Multipurpose national ID card : நேற்று டெல்லியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அந்த சந்திப்பின் போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும், நாட்டுக்கான புதிய பணிகள் குறித்தும் அவர் பேசினார். 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடைபெற்று, மக்களின் அனைத்து டேட்டாக்களும் சேமித்து வைக்கப்படும் என்று கூறினார்.
தற்போது அமலில் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரே அடையாள அட்டையாக வெளியிடப்படும் என்று அவர் கூறினார். பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளும் வகையில் அந்த அடையாள அட்டை இருக்கும் என்றும், குழந்தை பிறந்தவுடன் இந்த அடையாள அட்டை என்று இருந்தால் 18 வயது பூர்த்தியாகும் போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் அப்படியே வாக்களிக்க இயலும் என்று அவர் கூறினார். இந்த வகையான அடையாள அட்டைகள் பயன்பாட்டிற்கு வரும் போது தனியாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்ட்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் தேவையில்லாமல் போய்விடும் என்றும் அவர் குறிப்பிடார். இந்த ஒரே அடையாள அட்டை உங்களின் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பேங்க் கார்ட் என அனைத்துமாக செயல்படும் என்றும் அவர் கூறினார். இதே போன்ர திட்டத்தை ரிஃபார்மிங் நேசனல் செக்யூரிட்டி சிஸ்டம் என்ற பெயரில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு 2001ம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து வைக்க முயன்றது.
2001ம் ஆண்டு அரசு செய்த முயற்சி என்ன?
இந்த திட்டத்தை இஜிஓஎம் என்ற அமைச்சர்கள் குழு முன்மொழிந்தது. அந்த குழுவில் அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெஸ்வந்த் சிங், நிதி அமைச்சர் யெஷ்வந்த் சின்ஹா ஆகியோர், சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் குடியேறும் மக்களை வெளியேற்ற மற்றும் தடுக்க இந்த திட்டத்தை முன்மொழிந்தது. அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும். அதன் மூலமாக இந்தியா வம்சாவளிகள் யார் என்றும் சட்டத்திற்கு புறம்பாக யார் யார் இந்தியாவில் குடியேறியுள்ளார்கள் என்பதை கண்டறியவும் வசதியாக இருக்கும். முதலில், எல்லைப்புறங்களில் இருக்கும் மாவட்டங்களுக்கு இந்த கார்ட்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை என்றும் அவர்கள் முன்மொழிந்தனர்.
மத்திய அரசு ஒரே அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு ஆகும் செலவுகள் குறித்த வரையறைகளை முன்பே தெரிவிக்க வேண்டும். நல்ல வேலை மற்றும் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அண்டை நாடுகளில் இருக்கும் மக்கள் இந்தியாவுக்குள் சட்டத்துக்கு புறம்பாக குடியேறுகின்றார்கள். இதனை தடுக்க ஒர்க்கிங் பெர்மிட் வழங்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியர்கள் மற்றும் இந்தியர்களற்றவர்களுக்கு இது போன்ற முறையான பதிவேடுகளை பின்பற்றும் முறையை அரசு கொண்டு வர வேண்டும் என்றும் அந்த குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தற்போதைய சூழலில் இதை மீண்டும் கொண்டு வருவது சற்று சிரமத்தை தான் அளிக்கும். அமித் ஷா ஏற்கனவே தற்போது அரசு இது போன்ற திட்டத்தை செயல்படுத்தும் எண்ணத்தில் இல்லை என்றும் ஆனால் அனைத்து அடையாள அட்டைகளையும் ஒருங்கிணைக்க அரசிடம் திட்டம் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 2001ம் ஆண்டு பலதரப்பட்ட தேவைகளுக்கான ஒற்றை அடையாள அட்டை கொண்டுவரப்பட வேண்டும் என்று அரசு விரும்பியது. அதன் பின்பு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. ஆதார் அடையாள அட்டை இந்தியாவின் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது.
அரசு 2020ம் ஆண்டின் போது நாட்கிரிட் எனப்படும் “நேசனல் இண்டெலிஜென்ஸ் கிரிட்” அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதனை ஐபி, சிபிஐ, ரா, அமலாக்கத்துறை என அரசின் விசாரணை அங்கங்கள் அனைத்தும் பயன்படுத்தி மக்களின் தரவுகளை சரி கண்காணிக்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.