/tamil-ie/media/media_files/uploads/2019/11/exp-3.jpg)
kalapani, india nepal, jammu kashmir bifurcation, india new map, india map jammu kashmir, nepal border india map,, இந்தியா, நேபாளம், உத்தர்காண்ட், காலாபாணி, பேச்சுவார்த்தை
Yubaraj Ghimire
ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு புதிய இந்திய வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டது. இதில் உத்தர்காண்டின் காலாபாணி பகுதி, இந்தியாவிற்கு உரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எதிர்த்து நேபாள மக்கள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர்காண்ட் மாநிலத்தில் 372 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காலாபாணி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி, நேபாளத்தின் மேற்கு பகுதி மற்றும் திபெத்திற்கு அருகில் உள்ளது. இந்தியா வெளியிட்டுள்ள புதிய மேப்பில், காலாபாணி இந்தியாவின் பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறி, நேபாள தலைநகர் காத்மாண்டுவில், நேபாள அரசு, அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டவைகள் போராட்டம் நடத்தியுள்ளன.
இந்தியாவின் புதிய வரைபடம் ஒருதலைப்பட்சமானது. சர்வதேச எல்லைக்கோடு விதிகளை இந்தியா மீறியுள்ளதாக நேபாளத்தில் ஆளுங்கட்சியான நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் இறையாண்மையை துல்லியமாக சித்தரிக்கும் வகையில், புதிய இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 9ம் தேதி, காத்மாண்டுவில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், காலாபாணி விவகாரம் தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சு நடத்த பிரதமர் கேபி சிங் ஒலியிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச எல்லைகள் வரையறுத்தல்
1816ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் நேபாளத்துக்கு இடையே கையெழுத்தான சுகாலி ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் மேற்குப்பகுதியில், இந்திய - நேபாள எல்லை வரையறுக்கப்பட்டது.
காலாபாணி பகுதியில் வாழும் மக்களை, தங்கள் நாட்டு மக்களாக கருதி கடந்த 58 ஆண்டுகளாக நேபாள நாட்டின் மக்கள்தொகை கணக்கீட்டில் பதிவு செய்து வருவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு பிறகு, அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே, மறைந்த மன்னர் மகேந்திரா, காலாபாணி பகுதியை, இந்தியாவுக்கு தாரைவார்த்துவிட்டதாக தெரிவித்ததாக நேபாளத்தில் ஒரு சாரார் கூறிவருகின்றனர். 1962ம் ஆண்டில், நடந்த இந்திய - சீனா போரில் இந்த விவகாரம் முக்கிய பங்கு வகித்ததை யாரும் மறுத்துவிட முடியாது.
நேபாள பிரதமர் ஒலியின் முதல் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா கூடுதலாக 62 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தை
⦁ 2000மாவது ஆண்டில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் நேபாள பிரதமர் தலைமையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், இந்தியா, நேபாளத்துக்கு சொந்தமான ஒரு இஞ்ச் அளவு பகுதியை கூட ஆக்கிரமித்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இதே விவகாரம் தொடர்பாக, இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களின் சந்திப்பு நடைபெற்றது.
⦁ இதனை தொடர்ந்து, பிரதமர் வாஜ்பாயின் அறிவுறுத்தலின்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் நேபாளத்துக்கான இந்திய தூதர் கே வி ராஜன் உள்ளிட்டோர் ஆகாயமார்க்கமாக எல்லை வரையறை பணிகளை பார்வையிட்டனர். அதன்பிறகு, இவ்விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
⦁ புதுடில்லியில், பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளதாவது, நேபாள நாட்டுடனான எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. எல்லை விவகாரத்தில் அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவையையே இந்தியா விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
⦁ நேபாளத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்களான உபேந்திர யாதவ் ( தற்போதைய துணை பிரதமர்) மற்றும் சுஜாதா கொய்ராலா, இந்திய - நேபாள எல்லை விவகாரத்தில் 98 சதவீத பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
⦁ காலாபாணி எல்லை விவகாரம் மட்டுமல்லாமல், நேபாளம் - உத்தரபிரதேச எல்லை பகுதி விவகாரம் ஒன்று தீர்வு காணப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
⦁ பிரதமர் நரேந்திர மோடி, 2014ம் ஆண்டில் நேபாள நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, காலாபாணி மற்றும் சஸ்டா எல்லை விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியிருந்தது இந்த நேரத்தில் நினைவுகூரத்தக்கது.
தமிழில் : டி.கே.குமரன் பாபு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.