கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் நாட்டில் பள்ளி கல்வியைப் பொறுத்தவரை சிறந்த மாநிலங்களாக தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஒத்துழைப்புடன், பள்ளிகளின் வெற்றி, பள்ளி கல்வியின் தரம் குறித்த குறியீடு என்ற தலைப்பில் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பள்ளி கல்வியின் தரத்தில் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பெண் பட்டியலில் 20 பெரிய மாநிலங்களில், கேரளா 76.6 சதவீத மதிப்பெண்ணுடன் முதல் இடத்திலும், உத்தரபிரதேசம் 36.4 சதவீத மதிப்பெண்களுடன் கடைசி இடத்திலும் உள்ளது.
தமிழகம் 73.4 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்தது. 8 சிறிய மாநிலங்களில் மணிப்பூர், திரிபுரா மற்றும் கோவா ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.
மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. 7 யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டெல்லி, புதுச்சேரி, டாமன் மற்றும் டையூ, அந்தமான் நிகோபர் தீவு மற்றும் லட்சத்தீவுகள் அடுத்தடுத்த இடங்களில் பட்டியலில் உள்ளன. ஒட்டு மொத்த செயல்திறன் அடிப்படையில் சிறிய மாநிலங்களில் மணிப்பூர் 68.8 சதவீதமும், அருணாச்சலப் பிரதேசம் 24.6 சதவீதமும் பெற்றுள்ளது. இதேபோல் யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் 82.9 சதவீதம் , லட்சத்தீவுகள் 31.9சதவீதம் பெற்றுள்ளது.
2016- 2017ம் ஆண்டின் கற்றல் முடிவுகள், அணுகல் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள், கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்துதல், மாநிலங்களிலிருந்து சுய அறிக்கை தரவு மற்றும் மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் பள்ளி கல்வி தரக் குறியீடு மதிப்பிடப்படுகிறது.
20 பெரிய மாநிலங்களில் 18 மாநிலங்கள் கடந்த 2015-2016 மற்றும் 2016-2017ம் ஆண்டைக்காட்டிலும் தங்களது ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரித்துள்ளன. இவற்றில் அரியானா, அசாம், உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்கள் அதிக அளவில் மேம்பட்டுள்ளன. இவற்றின் சதவீத புள்ளிகள் முறையே 18.5, 16.8, 13.7, 12.4 மற்றும் 10.6 சதவீதமாகும்.
கேரளாவின் சிறந்த செயல்திறன் 76.6 சதவீதமாகவும், உத்தரபிரதேசம் 36.4 சதவீதமாகவும் கொண்டுள்ளது.
3 ஆம் வகுப்பில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மொழி மற்றும் கணிதத்தில் அதிக சராசரி மதிப்பெண்களையும், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் மிகக் குறைந்த மதிப்பெண்களையும் பெற்றுள்ளன.
5 ஆம் வகுப்பைப் பொறுத்தவரை, மொழி மற்றும் கணிதம் இரண்டிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற கர்நாடகா முதலிடத்திலும், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் குறைவாகவும் உள்ளன. 8 ஆம் வகுப்பைப் பொறுத்தவரை, ராஜஸ்தான் மொழி மற்றும் கணிதம் இரண்டிலும் அதிக சராசரி மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவை மிகக் குறைந்த மதிப்பெண்களைக் கொண்டுள்ளன.