கர்நாடகாவில் சட்டவிரோத மத கட்டமைப்புகள் குறித்த 2009 உச்ச நீதிமன்ற உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் பாஜக ஆளும் அம்மாநிலத்தில் அரசியல் புயலைத் தூண்டியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சனை புகையத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஒரு இந்து அமைப்பு ஆயுதங்களை ஏந்தி பாஜக தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்தது, மேலும், “இந்துக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் மகாத்மா காந்தி கூட தப்பவில்லை”. என்று அந்த அமைப்பு மிரட்டியுள்ளது.
பசவராஜ் பொம்மை அரசாங்கம், இதற்காக மற்ற பாஜக தலைவர்களிடமும் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரசிடம் பின்னடைவை எதிர்கொள்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் 2009 உத்தரவு என்ன, அது ஏன் இப்போது செயல்படுத்தப்படுகிறது?
செப்டம்பர் 29, 2009 அன்று, இந்தியா அரசு மற்றும் குஜராத் மாநில வழக்கில், உச்ச நீதிமன்றம் “பொது வீதிகள், பொது பூங்காக்கள் அல்லது பிற பொது இடங்களில் கோவில், தேவாலயம், மசூதி அல்லது குருத்வாரா போன்றவற்றின் பெயரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் செய்யவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது,” என உத்தரவிட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடக உயர் நீதிமன்றம் தலையிடும் வரை அதிகாரிகளால் நிறைவேற்றப்படவில்லை.
பொது இடங்களில் கட்டப்பட்ட சில அங்கீகரிக்கப்படாத மதக் கட்டமைப்புகள் மட்டுமே இதுவரை அகற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்த பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஜூன் 27, 2019 அன்று தானாக முன்வந்து ஒரு மனுவை எடுத்தது. பிப்ரவரி 16, 2010 அன்று “செப்டம்பர் 29, 2009 க்குப் பிறகு கட்டப்பட்ட அனைத்து சட்டவிரோத மதக் கட்டமைப்புகளும் பொறுத்துக் கொள்ளப்படாது” என்று உயர் நீதிமன்றத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களில், கர்நாடக உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் தாமதமான முன்னேற்றத்திற்காக கர்நாடக அரசை பல முறை கண்டித்தது.
உயர் நீதிமன்றத்தின் அழுத்தம் காரணமாக சட்டவிரோத மத கட்டுமானங்களை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, அகற்றவோ அல்லது இடமாற்றம் செய்யவோ அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவுகளை வழங்கியது.
பொம்மை அரசு ஏன் இப்போது கேட்ச் -22 சூழ்நிலையில் உள்ளது?
சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்றுதல் மற்றும் இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் சிறிய அளவில் நடந்து கொண்டிருந்தபோது, மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கூட் பகுதியில் உள்ள ஒரு கோவில் செப்டம்பர் 10 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டபோது அது அரசியல் திருப்பத்தை எடுத்தது.
அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் காங்கிரஸ், பாஜக மற்றும் சமூக ஊடகங்களால் அரசியல் மயமாக்கப்பட்டது. உடனே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக அரசு நிலைமையை மறுபரிசீலனை செய்து உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிடும் வரை மாநில அரசின் முந்தைய உத்தரவுகளை அமல்படுத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
கோவில் இடிக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சனையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த ஆரம்பித்தனர். கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, பாஜகவின் “இந்து சார்பு நற்சான்றிதழ்கள்” குறித்து கேள்வி எழுப்பினார், அதே நேரத்தில் சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்றும் இயக்கத்தில் கோவில்கள் மட்டுமே இலக்கு வைக்கப்பட்டதாக பாஜகவின் மைசூரு எம்பி பிரதாப் சிம்ஹா குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் எத்தனை சட்டவிரோத மத கட்டமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன?
2010-11 ஆம் ஆண்டில், அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் சட்டவிரோத மத கட்டமைப்புகளின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, கர்நாடக அரசு மே 5, 2011 பிரமாணப் பத்திரத்தில் மாநிலத்தில் மொத்தம் 4,722 அங்கீகரிக்கப்படாத மதக் கட்டமைப்புகளில் 1,505 அகற்றப்பட்டதாகக் கூறியது. மேலும் 12 வழக்குகளில் சட்ட மோதல்கள் இருப்பதாகவும், 154 கட்டமைப்புகள் முறைப்படுத்தப்பட்டதாகவும் கூறியது.
ஜூலை 1, 2021 தேதியிட்ட மாநில தலைமைச் செயலாளர் பி.ரவிக்குமார் மாநில துணை ஆணையர்களுக்கு அனுப்பிய கடிதத்தின்படி, பொது இடங்களில் சுமார் 6,395 அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகள் உள்ளன. தட்சிண கன்னடா மாவட்டத்தில் 1,579 மற்றும் சிவமோகா 740 மற்றும் பெலகாவியில் 612 உள்ளது. பெரும்பான்மையானவை கோவில்கள் என்றாலும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களும் உள்ளன. பல இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் நிர்வாக நடவடிக்கை தடுக்கப்படுகிறது. ஹாசன் போன்ற சில மாவட்டங்கள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான செயல்திறன் விகிதத்தைக் கொண்டுள்ளன, அந்த மாவட்டத்தில் உள்ள 112 சட்டவிரோத மதக் கட்டமைப்புகளில் 92 ஐ நீக்கியுள்ளன. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு பல மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டாலும் கூட, பெங்களூருவில் செயல்பாடுகள் மெதுவாக இருந்தது. அங்கு செப்டம்பர் 29, 2009 க்குப் பிறகு கட்டப்பட்ட 277 சட்டவிரோத மதக் கட்டமைப்புகளில் ஐந்து மட்டுமே அகற்றப்பட்டன, அதே நேரத்தில் இடமாற்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 105 கட்டமைப்புகளில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்னும் அகற்றப்படவில்லை.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று, கர்நாடகா உயர்நீதிமன்றம் பெங்களூரு மாநகராட்சி கமிஷனரை, மாநகராட்சியின் மெதுவான முன்னேற்றத்திற்காக கண்டித்தது மற்றும் மாநில அரசிடம் ஒரு அறிக்கையையும் கேட்டது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் நஞ்சன்கூட்டில் கோவில் இடிப்பிற்கு எவ்வாறு பிரதிபலித்தனர்?
கோவில்களை மீட்கக் கோரி இந்துக்களுக்கு ஆதரவான அமைப்புகள் மாநிலம் முழுவதும் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா மற்றும் பாஜக மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே ஆகியோர் கோவில்களை இடிக்கும் நடவடிக்கை மாவட்ட அதிகாரிகளின் பிழை என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் அவரது சொந்தக் கட்சியினரிடமிருந்து வந்ததால், கர்நாடகா முழுவதும் இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடுமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுகளை மறுபரிசீலனை செய்து சட்டவிரோத மத கட்டமைப்புகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை கொண்டு வர விரும்புவதாக முதல்வர் பொம்மை கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில், இந்த சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு முதல்வர் பொம்மை அதிகாரிகளை குற்றம் சாட்டினார். உணர்ச்சிபூர்வமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் இடிபாடுகளுக்குப் பதிலாக சட்டவிரோதமாக அடையாளம் காணப்பட்ட மத இடங்களை இடமாற்றம் அல்லது ஒழுங்குபடுத்தும் கொள்கையை பாஜக கொண்டு வர வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை நடந்த இடிப்புகள் தொடர்பாக முதல்வர் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜோலே ஆகியோருக்கு எதிராக வலதுசாரி இந்து மகாசபாவின் பிரதிநிதி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், இந்துக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் மகாத்மா காந்தி தப்பவில்லை என்று கூறிய இந்து மகாசபா பிரதிநிதி தர்மேந்திர சுரத்கல், மங்களூரு போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அடுத்து என்ன?
முதல்வர் பொம்மை திங்கள்கிழமை சட்டமன்றத்தில் மதக் கட்டமைப்புகளை அகற்றுவதற்கான ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்தார். இந்த மசோதா அடுத்த இரண்டு நாட்களில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இந்த மசோதாவிற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil