பிரபல நடிகை மரணம்: கீட்டோ டயட் ஆபத்தானதா? இதை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

'கீட்டோஜெனிக்' எனும் ஒருவித டயட் முறையைப் பின்பற்றியதன் விளைவால் சிறுநீரகம் செயலிழந்து அவதிப்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

By: October 7, 2020, 9:15:31 AM

Keto Diet Tamil News: பெங்காலி, தெலுங்கு மற்றும் சில ஹிந்தி படங்களில் பணியாற்றியவர் நடிகை மிஷ்டி முகர்ஜி (27). இவர் கடந்த அக்டோபர் 2-ம் தேதி உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் மரணமடைந்தார். இவர் ‘கீட்டோஜெனிக்’ எனும் ஒருவித டயட் முறையைப் பின்பற்றியதன் விளைவால் சிறுநீரகம் செயலிழந்து அவதிப்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

‘கீட்டோஜெனிக்’ அல்லது ‘கீட்டோ’ உணவு என்றால் என்ன? அது எப்போது ஆரோக்கியமற்றதாக மாறும்?

‘கீட்டோஜெனிக்’ உணவு மிகவும் பிரபலமான எடை குறைப்பு டயட்களில் ஒன்று. இது, அதிக கொழுப்பு, மிதமான-புரதம் மற்றும் குறைந்த கார்ப் கொண்ட டயட் பிளான். இந்த கீட்டோசிஸை பின்பற்றுவதன் மூலம் எடை குறைக்க முடியும். அதாவது, வளர்சிதை மாற்றத்தினால் கல்லீரல், உடல் கொழுப்பை எரித்து, உடலுக்குச் சக்தியை வழங்குகிறது. இதனால், உடலுக்கு குளுகோஸின் அணுகல் குறைவாகிறது.

கீட்டோ டயட்டை உருவாக்குவது எது?

சரியான கீட்டோவிற்கு ஒரு நபரின் கலோரிகளில், 90 சதவிகிதம் கொழுப்பிலிருந்தும், 6 சதவிகிதம் புரதத்திலிருந்தும், 4 சதவிகிதம் கார்பிலிருந்தும் கிடைக்கவேண்டும். “வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் வலிப்புத்தாக்கங்களின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதில் பல பாதிப்புகள் உள்ளன. பொதுவாக, பிரபலமான கீட்டோஜெனிக் உணவுகள் சராசரியாக 70-80 சதவிகிதம் கொழுப்பு, 5-10 சதவிகிதம் கார்போஹைட்ரேட் மற்றும் 10-20 சதவிகிதம் புரதம் ஆகியவற்றைப் பரிந்துரைக்கின்றன” என்று EAT.FIT.REPEAT-ன் நிறுவனரும் ஊட்டச்சத்து நிபுணருமான ருச்சி ஷர்மா விளக்குகிறார்.

“கீட்டோஜெனிக் டயட்டில் பல வெர்ஷன்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் கார்ப் நிறைந்த உணவுகளைத் தடை செய்கின்றன. கலோரிகளை சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை மற்றும் இதற்கான விதிகள் மிகவும் எளிமையானவை என்பதால் கீட்டோ உணவைப் பின்பற்றுவது ஆரம்பத்தில் எளிதாகத் தோன்றலாம். ஆனால், இதனைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம்”என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த டயட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் யாவை?

கோழி சம்பந்தப்பட்ட உணவில் முட்டை, கோழி மற்றும் வான்கோழி, சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன் வகைகள், முழு கொழுப்புள்ள பால், நட்ஸ் மற்றும் மக்காடமியா நட்ஸ், பாதாம், அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், வேர்க்கடலை மற்றும் ஆளிவிதை போன்ற விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இயற்கை வேர்க்கடலை, பாதாம் மற்றும் முந்திரி வெண்ணெய் போன்ற நட்ஸ் வெண்ணெய் வகைகளை உட்கொள்ளலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், தேங்காய் வெண்ணெய் மற்றும் எள் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவு வகைகளும் இதில் உள்ளன. அவகேடோ மற்றும் ப்ரோக்கோலி, தக்காளி, காளான், மிளகாய் போன்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகளும் இதில் இருக்கின்றன.

இது உடலை எவ்வாறு பாதிக்கிறது?

“உங்கள் உடலில் உள்ள குளுக்கோஸ் முழுவதும் எரிந்தபிறகு, கார்போஹைட்ரேட்டின் தேவை அதிகரிக்கும்போது, உடல் ஆற்றலுக்கான கொழுப்புகளைக் கல்லீரல் உடைக்கத் தொடங்குகிறது. கீட்டோசிஸ், எல்லா வகையான ஃபாஸ்டிக்கிலும் (Fasting) பொதுவானது. ஆனால் கீட்டோ உணவில், உடலில் கார்ப்ஸ் இல்லாமல் வெளியில் இருந்து நிறையக் கொழுப்புகளை எடுத்துக்கொள்வதனால், அது லேசான நச்சுத்தன்மையாக மாறுகிறது” என்கிறார் புது தில்லி மேக்ஸ் ஹெல்த்கேரில் பணிபுரியும் எண்டோக்ரைனாலாஜிஸ்ட் டாக்டர் அம்ப்ரிஷ் மிதல்.

இது, கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் (குறிப்பாக வைட்டமின் A, D, E, & K) மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாதுகள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். “இவை அத்தியாவசிய உணவுக் குழுக்கள். அவை உணவில் இல்லாதது பல குறைபாடு நோய்களுக்குக் காரணமாக அமையலாம்” என்று ஷர்மா எச்சரிக்கிறார்.

தீவிர கார்போஹைட்ரேட் கட்டுப்பாடு பசி, சோர்வு, குன்றிய மனநிலை, எரிச்சல், மலச்சிக்கல், தலைவலி ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். மேலும், இது சில நாள்களில் தொடங்கி பல வாரங்கள் வரை நீடிக்கும்.

இது சிறுநீரகங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

“புரதத்தின் மிதமான அதிகரிப்பு கூட கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஏற்கெனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, இந்த டயட் சிறுநீரக செயலிழப்புக்கும் வழிவகுக்கும்” என்று ஷர்மா குறிப்பிடுகிறார். எனவே, இந்த டயட்டை பின்பற்றுவதற்கு முன்பு சீரான சிறுநீரக செயல்பாட்டை உடல் கொண்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பது அவசியம்.

“இந்த டயட் சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் மற்றும் சிறுநீரக கற்களையும் ஏற்படுத்தும்” என்று மும்பை ஜாஸ்லோக் மருத்துவமனையின் நெஃப்ராலஜி பிரிவு இயக்குநர் மருத்துவர் ருஷி தேஷ்பாண்டே கூறுகிறார். மேலும் அவர், “ஒருவர் கீட்டோ டயட்டினால் இறந்துபோகிறார் என்றால், அவருக்கு ஏற்கெனவே சிறுநீரகப் பிரச்சனை இருந்திருக்கலாம்” என்றும் குறிப்பிடுகிறார்.

கீட்டோ டயட் எவ்வாறு பிரபலமானது?

1920 மற்றும் 1930-களில் குழந்தை வலிப்பு நோய்க்கான சிகிச்சையாக இந்த கீட்டோ பிரபலமானது. “1970-களில் குறைந்த கார்ப் டயட் மிகப் பிரபலமானது. அட்கின்ஸ் டயட் எனப்படும் இதில் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட், உயர் புரத அளவு என்ற கோட்பாட்டைக்கொண்டது. வணிக ரீதியான வெற்றியாகவும் பின்னாளில் மாறியது. மேலும், குறைந்த கார்ப் உணவுகளைப் பிரபலப்படுத்தத் தொடங்கியபோது எடை இழப்புக்கான ஒரு மூலோபாயமாக கணிசமான கவனத்தை இது பெற்றது” என்கிறார் ஷர்மா.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஹாலே பெர்ரி, கிம் கர்தாஷியன் மற்றும் க்வினெத் பேல்ட்ரோ உள்ளிட்ட பிரபலங்கள் இந்த டயட்டை பின்பற்றியுள்ளனர். இதன் பின்னரே உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. இந்தியாவில், நகைச்சுவை நடிகர் தன்மாய் பட் தன் உடல் எடையைக் குறைக்க இந்த டயட்டை மேற்கொண்டதாக அறிந்த பிறகு இந்தியாவிலும் இந்த டயட் பற்றிய பகிர்தல் அதிகமானது.

இது ஏன் மிகவும் பிரபலமானது?

ஏனெனில், இது உடல் எடையைக் குறைப்பதற்கு விரைவான வழிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த டயட் தொடங்கிய முதல் சில நாட்களிலேயே ஒருவர் குறிப்பிடத்தக்க நீர் எடை குறைவதை உணர முடியும். சராசரி நபருக்கு, இந்த டயட் வேலை செய்வதாகத் தெரியும்” என்கிறார் ஷர்மா.

“இந்த நாட்களில் அனைவரும் விரைவான மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். பலர் வழக்கமான டயட்டுகளில் மாற்றம் ஏதும் இல்லாததால், கடுமையான மற்றொன்றை நாடுகின்றனர். பெரும்பாலான ஃபேட் டயட் (fad diet) போலவே, கீட்டோவிலும் விரைவாக எடையைக் குறைக்கலாம். ஆனால், இணக்கம் மிகக் குறைவாக இருப்பதால் இதனைப் பராமரிப்பது கடினம்” எனக் கூறினார் ஷர்மா.

கீட்டோ டயட்டை யார் தேர்வு செய்ய வேண்டும்?

“மற்ற முறைகளில் எடை இழக்கச் சிரமப்பட்டவர்களுக்கு கீட்டோஜெனிக் டயட் ஓர் விருப்பமாக இருக்கலாம். ஆனால் என் கருத்துப்படி, நீங்கள் கீட்டோ மூலம் எடை குறைக்க விரும்பினால், அந்த யோசனையை இன்றே கைவிடவும். நான்கு முதல் எட்டு வாரத்தில் உடல் எடையைக் குறைக்க ஆசைப்பட்டு, வருகிற வருடம் முழுக்க வேதனையை அனுபவிக்க நேரிடும்” என எச்சரிக்கிறார் ஷர்மா.

“நான் என் நோயாளிகளுக்கு கீட்டோவை பின்பற்ற அறிவுறுத்தமாட்டேன். ஆனால் அவர்கள் வற்புறுத்தினால், அவர்கள் நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை, மூன்று மாதங்களுக்கு முயற்சி செய்யலாம் என்று கூறுவேன். என்றாலும், பெரும்பாலான நோயாளிகளுக்கு இதைத் தக்கவைக்க முடிவதில்லை என்பதையும் நான் கவனித்திருக்கிறேன்”என்கிறார் டாக்டர் மிதல்.

மருத்துவ மேற்பார்வை இல்லாமல் ஒருவர் கீட்டோவை மேற்கொள்ளலாமா?

ஊட்டச்சத்து நிபுணர் அல்லது உணவியல் நிபுணரின் கடுமையான கண்காணிப்பின் கீழ் மட்டுமே டயட்டை பின்பற்றவேண்டும். ஒருவருக்கு என்ன தேவை என்பது சுகாதார வழங்குநர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரால் மதிப்பிட முடியும். எனவே, அவர்களால் முறையான கீட்டோ மற்றும் இணையத்தில் கிடைக்கக்கூடிய வழிமுறைகளைப் பிரித்துச் சரியாக வழிகாட்ட முடியும். “சுத்தமான கீட்டோ முழு ஊட்டச்சத்து உணவுகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் உணவு தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. டர்ட்டி கீட்டோ அல்லது சோம்பேறி கீட்டோ அதிக பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கேஜுடு உணவுகளைக் கொண்டது”என்கிறார் ஷர்மா.

பொதுவான தவறுகள்

கூகுளை அணுகி, டயட்டை நீங்களே தொடங்குவது ஆபத்து. “ஒருவர் கீட்டோசிஸை தொழில்நுட்ப ரீதியாக அடையலாம் மற்றும் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி சில நன்மைகளைப் பெற முடியும் என்றாலும், பல முக்கிய ஊட்டச்சத்துக்களை இழந்து நோயின் அபாயத்தை அதிகரிக்கவும் செய்யும். சத்தான, முழு உணவுகளுக்குப் பதிலாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் C, D , K போன்ற நுண்ணூட்டச்சத்துக்களில் குறைபாடு ஏற்படக்கூடும்” என்று டாக்டர் மிதல் கூறுகிறார். மேலும், சந்தையில் எளிதாகக் கிடைக்கும் கீட்டோ காபி, கீட்டோ சாக்லேட்டுகள் போன்றவை நம்பமுடியாதவை.

ஒருவர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன?

கீட்டோவைத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் தண்ணீரின் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏதேனும் பக்க விளைவுகள் வருமா என்று சோதிக்க அவர்கள் மருத்துவ மேற்பார்வையின் கீழ் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

“தீவிர உணவு முறைகளை எவ்வாறு பின்பற்றுகின்றனர் என்பதைக் கண்காணிக்க வேண்டும். மேலும், விரைவான எடை இழப்பைக் கொடுக்கும் ‘யோ-யோ டயட்’, உயிரிழப்புடன் தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேறொரு பிரபலமான டயட்டில் ஈடுபடுவதற்குப் பதிலாக, நீண்ட காலத்திற்கு நீடித்த ஒரு டயட்டை ஒருவர் பின்பற்றுவது சிறந்தது”என்கிறார் ஷர்மா.

“மிகவும் வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள், இறைச்சிகள், மீன், முழு தானியங்கள், நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் நிறையத் தண்ணீர் நிறைந்த சீரான பதப்படுத்தப்படாத உணவு சிறந்தது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

குறைந்த கார்ப் உணவில் இருந்து கீட்டோ எவ்வாறு வேறுபடுகிறது?

நவீன எடை குறைப்பு உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகளின் அளவு குறைவாக உள்ளன. ஆனால் அவற்றில் சில சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருக்கும் நிலைதான் அவற்றுள் இருக்கும் வித்தியாசம். ஆனால் கீட்டோவில், கார்ப்ஸ் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கிறது. மேலும், இது பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள ஊக்கப்படுத்துகிறது என்று டாக்டர் மிதல் கூறுகிறார்.

“குறைந்த கார்ப் உணவைப் பின்பற்றும்போது கார்ப்ஸ்க்கு பதிலாக, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது பொதுவானது. கார்ப்ஸைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உங்கள் டயட்டிலிருந்து பல அதிக கலோரி உணவுகளை நீக்குகிறீர்கள். உங்கள் ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைக்கவும் எடை இழப்பை ஊக்குவிக்கவும் இந்த காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படக்கூடும்”

குறைந்த கார்ப் உணவு, நீரிழிவு நோயாளிகளுக்கு எடை குறைப்பு, மேம்பட்ட ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் இருதய ஆபத்து காரணிகள் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், கீட்டோ டயட்டைப் பின்பற்றும்போது, ஊட்டச்சத்து கீட்டோசிஸை அடைவதே குறிக்கோளாக இருக்கிறது. “புரதம் உட்கொள்வதை மிதமாக வைத்திருந்து, கொழுப்பு உட்கொள்வதை வெகுவாக அதிகரித்து, ஒரு நாளைக்கு 50 கிராமுக்கும் குறைவான கார்ப்ஸ்களை உட்கொள்வதன் மூலம் இது அடையப்படுகிறது” என்று ஷர்மா விளக்குகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Keto diet explained in tamil mishti mukherjee death

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X