Advertisment

வழிபாட்டுத் தலங்கள் சட்டம்: உ.பி சம்பால் மசூதி வழக்கில் சட்டச் சிக்கல்கள் என்ன?

உத்தரப் பிரதேசம், சம்பால் மசூதி தொடர்பான மனு, வாரணாசியின் ஞானவாபி மசூதி மற்றும் மதுராவின் ஷாஹி இத்கா வழக்குகளில் தாக்கல் மனுக்களை ஒத்ததாகும். இந்த விவகாரங்களின் மையமாக வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-ன் விளக்கம் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sambhal majid

உத்தரப் பிரதேசம், சம்பாலில் உள்ள ஜமா மஸ்ஜித் முகலாய பேரரசர் பாபரால் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். (Express photo by Gajendra Yadav)

உத்தரப் பிரதேசம், சம்பாலில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் ஷாஹி ஜமா மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பால் நகரம் வன்முறையால் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த வன்முறையில் குறைந்தபட்சம் 4 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Explained: Places of Worship Act, and the legal issues in the Sambhal mosque case

சம்பாலின் ஜமா மஸ்ஜித் இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்பட்ட மனுவில் நீதிமன்றத்தின் உத்தரவு வந்தது. இது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தாரில் உள்ள கமல்-மௌலா மசூதி ஆகிய வழக்குகளில் கூறப்பட்ட கருத்துகளை ஒத்தது என்று கூறியது.

இந்த அனைத்து சர்ச்சைகளிலும் உள்ள உரிமைகோரல்கள் அடிப்படையில் வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்ற முயல்கின்றன, இது வழிபாட்டுத் தலச் சட்டம் 1991-ன்படி தடை செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு என்ன கூறியது? போராட்டத்தைத் தூண்டியது ஏன்?

நவம்பர் 19-ம் தேதி சந்தௌசியில் உள்ள சம்பாலின் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) ஆதித்யா சிங், வழக்கறிஞர் ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் உள்ளூர் மஹந்த் உட்பட மற்றவர்கள் மசூதியை அணுகுவதற்கான உரிமையைக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை அனுமதித்தார். 1526-ம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரால் அங்கு இருந்த இந்துக் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, மசூதியில் முதற்கட்ட ஆய்வை மேற்கொள்ள வழக்கறிஞர் ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே நாளில், முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. நவம்பர் 29-ம் தேதிக்குள் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

publive-image
ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலைத் தொடர்ந்து உ.பி.யின் சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித் அருகே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.(Express photo by Gajendra Yadav)

 

நவம்பர் 24-ம் தேதி இரண்டாவது கட்ட ஆய்வு நடந்தது. இது சம்பாலில் போராட்டங்கள் வெடிக்க வழிவகுத்தது, பின்னர் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

ஆய்வுக்காக மசூதி நிர்வாகக் குழுவிடம் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், நவம்பர் 29-ம் தேதிக்குள் ஆய்வு அறிக்கையை கோரிய நீதிமன்றத்தின் உத்தரவு, இரு தரப்பு வாதங்களையும் கேட்காமல் ஒரு தரப்புக்கு சார்பாக நிறைவேற்றப்பட்டது.

சம்பாலின் ஜமா மஸ்ஜித் ஒரு "பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்", இது டிசம்பர் 22, 1920-ல் பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் 1904-ன் கீழ் அறிவிக்கப்பட்டது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும், இந்திய தொல்லியல் துறையின் இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்களில் மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியலில் உள்ளது.

மனுதாரர்களின் கோரிக்கை குறித்து சட்டம் கூறுவது என்ன?

சர்ச்சைக்குரிய சொத்தின் உரிமையைத் தீர்மானிக்க நீதிமன்றத்தில் தொடர்ப்படும் வழக்கு என்பது மனுதாரர்கள் தாக்கல் செய்யும் ஒரு சிவில் வழக்காகும். சிவில் வழக்கில், மனுதாரர்கள் அளிக்கும் குறைகள் முதன்மையாக ஏற்கப்பட வேண்டும். சிவில் நடைமுறைச் சட்டம் ஆரம்ப கட்டத்தில் சிவில் வழக்கில் செய்யப்பட்ட உரிமைகோரல்களை கடுமையான ஆய்வுக்கு தடை செய்கிறது. மனு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் மட்டுமே ஆதாரங்களை மேசைக்கு கொண்டு வருமாறு மனுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வழிபாட்டுத் தலத்தைப் பொறுத்தவரை, அத்தகைய வழக்கு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஞானவாபி மற்றும் மதுரா ஆகிய இரண்டு வழக்குகளிலும், மாவட்ட நீதிமன்றங்கள் இந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த சிவில் வழக்குகளை "பராமரிக்கக்கூடியவை" என்று ஏற்றுக்கொண்டன, அதாவது 1991-ம் ஆண்டு சட்டம் இருந்தபோதிலும் அவை நிர்ணயம் செய்வதற்கான செல்லுபடியாகும் வழக்குகள். இந்த வழக்குகள் 1991 சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என்ற அடிப்படையில் நீதிமன்றங்கள்  தீர்ப்பளித்துள்ளன.

இரண்டாவது ஆவுக்கு மசூதியில் குழுவினர் சென்றபோது ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். மொராதாபாத் பிரதேச ஆணையர் அவுஞ்சனேய குமார் சிங் கூறுகையில், மோதலின் போது உயிரிழந்த  மூவருக்கும் துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 கூறுவது என்ன? 

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இருந்த எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையும் பேணப்பட வேண்டும் என்று கூறுகிறது.

அதை இந்த நீண்ட தலைப்பு விவரிக்கிறது “எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதைத் தடைசெய்யும் சட்டம் மற்றும் 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இருந்தபடி எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையைப் பராமரிக்கவும், அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களுக்கும் ஒரு சட்டம் அகும்.” என்று கூறுகிறது.

இந்த சட்டத்தின் பிரிவு 3, எந்தவொரு மதப் பிரிவின் வழிபாட்டுத் தலத்தையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, வெவ்வேறு மதப் பிரிவின் வழிபாட்டுத் தலமாக மாற்றுவதைத் தடை செய்கிறது - அல்லது அதே சமயப் பிரிவின் வேறு பிரிவாகக்கூட மாற்றுவதைத் தடை செய்கிறது.

காங்கிரஸின் 1991 தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்த இந்த சட்டம், ஒரு வழிபாட்டுத் தலத்தின் வரலாற்று "மாற்றம்" தொடர்பாக எழும் அனைத்து சர்ச்சைகளையும் கிடப்பில் போடும் வகையில் இருந்தது. இதை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது, ​​அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், "இந்த மசோதாவின் அமலாக்கம் வகுப்புவாத நல்லுறவு மற்றும் நல்லெண்ணத்தை மீட்டெடுக்க உதவும்" என்று கூறினார்.

இந்த சட்டம் பாபர் மசூதி-ராம ஜென்மபூமி சர்ச்சையின் பின்னணியில் வந்தாலும், இந்த சட்டம் இயற்றப்பட்டபோது சர்ச்சை ஏற்கனவே துணை நீதியாக இருந்ததால் இது குறிப்பாக அதன் வரம்புக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

இந்த உரிமை கோரல் வழக்குகளை நீதிமன்றங்கள் எப்படி அனுமதித்தன?

1991-ம் ஆண்டு சட்டத்திற்கு எதிரான அரசியலமைப்பு சவால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த உரிமை வழக்குகள் அல்லது வாரணாசி மற்றும் மதுராவில் வழிபாட்டு உரிமை கோருதல் உள்ளிட்ட உரிமை கோரும் வழக்குகள் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 தனித்தனி மனுக்கள் உள்ளன. செப்டம்பர் 2022-ல், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு, இரண்டு வாரங்களுக்குள் தனது நிலைப்பாட்டை பதிலளிக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசு இன்னும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை.

ஆனால், ஞானவாபி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தனியான விசாரணை, மாவட்ட நீதிமன்றங்களுக்கு இத்தகைய மனுக்களை அனுமதிக்க அதிக இடங்களை அனுமதித்துள்ளது.

மே 2022-ல், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 1991 சட்டத்தின் கீழ் மத வழிபாட்டு தலத்தின் தன்மையை மாற்றுவது தடைசெய்யப்பட்டாலும், "ஒரு இடத்தின் மதத் தன்மையைக் கண்டறிவது, ஒரு செயல்முறை கருவியாக, பிரிவுகள் 3 மற்றும் 4 (சட்டத்தின்) விதிகளை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை..." என்று கூறினார்.

இதன் அடிப்படையில் 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இருந்த வழிபாட்டுத் தலத்தின் தன்மை என்ன என்பது பற்றிய விசாரணையை அனுமதிக்கலாம், அந்த இயல்பை பின்னர் மாற்ற முடியாவிட்டாலும் கூட அனுமதிக்கலாம் என்று கூறியது.

மதுரா மற்றும் ஞானவாபி ஆகிய இரண்டு வழக்குகளிலும், மசூதி தரப்பு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் இந்த விளக்கத்தை சவால் செய்துள்ளது. 1991-ம் ஆண்டு சட்டம் அத்தகைய மனுவைத் தாக்கல் செய்வதைத் தடுக்கிறதா அல்லது வழிபாட்டுத் தன்மையின் இறுதி மாற்றத்தைக் கூடத் தடுக்கிறதா என்ற இந்த ஆரம்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இறுதி வாதங்களை உச்ச நீதிமன்றம் இன்னும் விசாரிக்கவில்லை.

சம்பால் வழக்கில், விஷயங்கள் மிக வேகமாக நகர்ந்துள்ளன. சிவில் வழக்கின் பராமரிப்பு குறித்து மாவட்ட நீதிமன்றம் இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்து தரப்புக்கு தக்க உரிமை உள்ளது என்ற ஆரம்பக் கண்டுபிடிப்பு வருவதற்கு முன், ஆய்வு உத்தரவு முதலில் வந்தது. இந்த உத்தரவை  எதிர்தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மனுதாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கும் முன்பே அமல்படுத்தப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment