கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, உத்தரகாண்ட் அரசு கன்வார் யாத்திரையை நிறுத்தியுள்ள நிலையில், உத்தரப் பிரதேச அரசு இந்த ஆண்டு கன்வார் யாத்திரையை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க முடிவெடுத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி இந்த ஆண்டு கன்வார் யாத்திரை ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2019ம் ஆண்டில், கடைசியாக கன்வார் யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டபோது, கிட்டத்தட்ட 3.5 கோடி பக்தர்கள் (கன்வாரியாக்கள்) ஹரித்வாருக்கு வருகை தந்ததாகவும் மேற்கு உத்தரபிரதேசத்தில் 2-3 கோடி மக்கள் புனித யாத்திரை இடங்களை பார்வையிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்வார் யாத்திரையின் தோற்றமும் மத முக்கியத்துவமும்
கன்வார் யாத்திரை என்பது இந்து காலெண்டரில் ஷ்ரவண (சாவன்) மாதத்தில் ஏற்பாடு செய்யப்படும் ஒரு யாத்திரை ஆகும். காவி உடையில் சிவ பக்தர்கள் பொதுவாக கங்கை அல்லது பிற புனித நதிகளில் இருந்து புனித நீரை எடுத்துக்கொண்டு வெறுங்காலுடன் நடந்து செல்வார்கள். கங்கை சமவெளிகளில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார், கௌமுக், கங்கோத்ரி, பீகாரில் சுல்தான்கஞ்ச், மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரயாக்ராஜ், அயோத்தி அல்லது வாரணாசி போன்ற புனித யாத்திரைகளிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்வார்கள்.
பக்தர்கள் புனித நீரின் குடங்களை கன்வார்கள் என்று அழைக்கப்படும் அலங்கரிக்கப்பட்ட காவடி கொம்பில் தோள்களில் சுமந்து செல்வார்கள். முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களில் சிவலிங்கங்களை வணங்குவதற்காக யாத்ரீகர்கள் இந்த தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். 12 ஜோதிர்லிங்கங்கள் அல்லது மீரட்டில் உள்ள பூர மகாதேவர் மற்றும் அகர்நாத் கோயில், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில், ஜார்க்கண்ட், தியோகரில் உள்ள வைத்யநாத் தாம் கோயில் அல்லது பக்தரின் சொந்த கிராமத்தில் அல்லது நகரத்தில் உல்ல ஏதேனும் ஒரு கோயிலில் வழிபாட்டுக்காக இந்த தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர்.
சிவன் வழிபாட்டில் இந்த முறை கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வட இந்தியாவில் கன்வார் யாத்திரையுடன் தமிழ்நாட்டில் முருகப்பெருமானை வழிபடுவதற்கு எடுக்கப்படும் காவடி திருவிழா முக்கியமான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
இந்த சடங்கின் புராணக்கதை இந்து புராணங்களில் நன்கு அறியப்பட்ட அத்தியாயங்களில் ஒன்றான ‘சமுத்திர மந்தன்’ வரை செல்கிறது. இது பாகவத புராணத்தில், விஷ்ணு புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ‘அமிர்தம்’ உருவானதையும் விளக்குகிறது.
இந்த புராணத்தின் படி, அமிர்தத்துடன் பல தேவர்களும் மந்தனிலிருந்து வெளிவந்தனர். அதே போல் ஆலகாலம் அல்லது அதிக சக்தி வாய்ந்த ஆபத்தான விஷமும் வந்தது. அச்சமடைந்த அனைத்து தேவர்களும் அழிக்கும் கடவுளான சிவனை அணுகுகினார்கள். சிவன் அதை உட்கொண்டு உலகத்தை காக்கிறார். சிவன் விஷத்தை குடித்தபோது, அவரது மனைவி பார்வதி விஷத்தை கட்டுப்படுத்த அவருக்குள் இருக்கும் உலகங்களை பாதிக்காமல் தடுக்கும் முயற்சியில் அவரது தொண்டையை இறுகப் பிடித்தார். விஷத்தின் தாக்கத்தால் சிவனின் கழுத்து நீல நிறமாக மாறியது. இது அவர் நீலகண்டர் என்ற பெயரைப் பெற்றார். ஆனால், விஷம் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், அவரது உடல் வீக்கமடைந்தது. அந்த விஷத்தின் பாதிப்பைக் குறைக்க, சிவனுக்கு தண்ணீர் கொடுக்கும் நடைமுறை தொடங்கியது.
கன்வார் யாத்திரையின் மற்றொரு மூலக் கதை சிவனின் புகழ்பெற்ற, விசுவாசமான பக்தரான பரசுராமருடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. முதல் கன்வார் யாத்திரை பரசுராமரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்பட்டது. இன்றைய உத்தரப் பிரதேசத்தில் பூர என்ற இடத்தைக் கடந்து செல்லும்போது, அங்கு ஒரு சிவன் கோயிலுக்கு அஸ்திவாரம் போட வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. சிவனின் வழிபாட்டிற்காக ஷ்ரவண மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் பரசுராமர் கங்கை நீரைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
யாத்திரை மையங்களும் யாத்திரை வழிகளும்
கன்வாருடன் கால்நடையாக பயணம் செய்வது 100 கிலோமீட்டருக்கு மேல் நிண்ட பயணமாக இருக்கும். முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட யாத்ரீகர்களை புனித தலங்களான கங்கோத்ரி, கௌமுக் மற்றும் ஹரித்வார் போன்ற புனித தலங்களில் புனித நதிகளின் சங்கமத்தில் காணலாம். அவர்கள் சிவனின் ஜோதிர்லிங்கம் சன்னதிகளில் 'போல் பாம்' மற்றும் ‘ஜெய் சிவசங்கரா’ என்று கோஷமிடுகிறார்கள்.
மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ளவர்கள் பொதுவாக உத்தரகண்ட் செல்கையில், அயோத்தி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை வழியாக சுல்தான்கஞ்சிற்குச் செல்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் தண்ணீரை எடுத்துக்கொண்டு, 115 கி.மீ. சிவபெருமானுக்கு புனித நீரை வழங்க ஜார்க்கண்டின் தியோகரில் உள்ள பாபா வைத்யநாத் தாமுக்கு செல்கிறார்கள். சிலர் ஜார்க்கண்டின் டும்கா மாவட்டத்தில் உள்ள பாபா பசுகினாத் தாமிற்கும் பயணம் செய்கிறார்கள்.
கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து மக்கள் அயோத்திக்கு வந்து சரயு நதியில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு நகரத்தில் உள்ள க்ஷிரேஷ்வர் மகாதேவர் கோயிலுக்கு அளித்து வழிபடுகிறார்கள். மற்றவர்கள் வாரணாசிக்குச் சென்று பாபா விஸ்வநாதருக்கு கங்கை தண்ணீரை வழங்குகிறார்கள். பக்தர்கள் வரும் மற்றொரு முக்கியமான கோயில் பாரபங்கியில் உள்ள லோதேஸ்வர் மகாதேவர் கோயில் ஆகும்.
உத்தரப் பிரதேசத்தில், குறிப்பாக முசாபர்நகர், பாக்பத், மீரட், காஸியாபாத், புலந்த்ஷாஹர், ஹப்பூர், அம்ரோஹா, ஷாம்லி, சஹரான்பூர், ஆக்ரா, அலிகார், பரேலி, கேரி, பாரபங்கி, அயோத்தி, வாரணாசி, பாஸ்தி, கபீர் நகர், கோரக்பூர், ஜான்சி, பதோஹி, மாவ், சீதாபூர், மிர்சாபூர் மற்றும் லக்னோ வழியாக ஆகிய மாவட்டங்களில் யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
உத்தரபிரதேசத்தில் கன்வாரியாக்கள் பயன்படுத்தும் முக்கியமான வழிகளில் டெல்லி-மொராதாபாத் என்.எச்-24, ஹப்பூர் மற்றும் முசாபர் நகர் வழியாக டெல்லி-ரூர்க்கி என்.எச்-58, டெல்லி-அலிகார் என்.எச்-91, அயோத்தி-கோரக்பூர் நெடுஞ்சாலை மற்றும் பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலை ஆகியவை அடங்கும்.
இந்த யாத்திரை சில கடுமையான விதிகளைப் பின்பற்றுகிறது. சில பக்தர்கள் பயணத்தின் போது ஒவ்வொரு முறையும் தூங்கும்போது, சாப்பிடும்போது அல்லது ஓய்வெடுத்துக்கொள்ளும்போது குளிக்கிறார்கள். கன்வார் புனித நீரால் நிரப்பப்பட்டவுடன், அந்த குடத்தை ஒருபோதும் தரையில் வைக்கக் கூடாது.
மேலும், குடம் நிரப்பப்பட்டவுடன், கோயில்களுக்கு யாத்திரை செல்வது முழுவதுமாக கால்நடையாக இருக்க வேண்டும். சில பக்தர்கள் தரையில் தட்டையாக படுத்து, தங்கள் உடலின் முழு நீளத்தையும் குறிக்கும் வகையில் படுத்து அப்படி மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் முழு பயணத்தையும் முடிக்கிறார்கள்.
காலப்போக்கில், இந்த விதிகள் பல தளர்த்தப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற போக்குவரத்து வழிகளில் சவாரி செய்வதை கைவிட்டனர். பக்தர்களின் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்தை சீர்குலைத்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. அபாயகரமான சாலை விபத்துக்கள் மற்றும் கூட்ட நெரிசலில் யாத்ரீகர்களின் மரணங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் பதிவாகின்றன.
சட்டம் ஒழுங்கு சவால்
அனைத்து மத ஊர்வலங்களையும் போலவே, கன்வார் யாத்திரையும் சட்டம் ஒழுங்கு மீது பெரும் அழுத்தத்தை செலுத்துகிறது. மேலும், பெரும்பாலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்த யாத்திரை அனைத்து தவறான காரணங்களுக்காகவும் தலைப்புச் செய்திகளாக வந்துள்ளன. மத போர்வையில் சமூக விரோத சக்திகளால் சீர்குலைக்கும் நடத்தை, போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் ரவுடிகளின் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த யாத்திரை சில சமயங்களில் ரவுடிகளின் வன்முறைக்கும் வழிவகுத்துள்ளது. குழுக்களுக்கிடையில் வாக்குவாதங்கள் மற்றும் மோதல்கள் நடந்துள்ளன. சில சமயங்களில் காவல்துறை முன்னிலையில், கன்வாரியாக்கள் மற்றும் சாதாரண மக்களுடைய கோபத்தை அடிக்கடி ஈர்க்கின்றன. சாதாரண மக்கள் இடையூறுகள் காரணமாக தங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி சிரமப்படுகிறார்கள். டெல்லி மற்றும் உ.பி.யில் காவி உடை அணிந்த கன்வாரியாக்கள் வாகனங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன.
உத்தரப் பிரதேச காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏ.டி.ஜி) பிரசாந்த் குமார், யாத்திரையின் போது காவல்துறையினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மேலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இடங்களிலும் உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையிலும் வியூகத்தின் அடிப்படையில் திட்டமிடுங்கள் என்று கூறியுள்ளார்.
“அடிப்படையில் நாங்கள் ஒரு சில விஷயங்களை பூர்த்தி செய்கிறோம். நாங்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டியது போல, இது மிக முக்கியமான பகுதியாகும். ஏதேனும் விபத்து அல்லது சம்பவம் நடந்தால், உள்ளூர் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஏடிஜி பிரசாந்த் குமார் கூறினார்.
“நாங்கள் நம்முடைய ஆம்புலன்ஸ்களையும் போலீஸ் நடவடிக்கைக்கை வாகனங்களையும் மிகவும் முக்கியமான இடங்களில் நிறுத்த வேண்டும். யாத்திரை வழித்தடங்களில் சரியான விளக்குகள், நல்ல சாலை வசதிகள் மற்றும் தரமான உணவை நியாயமான விலையில் உறுதி செய்வது உள்ளிட்ட முக்கியமான சவால்கள் உள்ளன. சமூகங்களின் கலவையான மக்கள்தொகை உள்ள பகுதிகளில், முக்கியமான இடங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு பாதுகாப்பை அதிகரிக்கிறோம். மோதல்களைத் தவிர்க்க, உள்ளூர் நிர்வாகம் கன்வார் யாத்திரையின் காலத்திற்கு ஆடு அல்லது கோழி இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளை மூடுகிறது. இது பொதுவாக உள்ளூர் அளவில் நடக்கிறது” என்று பிரசாந்த் குமார் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் கன்வாரியாக்களுக்கு சிறப்பு கவனிப்பு
உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு கன்வாரியாக்களுக்கு நிறைய வழிவகைகளை வழங்கியுள்ளது. சுயக் கட்டுப்பாட்டுடன் பஜனைகளுக்கு டி.ஜேக்கள் உரத்த இசையை ஒலிப்பதற்கு எந்த தடையும் இல்லை. மாநிலத்தில் கன்வாரியாக்களை புறக்கணித்ததாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முந்தைய அரசாங்கங்களைத் விமர்சித்துள்ளார். 2019ம் ஆண்டில், பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்களைத் தூவ மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவை அனைத்தும் கன்வாரியாக்கள் மீது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவது முக்கியம் என்று சில அதிகாரிகள் நம்பும் அளவுக்கு வழிவகுத்துள்ளது.
கௌதம் புத்தா நகரில், கன்வாரியாக்களுக்கு ‘ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் டீசல் இல்லை’ என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மற்றவர்களுக்கும் பொருத்தப்பட்டது. 2018ம் ஆண்டில், அப்போது ஏ.டி.ஜி-யாக (மீரட் மண்டலம்) இருந்த பிரசாந்த் குமார் கன்வார் யாத்திரையை வானத்தில் இருந்து மேற்பார்வையிட்டு கன்வாரியாக்கள் மீது பூக்களை தூவினார்.
ஷாம்லி மாவட்டத்தில், எஸ்.பி. ஒரு கன்வாரியாவின் கால்களை அழுத்திவிடுவதைப் பார்க்க முடிந்தது. எஸ்பி மற்றும் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் ஆகியோர் யாத்ரீகர்கள் மீது ரோஜா மற்றும் சாமந்தி பூக்களைத் தூவினார்கள். பின்னர் அவர்கள் தெருவில் நடனமாடி ‘யோகி ஆதித்யநாத் ஜிந்தாபாத்’ கோஷங்களை எழுப்பினர். பல இடங்களில், கன்வாரியாக்கள் ஆதித்யநாத் அரசாங்கத்தை முந்தைய அகிலேஷ் யாதவ் அரசாங்கத்துடன் ஒப்பிட்டு தாங்கள் நடத்தப்பட்ட விதத்தை கோஷங்களாக எழுப்பினர்.
கோவிட் சவால்கள்
உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை ஏற்பாடு செய்யப்படுவதை உச்சநீதிமன்றம் அறிந்து கொள்வது குறித்து கேட்டதற்கு, கூடுதல் தலைமைச் செயலாளர் (தகவல் துறை) நவ்னீத் சேகல் குறிப்பிட்ட நேரத்திற்குள் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்கப்படும் என்று கூறினார்; இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, அரசாங்கத்தின் நிலைப்பாடு கன்வார் யாத்திரையை மாநிலம் முழுவதும் அனுமதிப்பதற்கு ஆதரவாக உள்ளது.
இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயைச் சுற்றியுள்ள கவலைகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்குமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. தேவைப்பட்டால், எதிர்மறையான ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கை யாத்திரைக்கு கட்டாயமாக்கப்படலாம் என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்வார் யாத்திரை ஜூலை 25 முதல் சவான் மாதத்தில் தொடங்கி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதியுடன் முடிவடையும் என்று ஏடிஜி பிரசாந்த் குமார் தெரிவித்தார். பக்தர்கள் செல்லும் சாலைகளில் முகமூடிகள், சானிடைசர்கள், பரிசோதனைக் கருவிகள், நாடித் துடிப்பு ஆக்சிமீட்டர்கள் மற்றும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகள் போன்றவற்றைக் கொண்டு கோவிட் பராமரிப்பு சாவடிகளை அமைக்க அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.