ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வரும் நவம்பர் 30ம் தேதி துவங்கி 5 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இன்னும் கூட்டணி குறித்த உடன்படிக்கை எட்டாதநிலையில், விரைவில் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 81 எம்எல்ஏக்களை உள்ளடக்கிய ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், 2.26 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செலுத்த தகுதி பெற்றுள்ளனர்.
2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியிலிருந்து 5 எம்எல்ஏக்கள், பா.ஜ. கட்சியில் இணைந்ததை தொடர்ந்து, சட்டசபையின் பா.ஜ.வின் பலம் 48 ஆக அதிகரித்து இருந்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் கூறியதாவது, ஜார்க்கண்ட் மக்கள், பாரதிய ஜனதா கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த தேர்தலில் 65 இடங்களுக்கு மேல், பா.ஜ. கட்சி வெற்றி பெறும். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல்களில் பா.ஜ. கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு, இந்த தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், இங்கு நிலையே வேறுமாதிரி உள்ளது. ஜார்க்கண்ட் மாநில மக்கள் தொகையில் 26 சதவீதத்தினர் பழங்குடியின மக்களே..இந்த தேர்தலில் நிச்சயம் அமோக வெற்றி பெறுவோம்.
மாநில மக்களின் வளர்ச்சிக்காக, மத்திய அரசின் PM-KISAN, PM Awas Yojana,Ujjwala உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் வளர்ச்சிக்காக நிறைய தொழில்முனைவோர்கள் ஊக்குவிக்கப்பட்டு தொழில்வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிக்கலில் காங்கிரஸ் : முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியிலும் அசாதாரண சூழலே நிலவிவருகிறது. கட்சியின் மூத்த தலைவர்களான சுபோத் காந்த் சகாய், பிரதீப் பால்முச்சு உள்ளிட்டோரின் குற்றச்சாட்டு மற்றும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பிய கடிதங்களினால், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கட்சிக்கு புதிய தலைமையை, கட்சி மேலிடம் அறிவித்திருந்தபோதிலும், அது செயல்படாத ஒன்றாகவே உள்ளது. கட்சி தலைமைக்கு எதிராக, தலைநகர் ராஞ்சியில், கட்சியினர் போராட்டம் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி இழுபறி : ஆளுங்கட்சியான பா.ஜ. கட்சி, இதுவரை ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் என்ற அமைப்புடன் மட்டுமே கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேபோ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி உள்ளிட்டவையும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாமலேயே உள்ளன.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இனி அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.