கோவிட்19 : மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகள் என்றால் என்ன?

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனை ஒன்றில், EGEN-COV2 என்ற மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடி, கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களை காக்கும் மிக முக்கிய சிகிச்சையாக இருக்கும்

Prabha Raghavan 

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனை ஒன்றில், EGEN-COV2 என்ற மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடி, கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களை காக்கும் மிக முக்கிய சிகிச்சையாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான சிறப்பு செய்தி இங்கே.

மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகள் என்றால் என்ன?

வைரல் பரவலை தடுக்க நம் உடல் உற்பத்தி செய்யும் புரதமே ஆன்ட்டிபாடி என்று அழைக்கப்படுகிறது. மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகள் என்பது நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை ஆன்ட்டிபாடிகள் ஆகும். மனித உடலில் இருந்து பெறப்படும் இரத்தத்தில் இருந்து ஆன்ட்டிபாடிகள் எடுக்கப்பட்டு பிறகு அதனை நகல்ப்படுத்தும் (Cloning) முறைகள் மூலம் இது உருவாக்கப்படுகிறது.

இந்த ஆன்ட்டிபாடிகள் குறிப்பிட்ட வைரஸ்களை மட்டும் இலக்காக கொண்டு செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, REGEN-COV2 என்ற இந்த ஆன்ட்டிபாடி, இரண்டு மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகளின் கலப்பாகும் (Cocktail). இது SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும். இது ஸ்பைக் புரதத்தின் குறிப்பிட்ட பகுதியில் இணைந்து, ஆரோக்கியமான செல்களை தாக்கி அழிப்பதை தடுக்கிறது. இதற்கு முன்பு புற்றுநோய், எபோலா மற்றும் எச்.ஐ.வி. போன்ற நோய்களுக்கு எதிரான சிகிச்சையில் இவை பயன்படுத்தப்பட்டது.

கொரோனா சிகிச்சையில் இவை எவ்வளவு முக்கியமானவை?

பெருந்தொற்றின் போது, நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், இந்த மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகள், நோய் தொற்று ஏற்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அபாயங்களை குறைக்கும் என்பது போன்ற நல்ல முடிவுகளை வழங்கியது. சில மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகள் பல வைரஸ் பிறழ்வுகளின் செயல்களையும் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது ஜூன் மூன்றாம் தேதி நடைபெற்ற வெள்ளை மாளிகை ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளார் அமெரிக்க அதிபருக்கான தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபௌசி.

மிகவும் முக்கியமானதாகவும் நம்பிக்கை அளிக்க கூடியதாகவும் இருக்கின்ற இந்த ஆன்ட்டிபாடிகளுக்கும் வரம்புகள் உள்ளன. குறைவான நோய் தொற்றுடன் அதிக அளவு அபாயம் கொண்ட நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பெரிதும் உதவலாம். ஆனால் மிகவும் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவை ஏற்படும் நபர்களுக்கு இந்த சிகிச்சை பரிந்துரை செய்யப்படவில்லை.

சரியான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் இந்த சிகிச்சை வழங்கப்பட்டால் நல்ல முடிவுகள் எட்டப்படும். குறிப்பாக போதுமான மருத்துவ வளங்களை பெற முடியாத சூழலில் இது மிகவும் உதவும் என்று PGIMER-ன் நுரையீரல் பிரிவு முன்னாள் தலைமை பேராசிரியர் மருத்துவர் பெஹாரா கூறியுள்ளார். டெல்டா ப்ளஸ் போன்ற வைரஸ் பிறழ்வுகளுக்கு எதிராகவும் மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகள் சிறப்பாக செயல்படுகிறது என்ரு நிதி ஆயோக்கின் உறுப்பினரும், உடல்நலம் மற்றும் தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார்.

புதிய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த வாரம், அதன் மீட்டெடுப்பு சோதனைகளில், கடுமையான கோவிட் -19 உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு இயற்கையான ஆன்டிபாடி பெரிதாக பலனளிக்கவில்லை என்றும், நிலையான மருத்துவ கவனிப்பை பெறும் நபர்களைக் காட்டிலும் ரெஜெனெரோனின் மோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் இறப்பு அபாயத்தை ஐந்தில் ஒரு பங்காகக் குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளது. ஆகவே, ஆன்டிபாடி கலவையுடன் சிகிச்சையளிக்கப்பட்ட ஒவ்வொரு 100 நோயாளிகளிலும் ஆறு குறைவான இறப்புகள் மட்டுமே ஏற்படும் என்று அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

தங்கள் உடலில் ஆன்ட்டிபாடிகள் இல்லாத நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட இந்த சிகிச்சையின் பயனால் மருத்துவமனையில் தங்குவதற்கான நாட்கள் நான்காக குறைந்தது. . இருப்பினும், “ஒட்டுமொத்த ஆய்வு மக்கள்தொகையில் இதுபோன்ற நன்மைகள் எதுவும் காணப்படவில்லை”, இதில் இயற்கையான ஆன்டிபாடி பதிலை ஏற்ற நோயாளிகளும் உள்ளனர்.

அடிப்படையில், கடுமையான அறிகுறிகளை கொண்டிருந்தாலும் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தங்கள் சொந்த ஆன்டிபாடி தூண்டலை உருவாக்க முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை 9,785 பங்கேற்பாளர்களுடன், கடுமையான கோவிட் -19 தொற்றால் பாதுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் இந்த சிகிச்சையானது இறப்பைக் குறைக்கிறதா என்பதை திட்டவட்டமாக தீர்மானிக்க போதுமான முதல் சோதனை இதுவாகும். இந்த சிகிச்சை இதுவரை லேசான மற்றும் மிதமான கோவிட் நோயாளிகளுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த சிகிச்சை உள்ளதா?

REGEN-COV2 ஆன்ட்டிபாடி சுவிஸ் நாட்டின் மருந்து நிறுவனமான ரோச்சே இந்தியாவின் சிப்லாவுடன் கூட்டணி வைத்திருப்பதால் இந்த சிகிச்சை தற்போது இந்தியாவில் உள்ளது. மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் காசிரிவிமாப் (casirivimab) மற்றும் இம்டெவிமாப் (imdevimab) ஆகியவற்றின் கலவையான இந்த சிகிச்சை, மே மாதத்தில் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டு அனுமதியைப் பெற்றது.

ஜூன் தொடக்கத்தில், மற்றொரு ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சை – எலி லில்லியின் பாம்லானிவிமாப் (bamlanivimab) மற்றும் எட்டெசிவிமாப் (etesevimab) இதேபோன்ற அவசர ஒப்புதலைப் பெற்றது. இரண்டு ஆன்டிபாடி காக்டெயில்கள் ஆக்ஸிஜன் தேவையில்லாத மற்றும் கடுமையான நோய்க்கு முன்னேறும் அதிக ஆபத்தில் இருக்கும் கோவிட் -19 நோயாளிகளுக்கு வழங்கப்படும்.

அமெரிக்காவில் அவரச சிகிச்சை பயன்பாட்டிற்காக அனுமதி பெற்ற Sotrivimab மருந்தின் நிறுவனமான கிளாசோஸ்மித்க்லைன் இந்தியாவில் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சையை கிடைக்கச் செய்வதற்கான விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில், Zydus Cadila ஆன்டிபாடி காக்டெய்ல், ZRC-3308 ஐ சோதனைகள் மூலம் பெற முடிவு செய்துள்ளது.

அதிக விலை கொண்டதா?

இது போன்ற மருந்துகளை அதிக நேரம் தேவைப்படுவதாலும், உருவாக்குதலில் அதிக சிக்கல்கள் இருப்பதாலும் இந்த சிகிச்சைகள் மிகவும் அதிக விலை கொண்டதாக கருதப்படுகிறது. சிப்லா, 1 லட்சம் REGEN-COV2 பேக்குகளை விநியோகிக்கிறது. ஒரு பேக்கின் விலை ரூ. 1.20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பேக்கில் இரு நபர்களுக்கு சிகிச்சை அளிக்க இயலும் என்றால் ஒரு நபருக்கான கட்டணம் மட்டும் ரூ. 59,750 (வரி உட்பட).

எலி லில்லி நிறுவனம் இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு நன்கொடையாக வழங்க இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திசு கல்ச்சர் மூலம் மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஹாப்கின்ஸ் ப்ளும்பெர்க் கல்வி நிறுவனத்தின் பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் மூலக்கூறு நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறை தலைவர் மருத்துவர் ஆர்துரோ கசடெவெல் தெரிவித்துள்ளார். நீங்கள் செல்களை வளர்க்க வேண்டும். அந்த செல்கள் புரதங்களை உருவாக்க வேண்டும். பிறகு அந்த புரதங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று போட்காஸ்ட் ஒன்றில் குறிப்பிட்டார்.

மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் பிளாஸ்மா சிகிச்சையுடன் எவ்வாறு ஒப்பிடுகின்றன?

கோவிட் -19 சிகிச்சையின் வழிகாட்டுதலில் இருந்து இந்தியா கடந்த மாதம் பிளாஸ்மாவை “ஆஃப்-லேபிள்” விருப்பமாக பயன்படுத்துவதை கைவிட்டது. கடந்த எட்டு மாதங்களில், சோதனைகளின் சான்றுகள் நோயாளியின் விளைவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.

பிளாஸ்மாவுடன் ஒப்பிடும்போது, விஞ்ஞானிகள் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் வாக்குறுதியில் அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆன்டிபாடி அடிப்படையிலான சிகிச்சைகள் இரண்டும், அவை உருவாக்கப்படும் விதத்தில் வேறுபடுகின்றன.

மீட்கப்பட்ட கோவிட் -19 நோயாளியின் பிளாஸ்மாவிலிருந்து ஆன்டிபாடிகளை வழங்குவதை உள்ளடக்கியது ப்ளாஸ்மா தெரப்பி. சிகிச்சையைப் பெறுபவர்கள் மீட்கப்பட்ட நோயாளி உருவாக்கிய அனைத்து ஆன்டிபாடிகளையும் பெறுவார்கள் என்பதாகும்.

மோனோக்ளோனல் ஆன்ட்டிபாடிகள் என்பது ஒரு குறிப்பிட்ட ஆன்ட்டிபாடியை தேர்வு செய்து தொழிற்சாலைகளில் வைத்து வளர்ப்பது. ஆன்ட்டிபாடி காக்டெய்ல்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்ட்டிபாடிகளின் கலவையை வழங்குகிறார்கள். மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் அவற்றின் ஒரே மாதிரியான தன்மை காரணமாக “மிகவும் தூய்மையானவை” என்று டாக்டர் ஃபாசி ஆகஸ்ட் மாதம் மெட்பேஜ் டுடேவிடம் தெரிவித்தார்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Monoclonal antibodies covid

Next Story
மாடர்னா தடுப்பூசி குழந்தை மாதிரியில் நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகிறதுModerna vaccine elicits immune response in infant model Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com