Explained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட 3 வழக்குகள் என்னென்ன ?
முஸ்லீம் பெண்கள் மசூதிகள் மற்றும் தர்காக்களில் நுழைவது,பார்சி அல்லாதவர்களை மணந்த பார்சி பெண்கள் அக்யாரியில் நுழைவதற்கான பிரச்சனை,தாவூதி போரா சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் பிறப்புறுப்பு சிதைவு
By: WebDesk
Updated: November 17, 2019, 09:52:59 AM
Tamil Nadu News Today Live
வழிபாட்டுத் தலங்கள் உள்பட பொது இடங்களை அணுகுவதில் பெண்களுக்கு சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை உண்டு என்று 2018ம் ஆண்டு சபரிமலை தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பின் மறுஆய்வு மனுவில் கடந்த 14ம் தேதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு பரிந்துரை செய்தது.
இந்த மறுஆய்வு வழக்கை விசாரிக்கும் போது, ரஞ்சன் கோகோய் ( ஏ.எம். கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா இவர்களின் சார்பாகவும் ரஞ்சன் கோகோய் தீர்ப்பு நகலை எழுதியுள்ளார் ) மத நெறிமுறைகளில் பெண்களின் அடிப்படை உரிமை பற்றிய மற்ற மூன்று வழக்கையும் குறிப்பிட்டு இருந்தார்.
இறுதியாக, அமைய விருக்கும் பெரிய அரசியலமைப்பு அமர்வு, சபரிமலை வழக்கோடு மற்ற மூன்று வழக்கையும் சேர்த்து விசாரிக்கும் என்று தீர்ப்பும் அளித்திருந்தனர்.
பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து : “துர்கா / மசூதியில் முஸ்லீம் பெண்கள் நுழைவது தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளில் எழும் பிரச்சினைகள் (2019 இன் ரிட் மனு (சிவில்) எண் 472); பார்சி சமூகத்தில் பெண்கள் பார்சி அல்லாதவருடன் திருமணம் செய்து கொண்டதால் பார்சி அகியாரி கோயிலில் ஏற்பட்ட பிரச்சனை (சிறப்பு விடுப்பு மனு (சிவில்) எண் 18889/2012); தாவூதி போஹ்ரா சமூகத்தில் பெண் பிறப்புறுப்பு சிதைவு நடைமுறை உட்பட (2017 ஆம் ஆண்டின் 286 ஆம் இலக்க ரிட் மனு (சிவில்)) இந்த வழக்குகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டவை. எனவே, இந்த வழக்குகளில் எழும் பிரச்சினைகள் பெரிய பெஞ்சில் குறிப்பிடப்படுவதை நிராகரிக்க முடியாது. ” என்று தெரிவித்தனர்.
தீர்ப்பு குறிப்பிட்டுள்ள இந்த மூன்று வழக்குகள் அடிப்படை அம்சங்கள் என்னென்ன?
1. முஸ்லீம் பெண்கள் மசூதிகள் மற்றும் தர்காக்களில் நுழைவது :
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புனேவை சேர்ந்த யாஸ்மீன் ஜூபர் அஹ்மத் பீர்சாட், அவரது கணவர் ஜூபர் அஹ்மத் நஜீர் அகமது பீர்சாட் ஆகிய இருவரும் இஸ்லாம் பெண்களை பிரதான கதவு வழியாக மசூதிகளுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும், அரசுக்கும் , இஸ்லாம் அமைப்புகளுக்கும் இதை நடைமுறைபடுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடினர். “முசல்லா” வை ( மசூதியின் பிரதான பிரார்த்தனை பகுதி) காட்சியாகப் பார்பதும், செவிப்புலனால் அணுகுவதும் ஒவ்வொரு இஸ்லாமியரின் உரிமை ” என்பது இவர்களின் வாதமாக இருந்தது.
அந்த மனுவில் இறுதியாக “புனித நூலான குர்ஆன், ஹதீஸ் பாலினப் பிரிவு பற்றி பேசவில்லை, அதுகுறித்த குறிப்புகள் கூட இல்லை ” என்று வாதிட்டு, பெண்கள் மசூதிக்குள் நுழைவதைத் தடுக்கும் செயல் அரசியலமைப்பு பிரிவில் சொல்லப்பட்டிருக்கும் 14, 15, 21 , 25 அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது, பெண்ணின் அடிப்படை கவுரவத்தை கேள்விகேட்கின்றது” என்றும் வாதிட்டனர்.
இந்த வழக்கு கடைசியாக, தற்போது தலைமை நீதிபதியாக நியமிக்ப்பட்ட எஸ். ஏ போப்டே தலைமையிலான பெஞ்ச், சபரிமலை மறுஆய்வு தீர்ப்பு வரும் 10 நாட்களுக்கு முன்னர் (அதாவது, நவம்பர் 5 ) விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் எஸ் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோரும் இந்த அமர்வில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று, எந்த காரணத்தையும் தெரிவிக்கமால் வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2.தாவூதி போரா சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் பிறப்புறுப்பு சிதைவு வழக்கு:
தாவூதி போரா சமூகத்தில் சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் சடங்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கு ‘சுனிதா திவாரி Vs யூனியன் ஆஃப் இந்தியா’ (ஆர்ஸ்)
செப்டம்பர் 24, 2018 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், டி ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த விஷயத்தை உச்சநீதிமன்றத்தின் பெரிய அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தனர்.
அரசியலமைப்பின் 32 வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தாவூதி போரா சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைவு (எஃப்ஜிஎம்) அல்லது காஃப்டா (‘காட்னா’, ‘பெண் விருத்த சேதனம்’) இந்த அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்ல மாறாக அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு நியாயத்தையும் கேள்வி கேட்பதாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதுபோன்ற பழமைவாத சடங்குகள் எந்தவொரு மருத்துவ அறிவியல் ரீதியாக செய்யப்படவில்லை என்றும், குர்ஆனில் இது தொடர்பாக எந்த வாக்கியமும் இல்லை என்றும் மனுவில் வாதிட்டனர். அப்பாவி பெண்ணின் மீது நடத்தப்படும் இந்த அட்டூழியம், உடல் வலி, மனிதாபிமானம் மற்றத் தன்மை, மன சித்திரவதை எல்லாம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சுமந்தவாறே வாழ்கின்றனர்.
இந்த மனுவில், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனம் , சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், இந்தியா அரசியலமைப்பு பிரிவு 21 ஆகியவற்றை இந்த ‘காஃப்டா’ சடங்கு மீறுவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் சடங்கை குற்றமாக கருதப்பட வேண்டும் என்று அது வாதிட்டது.
மனுதாரரின் நிலைப்பாட்டை எதிர்த்து ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது,
இந்த நடைமுறை கிட்டத்தட்ட 1,400 ஆண்டுகள் பழமையானது, இது தாவூதி போஹ்ரா சமூக மதத்தின் அத்தியாவசமான அடையாளம் ( அரசியலமைப்பு பிரிவு 26 – மத குழுக்கள் தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமை ) என்று அபிஷேக் மனுசிங்வி மூலம் பதில் வாதமும் கொடுக்கப்பட்டது.
இறுதியில், ஆலோசகர் அபிஷேக் மனுசிங்வி மற்றும் இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால் இருவரும் இந்த விஷயத்தை ஒரு பெரிய பெஞ்சிற்கு பரிந்துரைக்க வேண்டும் என்று சமர்ப்பித்தனர், அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
3. பார்சி அல்லாதவர்களை மணந்த பார்சி பெண்கள் அக்யாரியில் நுழைவதற்கான பிரச்சனை :
‘கூல்ருக் குப்தா vs புர்ஜூர் பர்திவாலா’ என்ற வழக்கில் 2012ம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றம் பிரப்பித்த தீர்ப்பை சிறப்பு விடுப்பு மனு அளித்து தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் மனுதாரர் கூல்ருக் கான்ட்ராக்டர் குப்தா ஆவார். தனது தோழி ‘தில்பார் வால்வி’ தன்னைப் போலவே பார்சி அல்லாத ஒரு இந்துவை மணந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பார்சியின் முக்கியத் தளவாடமான அமைதி கோபுரத்திற்குள் நுழைய தில்பாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது .இதனையடுத்து கூல்ருக் கான்ட்ராக்டர் குப்தா 2010ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
சிறப்பு திருமணச் சட்டம், 1954 ன் கீழ் பார்சி அல்லாதவரை திருமணம் செய்து கொண்டதால், ஒரு பெண் இனி பார்சியாக இருக்க முடியாது , மாறாக இந்து மதத்தினராக கருதப்படுவார் என்று பார்சி அஞ்சுமன் சங்கம் கூறிய வாதத்தை குஜராத் ஐகோர்ட்டும் உறுதி செய்தது. பார்சி அற்ற மதத்தவரை திருமணம் செய்த ஒருவரை அமைதி கோபுரத்திற்குள் நுழையக் கூடாது என்று சொல்லும் உரிமை பார்சி அஞ்சுமன் சங்கத்திற்கு உண்டு என்றும் தீர்பளித்திருந்தது. இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.