கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) கர்நாடகாவில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வியாழக்கிழமை (மே 11) மறுத்துள்ளது.
”இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உற்பத்தியாளரால் அதாவது எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தால், தகுந்த மென்பொருள்/ பொறிமுறைகள் மூலம் மறு சரிபார்ப்பு மற்றும் தகுதி சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ளாமல் தென்னாப்பிரிக்காவிலிருந்து நேரடியாகப் பெறப்பட்டவை உட்பட பல்வேறு ஆதாரங்கள் மூலம் இது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று காங்கிரஸ் தலைவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளதை, அதன் பதிலில் தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியுள்ளது.
இதையும் படியுங்கள்: கர்நாடக தேர்தல் முடிவுகள்; 6 முக்கிய நிகழ்வுகள் இதோ!
தேர்தல்களில் பயன்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பியதில்லை என்றும், எந்த நாட்டிலிருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இறக்குமதி செய்ததில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. தென்னாப்பிரிக்க தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் காகித வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டிருக்கிறது, இது தங்களால் சரிபார்க்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் ஆணையத்தின் புதிய இயந்திரங்கள் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
இந்தியாவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டதா?
தேர்தல்களில் பயன்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பியதில்லை என்றும், எந்த நாட்டிலிருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இறக்குமதி செய்ததில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வெளிநாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, தேர்தல் ஆணைய இணையதளத்தின் FAQ பிரிவின் படி, “வெளிநாட்டில் தயாரிக்கப்படும் எந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் இந்தியா பயன்படுத்துவதில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 பொதுத்துறை நிறுவனங்களால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பெங்களூரு மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், ஹைதராபாத்.
இந்திய தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பூட்டான், நேபாளம் மற்றும் நமீபியா போன்ற பல நாடுகள் தங்கள் தேர்தல்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தியதாக தேர்தல் ஆணைய வலைத்தளம் கூறுகிறது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் என்ன பாகங்கள் உருவாகின்றன?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, அவை ஒரு 'கண்ட்ரோல் யூனிட்' மற்றும் 'வாக்குப் பதிவு அலகு' இவை 5 மீட்டர் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அலகு வாக்களிக்கும் பெட்டியில் உள்ளது, அதில் வாக்காளர் தனது விருப்பமான வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு எதிரான பொத்தானை அழுத்தி வாக்களிக்கலாம் மற்றும் கட்டுப்பாட்டு அலகு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரியிடம் உள்ளது.
வாக்குச் சாவடி அதிகாரி ‘பேலட்’ பட்டனை அழுத்திய பின்னரே வாக்குப்பதிவு யூனிட் இயக்கப்பட்டு, வாக்குப் பதிவு செய்யப்படுவதால், கட்டுப்பாட்டு அலகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ‘மூளை’ என அழைக்கப்படுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறுத்தவரை, “மென்பொருள் நிரல் குறியீடு இந்த இரண்டு நிறுவனங்களால் உள்நாட்டில் எழுதப்பட்டது, அவுட்சோர்ஸ் செய்யப்படவில்லை, மேலும் மிக உயர்ந்த அளவிலான நேர்மையைப் பராமரிக்க தொழிற்சாலை மட்டத்தில் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் இயந்திரக் குறியீடாக மாற்றப்பட்டு, அதன் பிறகுதான் வெளிநாட்டில் உள்ள சிப் உற்பத்தியாளருக்கு வழங்கப்படுகிறது, ஏனெனில் நாட்டிற்குள் செமி-கண்டக்டர் மைக்ரோசிப்களை உற்பத்தி செய்யும் திறன் நம்மிடம் இல்லை,” என்று தேர்தல் ஆணைய இணையதளம் கூறுகிறது.
ரகசிய மூலக் குறியீடு ஒரு சில பொறியாளர்களுக்கு மட்டுமே அணுகக்கூடியது. எந்தத் தொகுதிக்கு எந்த இயந்திரம் செல்லும் என்பது குறித்து தொழிற்சாலையில் உள்ள பொறியாளர்களுக்கு தெரியாது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது?
"மென்பொருளின் பாதுகாப்பு தொடர்பாக உற்பத்தியாளர் மட்டத்தில் மிகக் கடுமையான பாதுகாப்பு நெறிமுறை" இருப்பதாக தேர்தல் ஆணைய இணையதளம் கூறுகிறது. மேலும், “உற்பத்திக்குப் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநிலங்களுக்கும் மாநிலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயும் அனுப்பப்படும். ஒவ்வொரு தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும் ஒரு வரிசை எண் உள்ளது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் -கண்காணிப்பு மென்பொருளைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையம் அதன் தரவுத்தளத்திலிருந்து எந்த இயந்திரம் எங்கே அமைந்துள்ளது என்பதைக் கண்டறிய முடியும்" என்றும் இணையதளம் கூறுகிறது.
ஒவ்வொரு மைக்ரோசிப்பிலும் ஒரு அடையாள எண் நினைவகத்தில் பதிக்கப்பட்டுள்ளது மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய டிஜிட்டல் கையொப்பங்களை அவற்றில் வைத்திருப்பதாக இணையதளம் கூறுகிறது. மைக்ரோசிப்பை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் கண்டறியக்கூடியது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைச் செயலிழக்கச் செய்யலாம். எனவே, ஏற்கனவே உள்ள நிரல்களை மாற்றுவது அல்லது புதியவற்றை அறிமுகப்படுத்துவது இரண்டும் கண்டறியக்கூடியவை, இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்துவிடும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் நிர்வகிக்க தேர்தல் ஆணையம் வகுத்த ஒரு நிலையான இயக்க நடைமுறை உள்ளது. "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதன் சிப்பை அழிக்கும் செயல்முறை, உற்பத்தியாளர்களின் தொழிற்சாலைக்குள் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அல்லது அவரது பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகிறது" என்று இணையதளம் கூறுகிறது.
சமீபகாலமாக சில எதிர்க்கட்சித் தலைவர்களால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விமர்சிக்கப்பட்டன. இந்தியா ஏன் இவற்றுக்கு மாறியது?
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு, 2018 மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது கட்சி தேர்தலில் தோல்வியடைந்தபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பினார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோர் சமீப ஆண்டுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வளவு பாதுகாப்பானவை என்பதில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் இந்தக் கூற்றுக்களை மறுத்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான யோசனை முதன்முதலில் 1977 இல் தேர்தல் ஆணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது செலவுகளைச் சேமிக்கவும், காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், தேர்தல்களில் முறைகேடு செய்யும் முயற்சிகளுக்கு எதிராக பாதுகாப்பாக செயல்படவும் உதவும் என நம்பப்பட்டது. வாக்குச் சாவடியை சிலர் உடல்/ ஆள் பலத்தால் அடிப்படையில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஒரு வேட்பாளருக்கு சாதகமாக போலியான வாக்குச் சீட்டுகளை பெட்டிகளில் அடைத்து வாக்குச் சீட்டுகளைத் திணிக்கும் நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பெருமளவில் அகற்றப்பட்டன.
பொருளாதார வல்லுநர்களான ஷமிகா ரவி, முடித் கபூர் மற்றும் சிசிர் தேப்நாத் ஆகியோர் 2017 இல் இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியது போல், 1976 முதல் 2007 வரையிலான மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து அவர்கள் மதிப்பீடு செய்த தரவு, "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறிமுகம் தேர்தல் மோசடியில் குறிப்பிடத்தக்க சரிவுக்கு வழிவகுத்தது என்பதற்கு வலுவான ஆதாரங்களைக் காட்டுகிறது. மாநில சட்டமன்றத் தேர்தல் தரவுகள் அடிப்படையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் போலி வாக்குகள் களையப்பட்டதால், வாக்குப்பதிவில் 3.5 சதவீதம் சரிவு ஏற்பட்டதைக் கண்டோம்,” என்று அவர்கள் கூறினர்.
கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளை கொண்டுள்ள அரசியல்வாதிகள் மூலம் தேர்தல் மோசடிகளுக்கு வாய்ப்புள்ள மாநிலங்களில் இந்த சரிவு கணிசமாக அதிகமாக இருப்பதையும் அவர்கள் கவனித்தனர்.
1982-83 ஆம் ஆண்டில், கேரளாவில் உள்ள பாரூர் சட்டமன்றத் தொகுதியின் 50 வாக்குச் சாவடிகளில் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 1984 இல் அதன் பயன்பாட்டை நிறுத்தியது, மேலும் 1951 இன் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 1988 திருத்தம் மட்டுமே 1989 முதல் மீண்டும் பயன்படுத்த வழிவகுத்தது. 2001 ஆம் ஆண்டு வாக்கில், அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004 மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.