/indian-express-tamil/media/media_files/2025/02/14/P7p3jkDtqPBHQFDuGEh1.jpg)
அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்த நீண்ட கால சந்தேகங்கங்கள் மற்றும் சமீபத்திய கவலைகளை கடந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை தற்போது அரங்கேறியுள்ளது. இரு தலைவர்களுக்கிடையேயான தனிப்பட்ட உறவு மற்றும் இந்திய - அமெரிக்க மூலோபாய நலன்களின் பரந்த ஒருங்கிணைப்பு ஆகியவை கடினமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு களத்தை அமைத்துள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Modi and Trump resolve to narrow gap, seize opportunities — challenge is to get things done fast
டிரம்ப்பால் கட்டவிழ்த்து விடப்பட்ட அமெரிக்க உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் வெளிவரும் வரலாற்று மாற்றங்களை, மோடியும் அவரது குழுவினரும் விரைவாக உணர்ந்து, வாஷிங்டனில் வெளிவரும் புதிய சாத்தியக்கூறுகளைக் கைப்பற்றுவதற்கான வழிகளைக் கண்டறிந்தனர். மோடி துரிதமாக இருந்தாலும், புதிய அமெரிக்க வாய்ப்புகளை உறுதியான விளைவுகளாக மாற்றுவதற்கு மந்தமான இந்திய அதிகாரத்துவத்தை ஊக்குவிப்பதில் அவரது சவால் உள்ளது. வெற்றி என்பது சீர்திருத்தங்களுக்கான அரசாங்கத்தின் விருப்பத்தையும் சார்ந்துள்ளது.
குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி டிரம்ப் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில், இந்த வாரம் அவர்கள் கோடிட்டுக் காட்டிய பல லட்சிய இலக்குகளை செயல்படுத்த இரு தரப்பும் சில மாதங்கள் அவகாசம் அளித்துள்ளன. அமெரிக்க - இந்திய உறவுகளின் வாக்குறுதிக்கும், செயல்திறனுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக இருந்த கடந்த காலத்தைப் போலல்லாமல், இந்த முறை விஷயங்களை விரைவாகச் செய்து முடிப்பதில் தீவிரம் காண்பிக்கப்படலாம்.
சட்டவிரோத குடியேற்றம் குறித்து, இரு தரப்பினரும் தங்கள் விவாதத்தை தீவிரமாக முன்வைத்து அதன் மூலத்தை ஆராய்ந்தனர். இரு நாடுகளுக்கும் பரஸ்பர பாதுகாப்பை மேம்படுத்த வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரு நாட்டு தலைவர்களும் தங்கள் பதிலை கூட்டாக தெரிவித்தனர்.
"இந்த உலகம், ஒரு உலகளாவிய பணியிடமாக பரிணாம வளர்ச்சியடைவது, புதுமையான, பரஸ்பர அனுகூலமான மற்றும் பாதுகாப்பான நடமாடும் கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது" என சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்த கூட்டு அறிக்கையை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவிலிருந்து தொழில்நுட்ப திறமையாளர்களின் தேவை மற்றும் அதன் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு அதிக விசா வழங்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதை உணர முடிகிறது.
வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு ஆகியவை தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சனையில், மோடியும், டிரம்பும் ஒரு நேர்மறையான அணுகுமுறையை எடுக்க முடிவுசெய்துள்ளனர். அதன்படி, 500 பில்லியன் டாலர் என்ற இருதரப்பு வர்த்தக இலக்கை அமைத்துக் கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் டிரம்ப், இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்து அடுத்தகட்ட நகர்வு இருக்கலாம்.
வாஷிங்டனுடனான டெல்லியின் பிரச்சனைகளில் ஒன்று இந்திய - ரஷ்ய உறவு. குறிப்பாக ரஷ்ய தலைவர் விளாடிமிர் புதினி உக்ரைன் மீது படையெடுத்த பிறகு இது கூர்ந்து நோக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஸ்தாபனம் ரஷ்யாவிற்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையிலான புதிய பதட்டங்களை சமாளிக்க போராடினால், டிரம்ப், புதினை அணுகி உக்ரைனில் அமைதிக்கான பாதைகளை ஆராய்வதன் மூலம் சிக்கலை தீர்க்க ஒரு வழியைக் கண்டுபிடித்து வருகிறார்.
ட்ரம்ப் மூலோபாய ரீதியாக கைவிடப்படுவார் என்று அஞ்சும் அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளைப் போலல்லாமல், ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான சமாதானத்தின் மூலம் இந்தியா அனைத்தையும் பெறுகிறது. ஐரோப்பாவில் ஒரு நிலையான பாதுகாப்பு கட்டமைப்பு, ஆசியாவில் அதன் பாதுகாப்பு சவால்களை நிர்வகிப்பதை எளிதாக்கும். உக்ரைனில் டிரம்பின் அமைதி முயற்சியை ஆதரிப்பதில் மோடி உற்சாகமாக இருந்ததில் ஆச்சரியமில்லை.
ஜி ஜின்பிங்குடன் புதிய உறவை உருவாக்க டிரம்பின் நம்பிக்கைகள், டெல்லியில் சில கவலைகளை எழுப்பும். அதே வேளையில், ஆசிய பாதுகாப்பு மற்றும் குவாட் மீதான அமெரிக்க கொள்கைகளின் தொடர்ச்சியான சமிக்ஞையில், மோடியும் அவரது குழுவும் இப்போதைக்கு திருப்தி அடைய வேண்டும். கடந்த தசாப்தத்தில் உருவாக்கப்பட்ட இந்தோ - பசிபிக் உடன்பாட்டை விரிவுபடுத்துகையில், மோடியும் டிரம்பும் மத்திய கிழக்கில், குறிப்பாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் (IMEEC) தங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த தயாராக உள்ளனர்.
டெல்லியும், வாஷிங்டனும் இஸ்ரேலுடன் நல்லுறவைக் கொண்டிருக்கின்றன. மேலும், மிதவாத அரபு நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் மத்தியதரைக் கடலில் மூலோபாய ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறக்க உதவ வேண்டும்.
குடியேற்றம், வர்த்தகம், ஜனநாயக மேம்பாடு, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றில் உள்ள சவால்களுடன் ஒப்பிடுகையில், இரு தலைவர்களும் ஏற்கனவே ஒன்றிணைந்த பகுதிகளில் முன்னோக்கி நகர்வதைக் காட்டுவது எளிது. ஆற்றல், பாதுகாப்பு, தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு, மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த பகுதிகளில் ஒத்துழைப்பை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பது மட்டுமே இங்கு சவாலாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.