முகக்கவசம் அணிந்துகொண்டு வெப்பத்தில் உடற்பயிற்சி செய்வதால் உடல் வெப்பநிலையோ அல்லது இதய துடிப்போ அதிகரிக்காது என Sports Health ல் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனடிகெட் பல்கலைக்கழகத்தின் கோரி ஸ்ட்ரிங்கர் இன்ஸ்டிடியூட்டின் விளையாட்டுப் பாதுகாப்புத்துறை இயக்குநர் அயாமி யோஷிஹாரா நான்கு வகையான முகக்கவசங்களை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அவை சர்ஜிக்கல் மாஸ்க், N95 மாஸ்க், கெயிட்டர் எனப்படும் க்ளாத் மாஸ்க் (இது கழுத்தை மூடி மூக்கு மற்றும் வாயின் மேல் வரை மூடுகிறது) மற்றும் ஸ்போர்ட்ஸ் மாஸ்க் ஆகும்.
மாஸ்க் அணியாத குழுக்களோடு ஒப்பிடும்போது இந்த வகையான மாஸ்க் அணிந்து உடற்பயிற்சி மேற்கொள்பவர்களின் உடல் வெப்பநிலை அல்லது இதயத் துடிப்பு கணிசமாக அதிகரிக்கவில்லை என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் 90 ° F (32 ° C) வெப்ப சூழலில் 60 நிமிடங்களுக்கு வாக்கிங் அல்லது ஜாகிங் செய்தனர். அவர்களின் உடற்பயிற்சியின் தீவிரம் குறைவானது முதல் மிதமானதாக இருந்தது. யோஷிஹாராவும் அவரது குழுவும் மாஸ்க்கின் உள்ளேயும் வெளியேயும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை அளவிட்டனர். பங்கேற்பாளர்களின் முகங்களில் மாஸ்க் உள்ளேயும் வெளியேயும் ஒரு சென்சார் வைத்தனர்.
ஸ்போர்ட்ஸ் மாஸ்க் மற்றும் கெயிட்டர் அதிக ஈரப்பதமாக இருப்பதை கண்டறிந்தனர். ஏனெனில் இவை வெளியேற்றப்பட்ட காற்றிலிருந்து அதிக வியர்வை மற்றும் நீராவியை உறிஞ்சுகின்றன.
மாஸ்க்கின் உள்ளே ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மாஸ்க்குடன் உடற்பயிற்சி செய்யும்போது அதிக அளவு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக பங்கேற்பாளர்கள் கூறினர். ஆனால் இதற்கும் உடல் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு அளவீடுகளுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை.
இந்த ஆராய்ச்சி சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக உள்ள கோடை காலத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டுதல்களை வடிவமைக்க உதவும் என்று யோஷிஹாரா கூறுகிறார்.
"வெப்பத்தில் குறைந்த முதல் மிதமான தீவிர உடற்பயிற்சியின் போது மாஸ்க் பயன்படுத்துவது சாத்தியமானது மற்றும் பாதுகாப்பானது" என்று யோஷிஹாரா குறிப்பிட்டுள்ளார்.
Source: University of Connecticut
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil