கர்நாடக எம்எல்ஏக்கள் 16 பேர் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்துள்ள நிலையில், சபாநாயகர் இந்த விவகாரத்தில் சட்ட விதிமுறைகளின்படியே நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை கர்நாடகா மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் வருவது போல, கர்நாடக மாநிலத்தில் இந்தமுறையும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா என அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
224 எம்எல்ஏக்கள் உள்ள கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 113 எம்எல்ஏக்கள் தேவை. முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு 116 எம்எல்ஏக்களின் ( காங்கிரஸ் -78, மதசார்பற்ற ஜனதாதளம் -37 மற்றும் 1 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ) ஆதரவு இருந்தது. இந்நிலையில், 16 எம்எல்ஏக்கள் ( காங்கிரஸ் -13 ; மதசார்பற்ற ஜனதாதளம் -3) தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அலுவலகத்தில் வழங்கியுள்ளனர். இதன்காரணமாக, மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 208 எனவும், மெஜாரிட்டி 105 எம்எல்ஏக்களின் ஆதரவும் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாக தற்போது 100 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
பா.ஜ.,விற்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் அமைச்சரவையிலிருந்து விலகி பா.ஜ., விற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால், கர்நாடக சட்டசபையில் பா.ஜ.,வின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது.
16 எம்எல்ஏக்கள் ராஜினாமா நடவடிக்கை - சபாநாயகர் என்ன செய்யலாம் - சட்டம் சொல்வது என்ன
202 (1) விதியின்படி, ராஜினாமா செய்ய விரும்பும் எம்எல்ஏ, தான் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை, சபாநாயகரின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். அந்த கடிதத்தில், தான் இந்த தேதியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
202 (2) விதியின்படி, ராஜினாமா செய்ய விரும்பும் எம்எல்ஏ, சபாநாயகரை தனியாக சந்தித்து தனது ராஜினாமா விபரத்தை தெரிவிக்கலாம். அவர் அதை சுயநினைவுடன், எடுக்கப்பட்ட முடிவாக அது இருக்க வேண்டும்,யாரும் அவரை நிர்ப்பந்திருக்க கூடாது. காரணம் உண்மையாக இருப்பின், சபாநாயகர் உடனடியாக அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வார்.
202 (3) விதியின்படி, ஒரு எம்எல்ஏ அவரது ராஜினாமா கடிதத்தை அஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுயாராவது மூலமாகவோ அனுப்பியிருந்தால், அவரிடம் சபாநாயகர் சட்டசபை செயலாளர் அல்லது அதற்கு நிகரான அதிகாரியின் மூலம் விசாரணை மேற்கொள்வார். காரணம் உண்மையாக இல்லாதபட்சத்தில், ராஜினாமா நிராகரிக்கப்படும்.
16 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் ரமேஷ்குமார் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு : இதனிடையே,இந்த விவகாரத்தில் சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 10 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த 10 எம்எல்ஏக்களும், இன்று (11ம் தேதி) மாலை 6 மணிக்கு சபாநாயகர் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைய நாளைக்கு (12ம் தேதி) ஒத்திவைத்துள்ளது.