Advertisment

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா; சிறப்பு ஏற்பாடுகள் என்ன?

புதிய மன்னர் 3 ஆம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு மே 6 ஆம் தேதி ஏன் தேர்வு செய்யப்பட்டது? முடிசூட்டு விழா கச்சேரியில் யார் பாடுவார்கள்? இளவரசர் ஹாரி கலந்துக் கொள்வாரா? மதிய உணவு என்ன?

author-image
WebDesk
May 03, 2023 18:56 IST
New Update
king charles coronation

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா (ராய்ட்டர்ஸ்/ ஹென்றி நிக்கோலஸ்)

Deutsche Welle

Advertisment

கட்டுரையாளர்: கிறிஸ்டின் லெஹ்னென்

லண்டனில் பிரிட்டிஷ் அரச முடிசூட்டு விழாவின் வரலாறு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த விழாவிற்கு பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு பல சடங்குகள் உருவாக்கப்பட்டன, மே 6 அன்று நடைபெறும் 3 ஆம் சார்லஸ் (Charles III) மற்றும் அவரது மனைவி கமிலாவின் முடிசூட்டு விழாவின் போது, இதுபோன்ற பல சடங்குகள் இடம்பெற உள்ளன.

அரச தலைக்கவசம் (கிரீடம்) போன்ற சில சடங்குகள் விழாவைப் போலவே பழமையானவை. சிறந்த உணவு வகைகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற பிற அம்சங்கள், "முடிசூட்டு விழாவின்” நவீன சேர்க்கைகள்.

இதையும் படியுங்கள்: ’தி கேரளா ஸ்டோரி’ படத்தின் கூற்றுகள் எவ்வளவு துல்லியமானவை?

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு முக்கியமான விஷயங்கள் இங்கே உள்ளன.

முடிசூட்டு விழா ஏன் மே 6 அன்று நடைபெறுகிறது?

அரச குடும்பமும் பிரிட்டிஷ் அரசாங்கமும் சேர்ந்து விழாவிற்கு பொருத்தமானதாகக் கருதப்படும் தேதியைத் தேர்ந்தெடுத்தனர், ஆனால் மே 6 தேதிக்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இருந்தபோதிலும், இந்த தேதி பல அரச குடும்ப மைல்கற்களை எவ்வாறு குறிக்கிறது என்பதை பிரிட்டிஷ் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2019 இல் பிறந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோரின் மூத்த மகனான சார்லஸின் பேரன் ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்ஸரின் பிறந்தநாள் மே 6 ஆகும். மேலும் இது 1910 ஆம் ஆண்டு அவரது கொள்ளு தாத்தா, மன்னர் ஏழாம் எட்வர்ட் இறந்த நினைவுநாள் ஆகும்.

அவரது பேரனின் பிறந்தநாளில் விழாவை நடத்துவது சிறந்த யோசனையா? ஒருவேளை இல்லை. முடிசூட்டு விழாவின் போது குழந்தைகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கியிருக்கும் மருமகள் மேகன் மார்க்லே, தனது மகனுக்கு மே 6 ஆம் தேதி நான்கு வயதாகும்போது அவருக்கு கூடுதல் சிறப்பு பிறந்தநாள் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வில்லியம் தி கான்குவரர் 1066 இல் கிறிஸ்துமஸ் தினத்தன்று முடிசூட்டப்பட்டார். அப்போது டிசம்பர் 25 ஆம் தேதி நல்ல நேரமாகக் கருதப்பட்டது, ஏனெனில் மன்னர்கள் பூமியில் கடவுளின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டனர்.

3 ஆம் சார்லஸ் மதம் சார்ந்த ஒரு சிறப்பு தேதியை விரும்பினார், ஆனால் அது நடக்கவில்லை. ஜூன் 2, 1953 இல் முடிசூட்டப்பட்ட அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் கோடையில் முடிசூட்டப்பட்டார்.

முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடப்பது ஏன்?

விழா நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுப்பது பற்றி மறைமுகமாக எந்த விவாதமும் இல்லை: வில்லியம் தி கான்குவரர் தனது இராணுவத்துடன் இங்கிலாந்தை வென்ற 1066 முதல் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டிஷ் ராணிகள் மற்றும் மன்னர்கள் முடிசூட்டப்பட்டனர். அன்றிலிருந்து இதுவரை 38 முடிசூட்டு விழாக்கள் இந்தக் கதீட்ரலில் நடந்துள்ளன.

எந்த கிரீடம் பயன்படுத்தப்படும்?

அரச குடும்பத்திற்கு பல கிரீடங்கள் உள்ளன. முடிசூட்டு பாரம்பரியத்தை பின்பற்றி, செயின்ட் எட்வர்ட் கிரீடத்தை மன்னர் சார்லஸ் அணிவார், இது பிரிட்டிஷ் அரச கிரீடங்களில் மிகவும் பழமையானது மற்றும் கிரவுன் ஜூவல்ஸ் என்று அழைக்கப்படுவதில் முக்கிய இடம் பிடித்துள்ளது ஆகும்.

இது 1661 இல் தயாரிக்கப்பட்டது மற்றும் முதன்முதலில் இரண்டாம் சார்லஸ் மன்னரால் அணியப்பட்டது. 1649 மற்றும் 1660 க்கு இடையில் ஆலிவர் குரோம்வெல் தலைமையில் இங்கிலாந்து குடியரசாக மாறியபோது பல அரச நகைகள் விற்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டதால் முந்தைய இடைக்கால கிரீடம் உருக்கப்பட்டது.

முடியாட்சியை மீட்டெடுத்த பிறகு, ஒரு புதிய கிரீடம் உருவாக்கப்பட்டது, அது அதன் முன்னோடியை ஒத்திருந்தது.

ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் படி, கிரீடம் சுமார் இரண்டு கிலோகிராம் எடை கொண்டது, தூய தங்கத்தால் ஆனது மற்றும் மாணிக்கங்கள், செவ்வந்திக்கல் (நீலம் கலந்த சிவப்பு நிற மணிக் கல்) மற்றும் சபையர்களால் (நீல நிற மணிக் கல்) அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் $40 மில்லியன் (€36 மில்லியன்) இருக்கும்.

1042 முதல் 1066 இல் இறக்கும் வரை ஆட்சி செய்த இங்கிலாந்தின் கடைசி ஆங்கிலோ-சாக்சன் அரசரான செயின்ட் எட்வர்டின் நினைவாக இந்த கிரீடம் பெயரிடப்பட்டது.

மேலும் ராணிக்கு எந்த கிரீடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது?

மே 6 ஆம் தேதி, தற்போது பட்டத்து ராணியாக இருக்கும் கமிலா, ராணி கமிலாவாக மாறுவார்.

1911 ஆம் ஆண்டில் 5 ஆம் ஜார்ஜ் மன்னரின் மனைவி ராணி மேரியின் முடிசூட்டு விழாவிற்காக செய்யப்பட்ட கிரீடத்தை கமிலா அணிந்திருப்பார். தி கார்டியனின் கூற்றுப்படி, 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஒரு பட்டத்து ராணியின் கிரீடம் முடிசூட்டு விழாவிற்காக "மீண்டும் பயன்படுத்தப்படுவது" இதுவே முதல் முறையாகும்.

விழாவிற்கு முன்னதாக, கிரீடத்தில் இருந்து ஒரு முக்கியமான ரத்தினம் அகற்றப்படும்: அது கோஹினூர் வைரம். இந்த வைரம் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் வசம் வந்ததால் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நான்கு நாடுகள் கிரேட் பிரிட்டனிடமிருந்து வைரத்தை மீட்க முயற்சி செய்கின்றன.

கோஹினூர் வைரத்திற்குப் பதிலாக, கமிலாவின் கிரீடத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் விருப்பமான சில கற்கள் இடம்பெறும், இது மறைந்த மகாராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இடம்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

நினைவு பொருட்கள் என்னென்ன?

பொருத்தமான வர்த்தகம் இல்லாமல் எந்த அரச விழாவும் நடைபெறாது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை நினைவுகூரும் வகையில், துணிக்குட்டை, சிறப்பு நாணயங்கள் அல்லது குளிர்சாதன பெட்டியில் ஒட்டும் காந்தங்கள் என அரச குடும்பத்தின் ரசிகர்களுக்கு சேகரிக்கக்கூடிய நினைவுப் பொருட்களின் முழு வரிசையும் கிடைக்கும். புதிய மன்னரின் முகம் பிரிட்டிஷ் பிஸ்கட் டின்களையும் அலங்கரிக்கிறது.

முடிசூட்டு விழாவைக் குறிக்கும் நினைவுப் பொருட்கள் குறைவாக இருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. அதுவும் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லேயின் திருமணத்தின் நினைவுப் பொருட்களை விட குறைவாக உள்ளதாக கூறுகின்றன.

அதிகாரப்பூர்வ அரச வணிகத்திற்கு அப்பால், நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, ஒரு ரசிகர் தானியப் பெட்டிகளுக்கான சிறப்பு வடிவமைப்பை உருவாக்கினார். அதாவது, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் அறுவை சிகிச்சை நிபுணரான இம்ரான் ஹக் வடிவமைத்த “கொரோனேஷன் ஃப்ளேக்ஸ்” பெட்டியின் பின்புறம் மாஸ்க் அணிந்துள்ள சார்லஸின் முகம் இடம்பெற்றுள்ளது.

மதிய உணவுக்கு என்ன?

முடிசூட்டு விழா வார இறுதியில் "முடிசூட்டு விழா பெரு விருந்து" நடைபெற உள்ளது. இது ஒரு அரசு விருந்து அல்ல, மாறாக சமூகங்கள், கிளப்புகள், நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் அண்டை வீட்டாரை தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட "பெரு விருந்து" மூலம் தங்கள் மன்னரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாட அழைக்கும் முயற்சியாகும். பாரம்பரியமாக, தொண்டு நோக்கங்களுக்காக பணம் சேகரிக்கப்படுகிறது.

கிங் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா ஆகியோரும் "பெரிய மதிய உணவு விருந்துக்கு" தங்கள் சார்பாக உணவு வகைகளின் பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். "கொரோனேஷன் குய்ச்" (பிரெஞ்ச் பச்சடி) ஒரு வசதியான உணவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, இது மலிவானது மற்றும் குளிர்ச்சியாகவும் சூடாகவும் பரிமாறப்படலாம். அரச தம்பதியினர் கிரீன் சாலட் மற்றும் வேகவைத்த புதிய உருளைக்கிழங்கை குய்ச் உடன் சாப்பிட பரிந்துரைக்கின்றனர், இது "கீரையின் மென்மையான சுவைகள், அதிக பீன்ஸ் மற்றும் புதிய டாராகன்" ஆகியவற்றால் செய்யப்படுவது.

ஒரு கீரை குய்ச் போதுமானதாக இல்லை என்று நினைப்பவர்களுக்கு, இன்னும் மூன்று பரிந்துரைகள் உள்ளன: அமெரிக்க-சீன பிரபல சமையல்காரர் கென் ஹோமின் கைவண்ணத்தில் உருவாகும் ஆசிய ஆட்டு இறைச்சி, பிரிட்டிஷ் பேக்கரும் கட்டுரையாளருமான நதியா ஹுசைனின் “கொரோனேஷன் கத்தரிக்காய்” மற்றும் ஒரு லண்டன் நட்சத்திர சமையல்காரர் ஆடம் ஹேண்ட்லிங்கின் சிறப்பான இனிப்பு.

பாரம்பரிய முடிசூட்டு விழா கச்சேரியை யார் நிகழ்த்துகிறார்கள்?

முடிசூட்டு விழாவுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை விண்ட்சர் கோட்டையில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறும். லியோனல் ரிச்சி, கேட்டி பெர்ரி மற்றும் வெல்ஷ் பாஸ்-பாரிடோன் பிரைன் டெர்ஃபெலுடன் டூயட் பாடும் ஓபரா பாடகர் ஆண்ட்ரியா போசெல்லி போன்ற பெரிய நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் தங்கள் பெர்பாமன்ஸை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கில பாப் குழுவான டேக் தட், பாடகர்-பாடலாசிரியர் ஃப்ரேயா ரைடிங்ஸ் மற்றும் ஹிப்-ஹாப் கிளாசிக்கல் பியானோ கலைஞரான அலெக்சிஸ் ஃபிரெஞ்ச் ஆகியோரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் முடிசூட்டு கச்சேரியில் தங்கள் பெர்பாமன்ஸை நிகழ்த்துவார்கள்.

"இயேசு கிறிஸ்து சூப்பர் ஸ்டார்," "எவிடா" அல்லது "கேட்ஸ்" போன்ற படைப்புகளுக்கு மிகவும் பிரபலமான இசை ஜாம்பவான் ஆண்ட்ரூ லாயிட் வெப்பரின் புதிய இசையமைப்பு இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலிக்கு, இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பர் ஏற்கனவே அரச குடும்பத்திற்காக பெர்பாமன்ஸை நிகழ்த்தியிருந்தார்.

பெரிய சூப்பர்ஸ்டார்களைத் தவிர, நாடு முழுவதிலுமிருந்து உள்ளூர் பாடகர்களை ஒன்றிணைத்து, மேடையில் "கொரோனேஷன் கொயர்" என்று அழைக்கப்படும் கச்சேரி நிகழ்த்தப்படும். காமன்வெல்த் முழுவதிலும் உள்ள பாடகர்களை ஒன்றிணைக்கும் மெய்நிகர் பாடகர் குழுவும் அவர்களுடன் இணைவார்கள்.

ஹாரி கலந்துக் கொள்கிறாரா?

பக்கிங்ஹாம் அரண்மனையுடன் சண்டையிட்ட பிறகு, சார்லஸ் மன்னரின் இளைய மகன் இளவரசர் ஹாரி ஒரு நல்ல வரவேற்பை எதிர்பார்க்கிறார். அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறிய அவர், தற்போது முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், அவர் விழாவின் போது மற்ற அரச குடும்பத்தைப் போல முன் வரிசையில் உட்கார மாட்டார், மேலும் பின்னால் உட்கார வேண்டும்.

அடுத்த நாள் கச்சேரியில் கலந்து கொள்வாரா என்பதை ஹாரி உறுதிப்படுத்தவில்லை. மகன் ஆர்ச்சியின் பிறந்தநாளை தனது மனைவி மற்றும் மகளுடன் கொண்டாட அவர் கூடிய விரைவில் கலிபோர்னியாவிற்கு தனது குடும்பத்தினருடன் திரும்புவார் என்று நம்பப்படுகிறது.

இந்த கட்டுரை முதலில் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment