ஹிஜாப் விவகாரத்தின் மைய பகுதியாக விளங்கும் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான உடுப்பி மாநிலத்தில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றாகும். கற்றல் குறியீடுகளில் சிறந்த மதிப்பெண்களைக் கொண்டுள்ளது இந்த மாவட்டம்.
ஹிஜாப் விவகாரத்தில் மாநில அரசு கொண்டு வந்த தடையை கர்நாடக உயர் நீதிமன்றம் வலியுறுத்தும் வகையில் வெளியிட்டிருக்கும் தீர்ப்பானது தற்போது, நம்பிக்கை - படிப்பு என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்களை ஆளாக்கியுள்ளது.
உடுப்பியிலும் அதற்கு மிக அருகில் இருக்கும் மற்றொரு மாவட்டமான தக்ஷினா கன்னடா மாவட்டத்திலும் நிறைய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மங்களூருவில் உள்ள 183 வருட பழமை வாய்ந்த பேசல் எவாஞெலிக்கல் மிஷன் பள்ளி முதல், இந்தியாவின் முதல் தனியார் பல்கலைக்கழங்களில் ஒன்றான மணிப்பால் பல்கலைக்கழகம் வரை இந்த பகுதியில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மட்டுமின்றி பல்வேறு புதிய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அதிகரித்து வரும் ஆங்கிலக் கல்வி தேவையை பூர்த்தி செய்ய இங்கே அமைக்கப்பட்டன.
வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (ASER) போன்ற கற்றல் ஆய்வுகள் மற்றும் இந்திய தலித் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த காலித் கானின் தேசிய மாதிரி ஆய்வின் (NSS) 64 மற்றும் 75 வது சுற்றுகளின் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆய்வுகள் இந்த இரண்டு மாவட்டங்களில் இருந்து உயர்க்கல்வி பெறும் இஸ்லாமிய பெண்களின் விகிதம் நிலையாக முன்னேறி வருவதைக் காட்டியுள்ளது.
தொற்று நோய்க்கு முந்தைய வருடாந்திர கல்வி நிலை அறிக்கையில் உடுப்பியில் உள்ள 6-8 வகுப்பு மாணவர்களில் 86.9% மாணவர்களும், 80.3% தக்ஷிண கன்னடா மாணவர்களும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை படிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. மாநில சராசரி 62% ஆக இருக்கின்ற பட்சத்தில், உத்தர கன்னடாவிற்கு (88.6%) அடுத்தபடியாக உடுப்பி மற்றும் தக்ஷிண் கன்னடா மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
மைசூர் பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட ASER சர்வே முடிவுகள் அங்குள்ள 8 மாவட்டங்களில் உடுப்பி மற்றும் தக்ஷிண் கன்னடா மாவட்டங்களில் பயிலும் மாணவர்கள் வாசிப்பு மற்றும் கணிதத்தில், பெங்களூரு, பெலகவி மற்றும் கல்புராகி மாணவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உடுப்பி மற்றும் தக்ஷிண கன்னடாவைச் சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்லூரி (PUC, 12ஆம் வகுப்பு) தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் தொடர்ந்து இடம் பிடித்துள்ளனர். 2020-21 ஆம் ஆண்டில், உடுப்பியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக PUC தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தனர், அதே நேரத்தில் தக்ஷிண கன்னடா மாணவர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். 2021 ஆம் ஆண்டில், தக்ஷிண கன்னடா மாவட்டம் 90.70% PUC தேர்ச்சி பெற்றுள்ளது. உடுப்பி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 90.01% ஆக உள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களே கர்நாடகா அளவில் முன்னிலை வகிக்கின்றனர்.
ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2019-20)-இன் படி, கர்நாடகாவில் பாலர் பள்ளி (Preschool) வருகை உடுப்பியில் அதிகபட்சமாக 56.3% ஆக உள்ளது. கர்நாடக மாநில சராசரி 40% ஆகும்.
மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த தக்ஷிண கன்னடா (தெற்கு கனரா) மாவட்டத்தில் இருந்து உடுப்பி 1997ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியின் கல்விக்கு அடித்தளமாக திகழ்ந்தது கிறித்துவ மிஷனரிகள் தான். அவர்கள் இங்கே பள்ளிகள், 1890-ல் நிறுவப்பட்ட புனித ஆன் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட பல ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை இங்கே கிறித்துவ மிஷனரிகள் துவங்கின. இது நிசாமின் ஆட்சியின் கீழ் இருந்த ஹைதராபாத் - கர்நாடகா மாவட்டத்தோடு போட்டியிடும் அளவிற்கு பல்வேறு வாய்ப்புகளை கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு வழங்கியது.
சுதந்திரத்திற்கு பிறகு, சில கல்வியாளர்கள் இந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்தவும் பாரம்பரிய கல்வி மையமாக இப்பகுதியை மாற்றவும் முயற்சி செய்தனர். அதில் மணிப்பால் கல்வி நிறுவனத்தை துவங்கிய டி.எம்.ஏ. பாய்யும் அடங்குவார். ஆரம்பத்தில் வெறும் ஆரம்பப் பள்ளிகளை மட்டுமே துவங்கிய அவர்கள் அதன பின்னர், தற்போது ஹிஜாப் பிரச்சனையின் மையமாக திகழ்ந்த மகாத்மா காந்தி மெம்மோரியல் கல்லூரி உட்பட பல கல்லூரிகளையும், மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளையும் அவர்கள் கட்டினார்கள்.
நிட்டே பல்கலைக்கழகத்தின் நிட்டே வினய ஹெக்டே மற்றும் யேனேபொயா அப்துல்லா குன்ஹி இணைந்து இஸ்லாமிக் அகாதெமி ஆஃப் எஜூகேஷன் என்ற தொண்டு அமைப்பை 1970களில் துவங்கினர். அந்த தொண்டு அமைப்பு மருத்துவம், பல்மருத்துவம், பாராமெடிக்கல் கல்லூரிகளை துவங்கி அப்பகுதியில் நடத்தி வந்தது. பேஜாவர் மற்றும் அதாமரு மடம் போன்ற மடங்களையும் கொண்டுள்ளது. இந்த மடங்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்களை துவங்கி நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த பிராந்தியத்தின் கல்வி வெற்றிப் பாதையை நோக்கி செல்ல முக்கியமான காரணங்களாக அமைந்திருக்கின்றன. கல்வியை மேம்படுத்துவதில் சமூகப் பங்கேற்பு அவசியம் என்று அவர்கள் நினைத்தால் இந்தப் பகுதி மக்கள் முழுமையாக அரசை மட்டுமே நம்பி இருக்கவில்லை. இதில் முன்னோடியாக இருந்தவர் டாக்டர் டிஎம்ஏ பாய், அவர் சுமார் 34 கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
இந்த மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவ, பொறியியல் கல்லூரி கூட இல்லை என்று கூறுகிறார் டி.எம்.ஏ. பாய் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற கன்னட எழுத்தாளர் மகாபலேஷ்வர் ராவ் கூறினார்.
இந்த பகுதியில் இருக்கும் வங்கிகளும் இந்த மாவட்டங்களில் கல்வியை வலுப்படுத்தியது என்று கூறும் அவர், “சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, மற்றும் கார்ப்பரேஷன் வங்கி இங்கே தோன்றியது” என்று குறிப்பிட்டார். மேலும் இந்த வங்கிகள் ஆரம்பத்திலேயே 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை பணிக்கு அமர்த்தியது. பெண்கள் வங்கிகளில் பணியாற்ற துவங்கினார்கள், பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ துவங்கினார்கள். குடும்பங்களும் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்த காரணத்தால் அவர்களால் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அதிகம் முதலீடு செய்ய முடிந்தது என்று கூறுகிறார் மகாபலேஷ்வர் ராவ்.
உடுப்பி மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் அஷோக் காமத், 1882ல் கொண்டு வரப்பட்ட ஹண்டர் கமிஷன் பள்ளிகளுக்கு அதிக அளவில் உதவியது. இதனை மிஷனரி அமைப்புகள் சிறப்பாக பயன்படுத்தி இந்த பிராந்தியத்தில் கல்வியை மேம்படுத்தினார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது 8ம் வகுப்பு வரை படித்திருந்தால் நீங்கள் ஒரு ஆசிரியராக வர முடியும். அதனால் தான் மிகவும் குறைவான வருவாய் பெற்றுக் கொண்டிருந்த சமூகத்தினரும் கூட முன்னேற முடிந்தது. அனைத்து வீடுகளிலும் ஒரு ஆசிரியர் இருப்பார் என்று கூறுகிறார் காமத்.
19ம் நூற்றாண்டில் கன்னட மொழியில் பாடப்புத்தகங்களை உருவாக்கி, அனைத்து மக்களும் அணுகும் வகையில் கல்வியை மாற்றிய கவிஞரும் எழுத்தாளருமான பாஞ்சே மங்கேஷ் ராவும் உடுப்பி மற்றும் தட்ஷிண கன்னடா மாவட்டங்களில் கல்வியின் தரம் உயர காரணமானவர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.