை குறைப்பதை இந்த ஜெவர் விமான நிலையம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லி பிராந்தியத்தில் மட்டும் இந்திரா காந்தி விமான நிலையம், ஹிண்டன் விமான நிலையத்திற்கு (காஜியாபாத்தில் புதிதாக திறக்கப்பட்ட) பின்னர் இது மூன்றாவது பெரிய விமான நிலையமாக இருக்கும். முதற்கட்ட பணிக்கு பிறகு ஜெவர் விமான நிலையத்தில் 12 மில்லியன் பயணிகள் வரை பயணிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, பணிகள் அனைத்தும் முடிந்த தருவாயில் 70 மில்லியன் பயணிகள் பயணிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்தி விமான நிலையம் வரும் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் அதன் உச்ச திறன் 110 மில்லியனை எட்டும் தருவாயில் உள்ளதால் ஜெவர் விமான நிலையத்தின் முக்கியத்துவம் அதிகமாகிறது. இந்த ஆண்டு அக்டோபரில் செயல்பட்ட காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையம் தற்போது இரண்டு விமான வழித்தடங்களுடன் செயல்பட்டு வருகிறது.
இருப்பிடத்தைத் தேர்வு செய்ய எது வழிவகுத்தது?
ஜெவர் விமான நிலையம் இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து 72 கி.மீ தொலைவிலும், நொய்டா மற்றும் காசியாபாத்திலிருந்து 40 கி.மீ தொலைவிலும், கிரேட்டர் நொய்டாவிலிருந்து 28 கி.மீ தொலைவிலும், குர்கானில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் இருக்கிறது.
ஆக்ரா, புலந்த்ஷாஹர், அலிகர் போன்ற நகரங்களில் இருந்து ஜெவர் விமான நிலையம் 150 கி.மீ தூரத்திற்குள் இருப்பதால், இந்திரா காந்தி விமான நிலையத்தின் தேவைகள் குறைக்கப்படும் .
நொய்டா சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷைலேந்திர பாட்டியா இது குறித்து கூறுகையில், "ஜெவர் விமான நிலையத்தின் இருப்பிடம் டெல்லி மட்டுமல்லாமல், உத்தர பிரேதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரியானா போன்ற பயணிகளுக்கு விமான சேவைகள் எளிதாக்கப்படும்"என்று தெரிவித்தார்.
விமான நிலையம் இணைப்பிற்காக, யமுனா அதிவேக நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் விரைவான இரயில் போக்குவரத்து அமைப்பு மற்றும் பிரத்யேக பேருந்து வழித்தடங்களையும் அமைக்க இருக்கிறது.
டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனும், மெட்ரோ பிங்க் லைன்-ஐ ஜெவர் விமான நிலையம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வை மேற்கொண்டு வருகிறது. சாலையில் பயணிப்பவர்களுக்காக , கிரேட்டர் நொய்டாவுடன் ஜெவர் விமான நிலையம் யமுனா எக்ஸ்பிரஸ்வே மூலம் இணைக்கப்படுகிறது.
எப்போது இது திட்டமிடப்பட்டுள்ளது?
இது 18 ஆண்டுகளாக இருந்து வந்த யோசனை. 2001ம் ஆண்டு ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச முதல்வராக இருந்த காலத்தில் ஜெவர் விமான நிலையத்தை விவாதித்தார் . 2010ம் ஆண்டில், முதல்வர் மாயாவதி 'தாஜ் ஏவியேஷன் மையம்' என்ற கருத்தை முன்மொழிந்தார். பின்னர், அதுவும் கைவிடப்பட்டது. 2012 முதல் 2016க்கு இடையில் இருந்த சம்ஜ்வாடி கட்சி அரசாங்கம், ஆக்ராவில் ஒரு சர்வதேச விமான நிலையம் கொண்டுவரவேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததால், ஜெவர் விமான நிலையத் திட்டம் பின்னுக்குச் சென்றது .
ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வந்த விதிமுறைகளால் இந்த ஜெவர் விமான நிலையம் மீண்டும் தாமதமானது. ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்திற்கு 150 கி.மீ தூரத்திற்கு அருகில் மற்றொரு சிவிலியன் விமான நிலையத்தை அமைப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது அந்த விதிமுறை .
2016 ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த விதிமுறைகளை தளர்த்தியது. 2017 ஆம் ஆண்டில், ஜெவர் விமான நிலையத்திற்கு அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தது. பின்னர், விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிலம் கையகப்படுத்தும் செயல்முறையும் மெதுவாக முன்னேறியது.
விமான நிலையம் எப்போது திறக்கப்படுகிறது?
விமான நிலையம் நான்கு கட்டங்களாக தயாராகிறது. முழுமையாக முடிவடைய 30 முதல் 40 ஆண்டுகள் வரையாகும் . முதல் கட்ட பணிகள் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என்றும், 2023-24 க்குள் நிறைவடையும் என்றும் நொய்டா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட்டின் நோடல் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மொத்த செலவு ரூ .29,560 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையத்தை சுற்றி வரும் வணிக வளாகத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று சில ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நிலம் கையகப்படுத்தல் பற்றி
முதற்கட்ட விமான நிலைய பணிகளுக்காக மட்டும் ஜெவர் தாலுக்காவில் இருக்கும் ஆறு கிராமங்களின் விவசாயிகளிடமிருந்து 1,334 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது . நவம்பர் 28ம் தேதி வரையில், மாநில அரசு சதுர மீட்டருக்கு ரூ .2,300 என்ற கணக்கில் ரூ.3,167 கோடி இழப்பீடு கொடுத்திருக்கிறது. சுமார் 1028.5 ஹெக்டேர் நிலம் (கிட்டத்தட்ட 80%) கையகப்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள 20% டிசம்பரில் கையகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013ன் கீழ் ஒப்பிடும்போது இந்த தொகை போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.