தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு இலவசங்களை வழங்கி வருகின்றன. 1990-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் பணப்பட்டுவாடா செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஜெயலலிதா பரிசுத் தொகுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த வார தொடக்கத்தில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகைக்காக தகுதியான பயனாளிகளுக்கு, ரூ.1,000 பணமும் அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை விநியோகிக்கத் தொடங்கியது. 2.19 கோடி குடும்பங்களுக்கு ரூ. 2,400 கோடி செலவில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அறிவித்தார். ஜனவரி 15 முதல் 18-ம் தேதி வரை நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மாநில அரசால் வழங்கப்பட்ட டோக்கன்களைக் கொடுத்தால், அதற்கு நியாய விலைக் கடைகளில் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும்-, இந்த வாரம் முழுவதும் மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காணப்பட்டனர். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பணம், மளிகை பொருட்கள் மற்றும் துணிகளை வழங்குவது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது என்பது தமிழ்நாட்டில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிர இரண்டு அரசுகளாலும் தவறாமல் செயல்படுத்தப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பின் வரலாறு
மறைந்த மு. கருணாநிதியின் திமுக ஆட்சியில் 1990-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு வழங்கும் வழக்கம் தொடங்கியது. ஆரம்பத்தில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மட்டும் ரொக்கப் பரிசாக ரூ.100 வழங்கப்பட்டது; பின்னர், அது 1998-ல் ரூ.150 ஆக உயர்த்தப்பட்டது.
மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, 2014-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. அப்போது, பரிசுத் தொகுப்பாக 100 ரூபாயும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ அரிசி மற்றும் 1 சர்க்கரை வழங்கப்பட்டது.
2019ல், எடப்பாடி கே.பழனிசாமி அரசால், 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்ட இந்த பரிசுத்தொகை, 2021ல், சட்டசபை தேர்தலுக்கு முன், ஒரு குடும்பத்துக்கு, ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலினின் பொங்கல் பரிசுத் தொகுப்பு
ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய முறைப்படி 'சர்க்கரை பொங்கல்' செய்ய அரிசி மற்றும் சர்க்கரை இந்த பொங்கல் பரிசில் இடம்பெறுகிறது. இருப்பினும், பரிசுத் தொகுப்பில் உள்ள மற்ற பொருட்கள் மாறலாம். உதாரணமாக, கடந்த ஆண்டு மு.க. ஸ்டாலின் ஆட்சியில் ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்குப் புடவைகளும் பணமும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தலா 1 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை மற்றும் ரொக்கமாக ரூ.1,000 பரிசாக வழங்குகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பிறகு, தமிழ்நாடு கரும்பையும் பரிசுத் தொகுப்பில் சேர்த்தது.
பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கும் பணி வழக்கமாக தொடங்கியது. இந்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை டோக்கன் வழங்கும் பணி தொடர்ந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) வரை நடைபெறும்.