மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற வாடகை விமானத்தில் நடுவானில் தடுமாற்றம் ஏற்பட்டதை அடுத்து, மேற்கு வங்க அரசு கடந்த வாரம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
மம்தா பானர்ஜி சென்ற விமானம் ஆழமான காற்றுப் பகுதியைத் தாக்கியதால் தடுமாற்றம் ஏற்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இருப்பினும், மேற்கு வங்க மாநில அரசும் திரிணாமுல் காங்கிரஸும் இந்த அறிக்கையை மறுத்து, இந்த சம்பவத்தில் ஏதோ குளறுபடி இருப்பதாகவும், விமானியின் நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது என்றும் கூறினர்.
மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு, மார்ச் 4ம் தேதி லக்னோவில் இருந்து கொல்கத்தாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ஒரு வாடகை விமானத்தில் ஏறினார். ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு காற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது. தடுமாற்றத்தின்போது முதல்வர் முதுகில் காயம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்.
இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானத்தை விமானி பத்திரமாக தரையிறக்கியதாகவும் கொல்கத்தா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்க மாநில உள்துறை செயலாளர் பி.பி. கோபாலிகா விமானத்தில் தடுமாற்றம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டி.ஜி.சி.ஏ) பதில் கேட்டார். மேற்கு வங்க மாநில அரசின் விமான நிபுணரும், மாநில அரசின் விமான போக்குவரத்து ஆலோசகருமான கேப்டன் சித்தார்த் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பத்திகையான, 'ஜாகோ பங்களா' வெளியிட்டுள்ள தலையங்கத்தில், இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. விமான பயணத்தின்போது முதல்வர் ஏன் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஊடகங்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் மோதாமல் தப்பியது. எனது விமானத்தின் முன் மற்றொரு விமானம் திடீரென வந்தது அப்போது விமானம் 8,000 அடி கீழே இறங்கியது. இதுவரை ஏ.டி.சி மற்றும் டி.ஜி.சி.ஏ.விடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை” என்று கூறினார்.
முந்தைய சம்பவங்கள்
விமானப் பயணத்தின் போது பானர்ஜி சிக்கலை சந்திப்பது இது முதல் முறை அல்ல.
நவம்பர் 2016-ல், பாட்னாவில் இருந்து திரும்பும்போது, விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட போதிலும், தரையிறங்குவதற்கு முன், மம்தாவின் விமானம் கொல்கத்தா வானத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் பறந்தது.
அதற்கு அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி திரும்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தாமதமானது.
பிப்ரவரி 2018-ல், பாக்டோக்ராவிலிருந்து கொல்கத்தாவுக்குத் திரும்பும்போது, மம்தா பானர்ஜியின் விமானம் ஓடுபாதை காலியாக இல்லாததால் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிக் கொண்டிருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”