ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் உட்கட்சி பூசல்களும், அங்கு இளைஞர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பாதததும் கண்கூடாக தெரிய துவங்கியுள்ளது.
இதுதொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது, காங்கிரஸ் கட்சி, கடந்த 6 ஆண்டுகளாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. சரியான தலைமை மற்றும் மாநில தலைமை இடங்கள் நிரப்பப்படாதது, துடிப்புடன் செயலாற்ற பல இளைஞர்கள் தயாராக உள்ள போதும், அவர்களுக்கு போதிய மரியாதை அளிக்காதது உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் அமைதியிழந்து தவிக்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் கட்சித்தலைமை இடம் நிரப்பப்படாமல் உள்ளது. 2014 மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து இதுவரை 5க்கும் அதிகமான முன்னாள் மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் முதல்வர்கள், கட்சியின் நடப்பு மற்றும் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டோர் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
சிந்தியா தற்போது கட்சியை விட்டு வெளியேறியுள்ள நிலையில், தற்போதாவது கட்சி விழித்துக்கொள்ள வேண்டும். கட்சி விவகாரங்களில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் அப்போது தான் கட்சி புத்துணர்வு பெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியுள்ள நிர்வாகிகள்
முன்னாள் மாநில முதல்வர்கள் :
விஜய் பகுகுணா (உத்தர்காண்ட்), அஜித் ஜோகி (சட்டீஸ்கர்), கிரிதர் கமாங் (ஒடிசா)
முன்னாள் மத்திய அமைச்சர்கள்
ஜி கே வாசன் ( தமிழ்நாடு), கிஷோர் சந்திர தியோ (ஆந்திரா), ஜெயந்தி நடராஜன் ( தமிழ்நாடு), எஸ் எம் கிருஷ்ணா (கர்நாடகா), பெனி பிரசாத் வர்மா ( உத்தரபிரதேசம்), ஸ்ரீகாந்த் ஜனா ( ஒடிசா), சங்கர்சிங் வகேலா ( குஜராத்)
முன்னாள் கட்சி தலைவர்கள் :
அசோக் தன்வார் ( ஹரியானா), ரீட்டா பகுகுணா ஜோஷி ( உத்தரபிரதேசம்)ல போட்சா சத்யநாராயணா ( ஆந்திரா), புபனேஸ்வர் கலிதா ( அசாம்), யஷ்பால் ஆர்யா ( உத்தர்காண்ட்), அசோக் சவுத்ரி ( பீகார்).
பிஸ்வா சர்மா ( அசாம்), பெமா காண்டு (அருணாச்சல பிரதேசம்), சுதீப் ராய் பர்மன் (திரிபுரா), பைரன் சிங் (மணிப்பூர்), சவுத்ரி பிரேந்தர் சிங் ( ஹரியானா), சீனிவாஸ் (தெலுங்கானா), மனாஸ் பூனியா (மேற்குவங்கம்), விஸ்வஜித் ரானே (கோவா), நாராயண் ரானே (மகாராஷ்டிரா), சந்திரகாந்த் காவ்லேகர் (கோவா)
ஆந்திராவில், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரும், பாரதிய ஜனதா, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியதில் இருந்து அங்கு உள்ள இளம் தலைவர்கள் அமைதியின்றியே உள்ளனர். அக்கட்சியில் மூத்த தலைவர்களுக்கும் - இளம் தலைமுறையினருக்கும் இடையே பனிப்போரே நிலவி வருகிறது.
கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர வேண்டும் இல்லையெனில், அப்பதவிக்கு காந்தியின் குடும்பம் சாராத புதிதாக ஒரு நபர் வரவேண்டும் என்பதே இளம்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இதற்கு கட்சி மேலிடத்திலிருந்து அமைதியே பதிலாக கிடைக்கிறது. என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ராகுலிடம் சில இளம் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். கட்சியில் நிலவும் வேறுபாடுகளை களைந்தால் ஒழிய, தான் மீண்டும் கட்சிப்பதவி ஏற்க முடியாது என்று அவர்களிடம் ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்தியபிரதேச விவகாரத்திலும், ராகுல் காந்தி அதிருப்தியையே வெளிப்படுத்தியுள்ளார். சிந்தியா விவகாரம், கட்சி தலைமைக்கு முன்னரே தெரிந்திருந்த போதிலும், இதுதொடர்பாக சமரச நடவடிக்கைகளில் கட்சி மேலிடம் ஈடுபடாதது வருத்தத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்திற்கும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கும் ஏற்பட்ட பனிப்போர் போன்றே, ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வரும், மாநில கட்சி தலைவருமான சச்சின் பைலட்டிற்கும் இடையே நிலவிவருகிறது. இதேபோன்று கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதேநிலைதான் நீடிக்கிறது.
கடந்த 2019 டிசம்பரில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து பாபுலால் மராண்டி, எதிர்க்கட்சி தலைவராகவும், கட்சி மாநில தலைவர் பதவிக்கு புதிதாக ஒருவரும் நியமிக்கப்பட்டனர்.
நான் சிந்தியா செய்தது குறித்து குறை கூறமாட்டேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் உள்ளவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட சலுகைகளை அனுபவித்து விட்டனர். ஆனால், எங்களுக்கு அப்படியொரு எந்தவொரு சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்று மற்றொரு இளம்தலைவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் செயற்குழு கமிட்டி நிர்வாகி குல்தீப் பிஸ்ஜோய், தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, சிந்தியா விவகாரம் அவரின் தனிப்பட்ட விசயம். சிந்தியா 2002ம் ஆண்டில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008ம் ஆண்டில் மத்திய அமைச்சரானார். 2012ம் ஆண்டில் இணை அமைச்சரானார். 2014 தேர்தலில் தோல்வியை தழுவியபோதிலும், முதல்வர் ஆசையில் இருந்த அவருக்கு கட்சி மேலிடம் பொதுச்செயலாளர் பதவி வழங்கி கவுரவித்தது.
காங்கிரஸ் கட்சி பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. கட்சி, தொண்டர்கள், தலைவர்கள் யாருக்கும் பாகுபாடு பார்த்ததில்லை, தீங்கு நினைத்ததில்லை. பாரதிய ஜனதா கட்சி, மற்ற கட்சிகளுக்குள் பிரிவினைகைள ஏற்படுத்தி கட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் சதித்திட்டம் நீண்ட நாட்களுக்கு பலனளிக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.