இந்திய டாப் லிஸ்ட் பணக்காரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டை காட்டிலும் சராசரியாக 11 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ஹருன் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎப்எல் வெல்த் நிறுவனங்கள் இணைந்து நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதோடு மட்டுமல்லாது, 2019ம் ஆண்டின் இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் 41 துறைகளில் இருந்து 953 நபர்களை, ஹருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎப்எல் வெல்த் நிறுவனங்கள் தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். இது கடந்தாண்டு பங்கேற்ற நபர்களை காட்டிலும் 15 சதவீதம் அதிகம் ஆகும், அதாவது, கடந்தாண்டை விட 122 பேர் அதிகமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர். 2016ம் ஆண்டு பட்டியலை கணக்கிடும்போது 181 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் எடுத்துக்கொண்டவர்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ. ஆயிரம் கோடிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் பணக்காரர்களில் சராசரி சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 11 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்தாண்டில் அவர்கள் சேர்த்துள்ள புதிய சொத்துக்களை சேர்க்காமல் இருக்கும் பட்சத்தில், அவர்களின் சொத்து மதிப்பு கடந்தாண்டை விட ரூ.3,72,800 கோடி குறைந்துள்ளது.
344 நபர்கள் அதாவது, இந்தாண்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு நபர்களின் சொத்து மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது. ஆயிரம் கோடி கட் ஆப் ஆக தாங்கள் நிர்ணயித்திருந்த நிலையில், 112 பேர் அந்த வட்டத்திற்குள்ளேயே வரவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/ex1-300x200.jpg)
2019 இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலின் முதலிடத்தில் ரூ.3,80,700 கோடிகள் சொத்துமதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இந்த சொத்துமதிப்பு, இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் மத்திய அரசுக்கு வழங்கிய ரூ.1,76,000 கோடியை விட 2.2 மடங்கு அதிகம் ஆகும். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரூ.94,500 கோடிகள் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் பட்டியலில், ஐந்தாம் இடம் பிடித்துள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட 33 சதவீதம் அதிகரித்துள்ளது.விப்ரோ நிறுவனத்தின் அஜிம் பிரேம்ஜி, கோடக் மகேந்திரா பேங்கின் உதய் கோடக் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
ஆர்ச்லர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் எல் என் மிட்டல், சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் திலிப் சங்க்வி உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு, கடந்தாண்டை விட கணிசமாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.