மின்னலைப் பற்றி தெரிந்துக் கொள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?

Lightning: மேகங்களின் அடிப்பகுதி பொதுவாக பூமியின் மேற்பரப்பில் இருந்து 1-2 கி.மீ உயரத்தில் உள்ளன.

By: July 25, 2019, 4:05:33 PM

பீகாரில் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கியதால் 29 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக ஜமுய் மாவட்டத்தில் 8 பேர் பலியானார்கள். இதே போல, ஜூலை 20 ஆம் தேதி மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

நகர்ப்புறங்களில் சில நேரங்களில் அறியப்படுவதைவிட பொதுவாக இது அதிக அளவில் நடக்கிறது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்குதலால் சராசரியாக 2,000 முதல் 2,500 பேர் வரை உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகிறது. இயற்கை காரணங்களால் நிகழும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் மின்னல் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று நாட்களில், மின்னல் தாக்கியதில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்தி வெளியானது. இந்த எண்ணிக்கை விஞ்ஞானிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

நாட்டில் வளிமண்டல சூழல் ஆய்வுகளில் மின்னல் பற்றி மிகக் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.எம்) ஒரு குழு விஞ்ஞானிகள், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் குறித்து முழுநேரமாக ஆய்வு செய்கிறார்கள்.

இந்தியவில் மின்னல் தாக்குதல் நிகழ்வுகள் கண்காணிக்கப்படவில்லை. மேலும், விஞ்ஞானிகள் இதைப்பற்றி ஆய்வு செய்வதற்கு போதுமான தரவுகளும் இல்லை. நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களைப் போல, மின்னல் தாக்குதல் நிகழ்வுக்கு எதிரான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அடிக்கடி பெரிய அளவில் விளம்பரங்களை பெறுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பல ஆயிரம் இடியுடன் கூடிய மழை பெய்யும் நிகழ்வு நடக்கின்றன. ஒவ்வொன்றும் பலவற்றை உள்ளடக்கியது – சில நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நிகழ்கின்றன. ஐ.ஐ.டி.எம்-இன் டாக்டர் சுனில் பவார் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பாக இமயமலை அடிவாரத்திற்கு அருகில் மின்னல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிடுகிறார்.

மின்னல் எப்படி தாக்குகிறது?

மின்னல் என்பது மிக வேகமானதும் மிகப் பெரியதும் ஆகும். அது வளி மண்டலத்தில் மின்சாரத்தை வெளியேற்றுகிறது. அவற்றில் சில பூமியின் மேற்பரைப்பை நோக்கி பாய்கின்றன. இந்த மின்சார வெளியேற்றம் 10 – 12 கிலோ மீட்டர் உயர்த்தில் இருக்கிற மாபெரும் ஈரப்பதத்துடன் நகரும் மேகங்களிலிருந்து உருவாகின்றன. இந்த மேகங்களின் அடிப்பகுதி பொதுவாக பூமியின் மேற்பரப்பில் இருந்து 1-2 கி.மீ உயரத்தில் உள்ளன. அதே நேரத்தில் அவற்றின் மேற்புறம் 12-13 கி.மீ உயரத்தில் இருக்கின்றன. இந்த மேகங்களின் மேற்புறத்தின் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கின்றன.

இந்த மேகங்களில் நீராவி மேல்நோக்கி நகரும்போது வெப்பநிலை வீழ்ச்சியடைவதன் காரணமாக அது ஒடுங்குகிறது. இந்த செயல்பாட்டில் வெப்பம் உருவாகிறது. இது நீரின் மூலக்கூறுகளை மேலும், மேலே தள்ளும். அவை ஜீரோ டிகிரி செல்சியஸுக்கு கீழே வெப்பநிலை செல்லும்போது, நீர் துளிகள் சிறிய பணி கட்டிகளாக மாறுகின்றன. அவை தொடர்ந்து மேலே சென்று நிறைய சேருகின்றன. பின்னர், அவை கனமானதும் பூமி மீது விழத் தொடங்குகின்றன.

ஒரே நேரத்தில், சிறிய பனி கட்டிகள் மேலே நகருவதும் பெரிய பனி கட்டிகள் கீழே வருவதும் என்ற செயல்பாடு ஒரு அமைப்புக்கு இட்டுச்செல்கின்றன.

அவற்றின் மோதல்களைத் தொடர்ந்து எலக்ட்ரான்கள் வெளியாவதை தூண்டுகின்றன. இது மின்சாரத் தீப்பொறியை ஒத்திருக்கும். இந்த எலட்ரான்களின் வேகமான நகர்வு மேலும் அதிக மோதல்களையும் அதிக எலட்ரான்களையும் வெளியிடுவதால் இது ஒரு தொடர் சங்கிலி எதிர்வினையை ஏற்படுத்துகிறது.

இந்த செயல்முறை மேகத்தின் மேல் அடுக்கு நேர்மறையாக மின் ஏற்றம் செய்யப்படும் சூழ்நிலையில் விளைகிறது. அதே நேரத்தில் நடு அடுக்கில் எதிர்மறையாக மின் ஏற்றம் செய்யப்படுகிறது. இந்த இரண்டு அடுக்குகளுக்கும் இடையேயான மின் திறன் மிகப் பெரியது. அது நூறு கோடி வோல்ட்ஸ் முதல் 1000 கோடி வோல்ட்ஸ் வரை இருக்கும். மிகக் குறைவான நேரத்தில் ஒரு லட்சம் யூனிட் முதல் 10 லட்சம் ஆம்பியர் யூனிட் மின்னோட்டம் அடுக்குகளுக்கு இடையில் பாயத் தொடங்குகின்றன.

இதனால், ஒரு பெரிய அளவிலான வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், இது மேகத்தின் இரண்டு அடுக்களுக்கு இடையே காற்றை நெடுவரிசையில் சூடாக்க வழிவகுக்கிறது. மின்னலின் போது இந்த வெப்பம் நெடுவரிசை காற்றுக்கு சிவப்பு நிற தோற்றத்தை அளிக்கிறது. வெப்பமான மின்னலின் நெடுவரிசை காற்று விரிவடையும்போது அது அதிர்ச்சி அலைகளை உருவாக்குகிறது. இதன் விளைவாக இடி முழக்கம் ஏற்படுகிறது.

மேகத்திலிருந்து பூமிக்கு எப்படி மின்னோட்டம் பாய்கிறது?

பூமி ஒரு நல்ல மின் கடத்தி என்றாலும், அதனுடைய மின் தன்மை நடுநிலையானது. இருப்பினும், மேகத்தின் நடு அடுக்குடன் ஒப்பிடுகையில், இது நேர்மறையாக மின் ஏற்றம் செய்யப்படுகிறது. இதன் விளைவாக மின்னோட்டத்தில் சுமார் 15% முதல் 20% வரை பூமியை நோக்கி இயக்கப்படுகிறது. இந்த மின்னோட்டம்தான் பூமியில் உயிரினங்களுக்கும் கட்டடங்களுக்கும் சேதத்தை விளைவிக்கின்றன.

அதனால், மரங்கள், கோபுரங்கள் அல்லது கட்டிடங்கள் போன்ற உயரமான பொருள்களை மின்னல் தாக்குவதற்கு சாத்தியங்கள் உள்ளன. அவைகள் பூமியின் மேற்பரப்பில் 80 மீட்டர் முதல் 100 மீட்டர் உயரம் வரை இருந்தால் மின்னல் இந்த உயரமான பொருள்களை நோக்கி பாயத் திரும்புகின்றன. இது காற்று ஒரு மிகக் குறைந்த மின்கடத்தி என்பதால் நடக்கின்றன. மேலும் காற்று வழியாக பயணிக்கும் எலட்ரான்கள் ஒரு நல்ல மின் கடத்தியாகவும் மற்றும் விரைவான பாதையில் பூமியின் மேற்பரப்பில் நேர்மறையாக மின்னேற்றம் செய்யப்பட்டு பாய்கின்றன.

மின்னலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மின்னல் மிக அரிதாகவே மக்களை நேராடியாக தாக்குகிறது. அதுபோல தாக்கப்படும்போது எல்லாம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பொதுவாக மக்கள் நிலம் வழியாக பாயும் மின்சாரத்தால் தாக்கப்படுகிறார்கள். இந்த மின்னாற்றல் பூமியில் ஒரு பெரிய பொருளை (மரம் போன்றவை) தாக்கினால் அது தரையில் சிறிது தூரத்துக்கு பரவுகின்றன. அப்போது இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மின் அதிர்ச்சியைப் பெறுகிறார்கள்.

தரை ஈரமாக இருந்தால் (தொடர் மழை காரணமாக) அல்லது அதில் உலோகம் அல்லது பிற மின் கடத்தும் பொருட்கள் இருந்தால் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது. தண்ணீர் ஒரு மின் கடத்தி என்பதால் வெள்ளம் நிறைந்த நெல் வயலில் நிற்கிற பல பேர் மின்னலால் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக இடியுடன் கூடிய மழை என்று வானிலை எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. ஆனால், இது மிகவும் பொதுவான ஒரு அறிவுறுத்தல். அது ஒரு பெரிய பகுதி இடங்களுக்கானதாக இருக்கும்.

துல்லியமாக சுட்டிக்காட்டப்பட்ட ஒரு இடத்தில் இடியுடன் கூடிய மழையை கணிப்பது என்பது சாத்தியமில்லை. அதே போல, மின்னல் தாக்குதலின் சரியான நேரத்தை கணிக்கவும் முடியாது.

மின்னலின்போது பாதுகாப்பு நடவடிக்கையாக, மழைக் காலங்களில் அல்லது அதுபோன்ற ஒரு சூழலில் மக்கள் ஒரு மரத்தின் கீழ் நிற்பது ஆபத்தானது. அதை தவிர்க்க வேண்டும். வெட்ட வெளியில் செல்வது ஆபத்தை அதிகரிக்கும். அப்போது மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். வீட்டின் உள்ளே கூட மின் சாதன இணைப்புகள், கம்பிகள், உலோகம் மற்றும் தண்ணீரைத் தொடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Lightning strikes how it kills people rain

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X