இந்த ஆண்டு, சீனாவின் 19வது விண்வெளி பயணமாக, விண்ணில் ஏவப்பட்ட குய்சோ -11 ராக்கெட் தோல்வியில் முடிந்தது என்று அரசுக்கு சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஏவப்பட்ட ராக்கெட் சுமந்த சென்ற இரண்டு செயற்கைக்கோள்களும் செயலிழந்தன என்று ஸ்பேஸ் நியூஸ் தெரிவித்தது.
வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் இருந்து குய்சோ -11 ராக்கெட் ஏவப்பட்டது. விண்ணில் பறந்து செல்லும் போது, ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளறு காரணாமாக வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் தற்போது தீவிர ஆய்வில் இறங்கியுள்ளனர்.
குய்சோ -11 ராக்கெட்:
சீன மொழியில் “வேகமான கப்பல்” என்று பொருள்படும் குய்சோ, எக்ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டது. 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட், 2018ம் ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.
KZ-11 என்றும் அழைக்கப்படும் இந்த ராக்கெட் 70.8 டன் எடையைக் கொண்டது. மேலும், பூமியில் இருந்து 1200 கிலோ மீட்டர் தூரத்திற்குள் (Lower Earth Orbit) சூரிய-ஒத்திசைவு வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் வகையில் ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளதக சிஜிடிஎன் தெரிவித்தது.
முதலாவது செயற்கைக்கோள், வணிக ரீதியில் புவியியல் பேரழிவுகள் முன்கூட்டியே கண்டறிந்து, எச்சரிக்கைகள் வழங்கும் ரிமோட் சென்சிங் செயற்கைகோளாக செயல்படும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு இயற்கை வள ஆய்வுக்குத் தேவையான தகவல்களையும் வழங்கும். இரண்டாவது செயற்கைக்கோள், பூமியை சுற்றும் வகையில் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட இருந்தது.
விண்வெளி செயல்பாடுகளில் தனியார் துறை:
வணீக ரீதியான விண்வெளி செயல்பாடுகள் தற்போது சீனாவில் வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது. 2014 ஆம் ஆண்டில், விண்வெளி செயல்பாடுகளில் தனியார் துறை பங்களிப்புக்கு சீனா அரசு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்பின், உருவான எக்ஸ்பேஸ், ஐஸ்பேஸ், லேண்ட்ஸ்பேஸ் போன்ற நிறுவனங்களால் சீனாவின் விண்வெளித் துறையின் உள்கட்டமைப்புகள் மேம்பட்டதாக நிபுணர் ஒருவரின் கருத்தை ஸ்பேஸ்நியூஸ் நாளிதழ் வெளியிட்டது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, சீனாவிலிருந்து 19 விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் மூன்று தோல்வியுற்றன (குய்சோ -11 ராக்கெட் உட்பட ) என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil