Mangaluru blast case: Who are the men suspected to have aided Mohammed Shariq?
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த வாரம் ஆட்டோ ஒன்றில் குக்கா் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் மற்றும் முக்கிய குற்றவாளியான 24 வயதான முகமது ஷாரிக் ஆகியோர் தீயில் கருகி காயமடைந்தனா். இந்த குண்டு வெடிப்பு திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் என்று அந்த மாநில காவல்துறை தெரிவித்தது.
Advertisment
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, வெடிகுண்டை எடுத்துச் சென்ற முகமது ஷாரிக்கின் கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த நபர்கள் ISIS பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும், ஷாரிக் வெடிகுண்டை எங்கோ எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது, அது தவறுதலாக வெடித்தது என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஷாரிக் ஆட்டோ ரிக்ஷாவில் பலத்த தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறான், அதே சமயம் அவனுடன் சதி செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கூட்டு சதி செய்த சந்தேகத்திற்குரியவர்கள் யார்?
சிவமொக்காவிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த அப்துல் மதீன் தாஹா, முசபிர் ஹுசைன் மற்றும் அராபத் அலி ஆகியோர் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக உள்ளனர்.
தாஹா மற்றும் ஹுசைன் ஆகியோர் 2020 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ளனர், தென் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை வரவழைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கும்பலை உருவாக்க முயன்றதாக பெங்களூருவில் அவர்கள் மீது வழக்கு உள்ளது. அராபத் அலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தாஹா மற்றும் ஹுசைன் இருவரும் தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்பட்டு வருகின்றனர்.
நவம்பர் 20, 2022, ஞாயிற்றுக்கிழமை, மங்களூருவில் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, விசாரணையின் போது டெட்டனேட்டர், வயர்கள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட குக்கர் கண்டுபிடிக்கப்பட்டது. (PTI)
யார் இவர்கள்?
ஏடிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) அலோக் குமாரின் கூற்றுப்படி, அப்துல் மதீன் தாஹாவுக்கு அடுத்தபடியாக, ஷாரிக்கின் உடனடி கூட்டாளியாக அராபத் அலி சந்தேகிக்கப்படுகிறார். ஹுசைனும் சதியில் இடம்பெற்றுள்ளார். இவர்கள் அனைவரும் சனிக்கிழமை வெடித்த வெடிகுண்டை தயாரிப்பதில் ஷாரிக்கிற்கு உதவியதாக போலீசார் தெரிவித்தனர்.
மூவரையும் தேடும் பணியை என்ஐஏ தீவிரப்படுத்தியுள்ளது, மேலும் மதீனைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்துள்ளது.
2020 இல் மங்களூரு கிராஃபிட்டி வழக்குக்குப் பிறகு அராபத் அலி துபாய்க்குத் தப்பிச் சென்றார், இதில் ஷாரிக் - மங்களூரைச் சேர்ந்த மாஸ் முனீர் அகமது மற்றும் ஷிவமொக்காவைச் சேர்ந்த சையத் யாசின் ஆகியோர் சுவரில் 'பயங்கரவாதத்திற்கு ஆதரவான முழக்கங்களை' வரைந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளி முகமது ஷாரிக்
தாக்குதலுக்கு எவ்வாறு நிதி அளிக்கப்பட்டது?
கிரிப்டோகரன்சி மூலம் குண்டுவெடிப்புக்கு நிதியளிக்கப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஷாரிக் பிட்காயின்களைப் பயன்படுத்தியதாக ஏடிஜிபி அலோக் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார். விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழுக்களில் ஒரு தடயவியல் பிரிவும் உள்ளது, இது ஷாரிக்கின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஆராய்ந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவதற்காக அராபத் அலி மூலம் வெளிநாட்டு நிதியுதவி கிடைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து வாங்கப்பட்டவை.
வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சாதனம் என்ன?
கர்நாடக மாநில காவல்துறையின் விசாரணையில், குண்டுவெடிப்புக்கு ஷாரிக் ஐஇடி (Improvised Explosive Device) பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
சுமார் 500 கிராம் துப்பாக்கி தூள், IED இன் முக்கிய மூலப்பொருளாக இருந்தது. இருப்பினும், குறைந்த தீவிரம் கொண்ட இந்த வெடிகுண்டு, அனுபவம் இல்லாத நபர்களால் தயாரிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஷாரிக், யாசின் மற்றும் மாஸ் ஆகியோருடன் சேர்ந்து, ஷிவமொக்காவில் துங்கா நதிக்கரையில் ஒரு சோதனை குண்டுவெடிப்பை நடத்தினார். மற்ற இருவரையும் தீவிரவாதிகளாக மாற்றியதாக ஷாரிக் மீது குற்றம் சாட்டப்பட்டது. மூவரும் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் அல் ஹயாத் என்ற டெலிகிராம் சேனலின் உறுப்பினர்கள், இதன் மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்த அடிப்படை தகவல் அவர்களுக்கு கிடைத்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவை குண்டு வெடிப்புக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா?
தற்போதைய நிலவரப்படி, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்தகால பயங்கரவாத தொடர்புகளைக் கொண்டிருந்தனர். கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோயில் அருகே கேஸ் சிலிண்டர்கள் ஏற்றப்பட்ட கார் வெடித்ததில் கொல்லப்பட்ட 29 வயதான ஜமேஷா முபின், 2019 இல் NIA ஆல் விசாரிக்கப்பட்டவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“