Explained: Karnataka’s Police Sub-Inspector recruitment scam, in which a serving ADGP has been arrested: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி நியமனத்தில் ரூ.100 கோடி ஊழல் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கர்நாடகாவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி) அம்ரித் பால் திங்கள்கிழமை (ஜூலை 4) கைது செய்யப்பட்டார், இதில் மாநில அரசின் மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆட்சேர்ப்பு முறைகேடு
545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப 2021 அக்டோபரில் நடத்தப்பட்ட தேர்வில் 54,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்துக் கொண்டனர். இந்த ஆண்டு ஜனவரியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்வர்களில் சிலர் தேர்வு செயல்முறைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறினர்.
இதையும் படியுங்கள்: விமான நிலையங்களில் புதிய ஸ்கேனர்கள்; சிறப்பு அம்சங்கள் என்ன?
50 மதிப்பெண் கொண்ட விரிவான விடையளிக்கும் தாளில் (தாள் 1) குறைவாக மதிப்பெண் எடுத்த பலர், கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருந்த தாள் 2ல் விதிவிலக்காக அதிக மதிப்பெண்கள், அதாவது 150க்கு 130 மதிப்பெண்கள் பெற்றிருப்பது தெரிந்தது. இந்த வேறுபாடு தேர்வுச் செயல்பாட்டில் பரந்த சந்தேகத்தை எழுப்பியது.
பிப்ரவரி முதல் வாரத்தில், தேர்வெழுதிய பணியில் உள்ள இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள், தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக காவல் துறை இயக்குநர் ஜெனரல் பிரவீன் சூட்டிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, மற்ற தேர்வர்கள் விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர்.
காவல்துறை குற்றச்சாட்டுகளை மறுத்தது மற்றும் மார்ச் 10 அன்று, மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா சட்டசபையில் எந்த முறைகேடும் இல்லை என்று கூறினார். மேலும், உள்துறை அமைச்சர் ஆதாரம் கேட்டார், அதைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொள்குறி வகை தேர்வுக்கான ஓ.எம்.ஆர் விடைத்தாளைக் கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கர்நாடக மாநில காவல்துறையின் ஆட்சேர்ப்பு பிரிவு கோரிக்கையை நிராகரித்தது.
பின்னர், கல்யாண கர்நாடகா பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 67 பேரில் ஏழாவது ரேங்க் பெற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான என்.வீரேஷ் என்பவரின் OMR தாள் வெளிவந்தது. அதில், அவர் தாள் 2ல் உள்ள 100 வினாக்களில் 21 கேள்விகளுக்கு (மொத்தம் 150 மதிப்பெண்கள்; ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள்) பதில் அளித்திருந்தும், அவர் 121 மதிப்பெண்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
ஏப்ரல் 7 ஆம் தேதி, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கர்நாடக சி.ஐ.டி. விசாரணை நடத்தும் என்று அறிவித்தார், சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து வீரேஷைக் கைது செய்தது. மேலும் கைதுகள் தொடர்ந்தன இறுதியாக, ஏப்ரல் 29 அன்று, அரசாங்கம் தேர்வு முடிவுகளை திரும்பப் பெற்றதாகவும், விரைவில் புதிய தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார்.
ஐபிஎஸ் அதிகாரி அம்ரித் பால்
கர்நாடக கேடரின் 1995 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அம்ரித் பால், மோசடி நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் மாநில காவல்துறையின் ஆட்சேர்ப்புப் பிரிவின் தலைவராக இருந்தார். அவர் பல்லாரி மற்றும் பிதார் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார், மேலும் சில காலம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பதவிக்கு போட்டியாளராகக் காணப்பட்டார். அங்கு மே மாதம் சி.எச்.பிரதாப் ரெட்டி நியமிக்கப்பட்டார்.
ஏப்ரலில், விசாரணை தீவிரமடைந்த நிலையில், அம்ரித் பால், உள் பாதுகாப்பு பிரிவு (ஐஎஸ்டி) ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார். அவர் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்பட்டு, ஜூலை 4 ஆம் தேதி CID முன் நான்காவது முறையாக ஆஜராகியபோது, அவர் கைது செய்யப்பட்டார், பின்னர் மாநில அரசாங்கத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில் அவர் 35வது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார். கர்நாடக வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதல் ஏ.டி.ஜி.பி அம்ரித் பால் தான்.
விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டவை
விசாரணை முதலில் கலபுர்கி நகரில் உள்ள ஞான ஜோதி ஆங்கில வழிப் பள்ளியை மையமாகக் கொண்டது, அது தேர்வு மையங்களில் ஒன்றாகும். ஓஎம்ஆர் தாள்கள் போலியாக தயாரிக்கப்பட்டு, வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் அறையில் மாற்றம் செய்யப்பட்டது, விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும், முறைகேடுகளை எளிதாக்கும் வகையில் தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. தேர்வானவர்கள் ரூ.35 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை செலுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
"அவர்கள் முன்பணமாக 5-10 லட்சம் ரூபாய் செலுத்தி, தேர்வு மையம் மற்றும் அறையை அறிந்து கொண்டனர். இது ஒரு நம்பிக்கையை வளர்க்கும் பயிற்சியாகும்... தேர்வு நாளில், விண்ணப்பதாரர்கள் முகவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினர், மேலும் OMR தாளை அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், அவர் மீதமுள்ள கட்டணத்தை தேர்வர்களிடம் இருந்து பெற்ற பின்னரே விடைத்தாள்களை ஒப்படைப்பார்,” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
மேலும், ”தேர்வு மையத்திலேயே OMR தாள்கள் கையாளப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்வு மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார். “சில தேர்வு மையங்களில் மாணவர்கள் புளூடூத் கருவிகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
வழக்கில் சந்தேக நபர்கள்
அம்ரித் பால் தேர்வுக்கு பொறுப்பாக இருந்தபோது, ஸ்ட்ராங் ரூமின் பாதுகாவலராக இருந்த டி.எஸ்.பி சாந்த குமார் மற்றொரு முக்கிய குற்றவாளி.
கைது செய்யப்பட்டவர்களில் ஞான ஜோதி பள்ளியை நடத்தும் பா.ஜ.க தலைவர் திவ்யா ஹகரகியும் ஒருவர்; தொகுதி காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ் டி பாட்டீல் மற்றும் அவரது சகோதரர் ருத்ரகவுடா பாட்டீல்; ஹய்யாலி தேசாய், அப்சல்பூரின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்; உதவி பொறியாளர் மஞ்சுநாத் மேலக்குந்தி; கலபுர்கியை சேர்ந்த DySP (கைரேகை பிரிவு) R R ஹோசமணி; கலபுர்கியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திலீப் சாகர்; லிங்கசூர் DySP மல்லிகார்ஜுன் சாலி; கைரேகை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மேஸ்திரி; உதவி கமாண்டன்ட் வைஜநாத் ரேவூர்; மற்றும் தேர்வில் தகுதி பெற்றவர்களில் பலர்.
அரசியல் கட்சிகளின் எதிர்வினைகள்
இந்த ஊழல் தொடர்பாகவும் மற்றும் இதில் பா.ஜ.க தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது. சட்டசபையில் பொய் சொன்னதாக குற்றம் சாட்டி, உள்துறை அமைச்சர் ஞானேந்திரா பதவி விலக வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கே பல செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி, இதற்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த முதல்வர் பசவராஜ் பொம்மை பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு அரசு சுதந்திரம் அளித்துள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இருப்பினும், அரக ஞானேந்திரா உள்துறை அமைச்சராக நீடிப்பார் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.