அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வியாழன் அன்று, மென்தால் சிகரெட் உட்பட அனைத்து சுவையுள்ள சிகரெட் விற்பனைக்கு தடை செய்வதற்கான விதிகளை முன்மொழிந்தது. இந்த நடவடிக்கையானது பிளாக் ஸ்மோக்கரஸ் மற்றும் இளைஞர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
FDA கூற்றுப்படி, 30 சதவீத வெள்ளை சிகரெட் பிடிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 85% பிளாக் சிகரெட் பிடிப்பவர்கள் மென்தால் சிகரெட்டை பயன்படுத்துகின்றனர். இந்த டேட்டாவை ஆராய்ந்து பார்க்கையில், மென்தால் சிகரெட் பயன்பாட்டிற்கு தடை விதித்தால், சிக்ரெட் பிடிப்பவர்களின் ஒட்டுமொத்த விகிதம் 15 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற தடை இந்தியாவில் விதிக்கப்பட்டால் எப்படியிருக்கும்?
மென்தால் மற்றும் பிற சுவையுள்ள சிகரெட்டுகளை இந்தியா தடை செய்தால், அதன் தாக்கம் குறைவானதாகவே இருக்கும். ஏனெனில், இந்தியாவில் புகையிலை மற்றும் பீடியின் பயன்பாடே பரவலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 26.7 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். உலகளாவிய வயது வந்தோர் புகையிலை கணக்கெடுப்பு (GATS 2016-17)படி, மக்கள் தொகையில் 18 சதவீத மக்கள் வாயில் சுவைக்கும் புகையிலை தயாரிப்புகளையும், 7 சதவீத மக்கள் புகைவரும் சிகரெட்களையும், 4 சதவீத மக்கள் இரண்டையும் பயன்படுத்துகின்றனர்.
டெல்லியின் புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவின் முன்னாள் தலைவரும், இந்தியாவில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பின் விருதை வென்றவருமான டாக்டர் எஸ் கே அரோரா கூற்றுப்படி, இந்த நடவடிக்கை, புதிதாக புகைப்பிடிக்க தொடங்கிய இளைஞர்களிடமும், பெண்களிடமும் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். புகையிலை பயன்பாட்டில் சுவை கிடைப்பது மட்டுமின்றி, மென்தால் உபயோகத்தால் கடினத்தன்மை, எரிச்சல், சிகரெட் வாசனை குறைகிறது. இது, புதிதாக சிகரெட் பிடிக்க தொடங்கியவர்கள், குடும்பத்தினரிடமிருந்து தப்பித்து கொள்ள உதவியாக இருக்கும்.
ஒருவர் இரண்டு வாரம் முதல் 1 மாதம் வரை தொடர்ச்சியாக புகைப்பிடித்து பழக்கப்பட்டிருந்தால், சுவை முக்கியமாக பார்க்கப்படாது. மென்தால் சிகரெட்-க்கு தடை விதித்தால், அவர்கள் சாதாரண சிகரெட்டை பிடிப்பார்கள் என்றார்.
இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் பொது சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் மோனிகா அரோரா கூறுகையில், மென்தால் சிகரெட்டுகள் பொதுவாக இளைஞரை கவர்ந்திழுக்ககூடியது. இதைத் தடை செய்வதன் மூலம், புதிதாக புகைபிடிப்பவரை தடுத்திட முடியும் என்றார்.
தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜி கே ராத் கூறுகையில், “தடை செய்வது தீர்வல்ல. எவ்வளவு தயாரிப்பை தடை செய்ய முடியும்? பொருள்கள் கடத்தப்படுவது தொடரும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட குர்கா மற்றும் இ சிகரெட் இன்னும் கிடைக்கின்றன” என்றார்.
இந்தியாவில் மென்தால் மற்றும் சுவையுள்ள சிகரெட்டுகளை பயன்படுத்துவோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லை. ஆனால், சுவையுள்ள சிக்ரெட்கள் விற்பனைக்கு கிடைப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது
புகையிலை பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை?
இந்தியாவில் 15-24 வயதுடையவர்களிடையே புகையிலை பயன்பாடு, GATS-1 (2009-10) இல் 18.4 சதவீதமாக இருந்த நிலையில், GATs-2 (2016-17) நடத்திய மதிப்பீட்டில் 12.4% ஆகக் குறைந்துள்ளது.
ஆனால், அமெரிக்க இளைஞர்களிடையே புகையிலை பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் இ சிகரெட்களை பயன்படுத்துகின்றனர். 2017 முதல் 2018 வரை உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே மின்-சிகரெட் பயன்பாடு 11.7% முதல் 20.8% வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது.
WHO இன் புகையிலை இல்லாத முன்முயற்சியின் பிராந்திய ஆலோசகர் டாக்டர் ஜகதீஷ் கவுர் கூறுகையில், இந்தியால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால், புகைப்பிடிப்பதை நுகர்வோர் நிறுத்தவதற்கான சாத்தியங்கள் உள்ளன. புகைப்பிடிக்கும் பழக்கத்தை அண்மை காலத்தில் ஆரம்பித்தவர்கள் நிறுத்தலாம் என தெரிவித்தார்.
சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படும் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில், 50 ஆண்டுகளில் சுவையுள்ள சிகரெட்டுகளை தடை செய்யாவிட்டால், புகைபிடித்தால் ஏற்படும் பாதிப்பு 12.7% முதல் 15.2% வரை அதிகரிக்கும். முழுமையான தடை ஏற்பட்டால் 10.6% குறையும் என்றும் காட்டுகிறது. சிறியளவில் தடை விதிக்கப்பட்டால், எவ்வித மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.
புகையிலை பயன்படுத்தலை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
இளைஞர்களை ஈர்க்கும் சிகரெட்களை தடை செய்வதற்கு பதிலாக, சமூக ஊடக தளங்கள், ஸ்டீரிமிங் போர்டல்கள், ஷாப்பிங் போர்டல்கள் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
டாக்டர் மோனிகா அரோரா கூற்றுப்படி, இந்த இணையதளங்கள் சட்டத்திற்கு எதிரான புகையிலை தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவது மட்டுமல்லாமல் வழக்கமான சிகரெட்டுகளை விட மென்தால் சிகரெட்டுகள் குறைவான தீங்கு விளைவிப்பதாக தவறான கூற்றுகளை கூறுகின்றன. செய்கின்றன. இவை கட்டுப்படுத்தப்பட வேண்டிய முக்கிய வழியாகும் என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil