மசூதிகளில் பெண்கள் நுழைவதை இஸ்லாமிய நூல்கள் தடை செய்யவில்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது. புனேயில் வசிக்கும் ஃபர்ஹா அன்வர் ஹுசைன் ஷேக், முஸ்லீம் பெண்கள் மசூதிகளுக்குள் நுழைவதைத் தடை செய்வதை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததைத் தொடர்ந்து ஏ.ஐ.எம்.பி.எல்.பி-யின் இந்த பதில் வந்துள்ளது.
இந்த வழக்கு எதைப் பற்றியது?
ஃபர்ஹா அன்வர் ஹுசைன் ஷேக் தனது மனுவை பிப்ரவரி 2020-ல் வழக்கறிஞர்கள் சந்தீப் திவாரி மற்றும் ராமேஷ்வர் கோயல் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவில், முஸ்லிம் பெண்கள் மசூதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் நடைமுறையை சட்டவிரோதம் என்று அறிவிக்கும் உத்தரவு அல்லது வழிகாட்டுதலை வழங்க வேண்டும், அரசியலமைப்பு பிரிவு 14, 15, 21, 25 மற்றும் 29 (சமத்துவம், பாகுபாடு மற்றும் சுதந்திரமாக மதத்தை கடைப்பிடிக்கும் உரிமை ஆகியவைத் தொடர்புடையவை) பிரிவுகளை மீறுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பெண்கள் மசூதிக்குள் நுழைவதை குர்ஆனோ அல்லது முஹம்மது நபியோ எதிர்த்ததாக எந்தப் பதிவும் இல்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “மேற்கு சவூதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து காபாவை சுற்றி வருவதற்கும் முகமது நபி பிறந்த இடமான மெக்காவில் வழிபாடு செய்வதற்கு பாலின பாகுபாடு இல்லை” என்றும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலின சபை வரிசைகள் உட்பட, தடைகளால் பிரிக்கப்படாமல், தொழுகை செய்யும் இடத்தில் பெண்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கும் உத்தரவிட வேண்டும் என்று இந்த மனுவில் கூறியுள்ளது.
இதற்காக, சபரிமலை வழக்கு “இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் கேரள மாநிலம்” என்ற உச்ச நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பு குறிப்பிடப்பட்டது. அதில் அனைத்து இந்து யாத்ரீகர்களும் கோயிலுக்குள் நுழைய நீதிமன்றம் அனுமதித்தது, 10-50 வயதுக்குட்பட்ட பெண்களை நுழைய அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்பின் 25வது பிரிவை மீறுவதாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மே 2020-ல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு, மத்திய வக்ஃப் கவுன்சில், ஏ.ஐ.எம்.பி.எல்.பி, ஜாமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் தாருல் உலூம் தியோபந்த் உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஏ.ஐ.எம்.பி.எல்.பி அமைப்பு கூறியது என்ன?
ஏ.ஐ.எம்.பி.எல்.பி வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளாமல் இருவருக்குமே தனித்தனியாகக் கூடும் இடங்கள் இருப்பதால், பெண்கள் மசூதிகளுக்குள் நுழையவும் பிரார்த்தனை செய்யவும் இஸ்லாம் அனுமதிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
மெக்கா மற்றும் மதீனாவில் பெண்கள் தங்கள் வீட்டு ஆண்கள் உடன் ஹஜ் அல்லது உம்ரா சடங்குகளைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள், அதன் விளைவாக பொதுவாக மசூதிகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மனுதாரரின் வாதம் தவறாக வழிநடத்துகிறது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியது.
அந்த பிரமாணப் பத்திரத்தில், “மெக்கா மற்றும் மதீனா (சவுதி அரேபியா) ஆகிய இடங்களில் உள்ள புனித தளங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், அதாவது மஸ்ஜித் அல்-ஹராம் (மக்காவில் அமைந்துள்ளது) இஸ்லாத்தில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் தவாஃப் எனப்படும் பிரார்த்தனைகளை வழங்கும்போது சில விதிவிலக்குகள் உள்ளன. இயற்கையாகவே, இந்த புனித தளம் ஒரு விரிவான மற்றும் வரையறுக்கப்பட்ட வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளது, அதை ஒரு மாற்று தளத்தில் / வழிபாட்டுத் தலத்தில் மேற்கொள்ள முடியாது.” என்று கூறப்பட்டுள்ளது.
பல்வேறு "ஹதீஸ்கள்" அல்லது முஹம்மது நபியின் வார்த்தைகள் மற்றும் நடைமுறைகளின் மீது நம்பிக்கை வைத்து, தொழுகையின் ஆசாரங்கள், குறிப்பாக இரு பாலினத்தவர்கள் கலந்து பங்கேற்பு இல்லாமல், அனைத்து வழிபாட்டாளர்களாலும் "விருப்பமாகவும், கண்டிப்பாகவும், உண்மையாகவும்" கடைபிடிக்கப்படுகிறது என்று இந்த பிரமாணப் பத்திரம் கூறியுள்ளது. உண்மையில், மெக்காவில், மஸ்ஜித் அல்-ஹராம் தவிர ஏராளமான மசூதிகள் உள்ளன, அங்கு நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து, இரு பாலினத்தவர்களும் ஒன்றாகக் கலந்துகொள்வது அனுமதிக்கப்படவில்லை.
மேலும், அந்த மனுவில், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அன்-நபவியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் 'வுது' (சுத்தம்) செய்ய தனித்தனி இடைவெளிகள் அல்லது அறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
குர்ஆனும் ஹதீஸும் பாலின அடிப்படையில் பிரிக்கப்படுவதில்லை என்று மனுவில் கூறப்பட்டாலும், இந்த மனுவில் இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் பாலினக் கலப்பு பற்றிய கொள்கைகளுக்கு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறியது. இஸ்லாமிய இறையியல் வல்லுனர்களிடையே வேறுபட்ட கருத்துகள் இருப்பதை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தனது மனுவில் ஒப்புக்கொள்கிறது.
“ஈத் தொழுகையில் பெண்கள் பங்கேற்பதற்கு இஸ்லாம் சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. இஸ்லாம் வகுத்துள்ள ஒரே நிபந்தனை பெண்களுக்கான தனி ஏற்பாடு மட்டும்தான். இந்தியாவில், சில மசூதிகள் மற்றும் அமைப்புகள் பெண்களுக்கு தனி இடத்தில் தனி வஜு (சுத்தம்) செய்ய அமைப்பு மற்றும் தனி நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் போன்ற போதுமான நடவடிக்கைகளுடன் ஈத் தொழுகைகளை ஏற்பாடு செய்கின்றன” என்று அந்த பிரமாணப் பத்திரம் கூறுகிறது.
மேலும், முஸ்லிம் பெண்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை செய்ய ஜமாஅத்தில் சேருவதை இஸ்லாம் கடமையாக்கவில்லை அல்லது பெண்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தொழுகையை ஜமாஅத்தில் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், அது இஸ்லாமிய ஆண்களுக்கு கட்டாயமாக உள்ளது. முஸ்லீம் பெண் வேறாக வைக்கப்படுகிறார்கள். ஏனென்றால், இஸ்லாத்தின் கோட்பாடுகளின்படி, மஸ்ஜிதிலோ அல்லது வீட்டிலோ பிரார்த்தனை செய்வதற்கு மத வெகுமதி அல்லது சவாப் உரிமை உண்டு.
அந்த மனுவில், அரசு நடவடிக்கையின் பின்னணியில் இல்லை என்ற கேள்விகளை எழுப்புகிறது என்று வாரியம் வாதிட்டது. “வழிபாட்டுத் தலங்களில் (மசூதிகளில்) மதத்தின் நடைமுறைகள் முற்றிலும் தனியார் அமைப்புகள் மசூதிகளின் முத்தவாலிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன” என்று கூறியுள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் ஒரு ஆலோசனைக் கருத்தை மட்டுமே வெளியிட முடியும் என்று கூறியுள்ளது.
“மத நம்பிக்கையாளர்களின் மதப் பழக்கவழக்கங்களுக்காக முற்றிலும் தனிப்பட்ட முறையில் நிர்வகிக்கப்படும் மத இடத்தின் விரிவான ஏற்பாடுகளின் அரங்கில் நீதிமன்றம்கூட நுழைய முடியாது” என்று வாரியம் கூறியுள்ளது. தற்போதைய மனுவில் உள்ள கேள்விகள் முற்றிலும் மத நம்பிக்கைகள் மற்றும் மத கொள்கைகளுடன் தொடர்புடையவை என்பதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு "பொருத்தமானதல்ல" என்று இந்த பிரமாணப் பத்திரம் கருதுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 21, 25 மற்றும் 29 ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்தி மதப் பழக்கவழக்கங்களை நீதிமன்றம் ஆராயவோ அல்லது திருத்தவோ கூடாது என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஃபத்வாக்கள் மூலம் பெண்களின் நுழைவை அனுமதிக்காதது குறித்த இந்த மனுவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியது. இது வெறும் மத நூல்கள் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கருத்து என்றும், அதற்கு சட்டப்பூர்வ சக்தி இல்லை என்றும் வாரியம் கூறியது. இருப்பினும், எந்தவொரு முஸ்லிமும் விருப்பப்படி, மத நூல்களின் விளக்கங்களின் அடிப்படையில் அத்தகைய ஃபத்வாவைத் தேடலாம். நீதித்துறை உத்தரவுகளால் அதைத் தடுக்க முடியாது, ஏனெனில் அது மத நம்பிக்கையின் உரிமை மற்றும் ஒரு தனிநபர சுதந்திரத்தை நேரடியாகத் தாக்குவது ஆகும் என்று வாரியம் கூறியுள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள “யாஸ்மீன் ஜுபர் அகமது பீர்சாதே எதிரி இந்திய அரசு வழக்கைப் பற்றிக் குறிப்பிடுகையில், இது அதே விஷயத்துடன் தொடர்புடையது, அதாவது மசூதிகள்/மசூதிகளில் முஸ்லிம் பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கை வாரியம் எடுத்துக்காட்டுகிறது.
நீதிமன்றத்தின் பார்வை என்ன?
2019-ம் ஆண்டில், புனேவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் “யாஸ்மீன் ஜுபர் அகமது பீர்சாதே எதிரி இந்திய அரசு விவகாரத்தில் மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றத்திடம் வழிகாட்டுதல்களைக் கோரினர்.
யாஸ்மீன் ஜுபர் அகமது பீர்சாதே மற்றும் அவரது கணவர் ஜுபர் அகமது நசீர் பீர்சாதே ஆகியோரின் மனுவில், "குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் பாலினப் பிரிவினை தேவை என்று எதுவும் இல்லை" என்று வாதிட்டனர். "பெண்கள் மசூதிக்குள் நுழைவதைத் தடுக்கும் செயல் செல்லாது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. இத்தகைய நடைமுறைகள் ஒரு தனிநபராக ஒரு பெண்ணின் அடிப்படை கண்ணியத்தை வெறுப்பது மட்டுமல்ல, அரசியலமைப்பின் 14, 15, 21 மற்றும் 25 வது பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று வாதிட்டனர்.
இந்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஏ.ஐ.எம்.பி.எல்.பி மசூதிகளில் பிரார்த்தனை செய்ய பெண்களின் நுழைவு அனுமதிக்கப்படுகிறது என்று கூறியது. பெண்களின் நுழைவைத் தடுக்கும் எந்த ஃபத்வாவும் புறக்கணிக்கப்படலாம் என்றும் அது கூறியது.
இந்த விவகாரம் தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அவர் பிப்ரவரி 2020-ல், “காந்தரு ராஜீவரு எதிரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம்” என்ற வழக்கின் தீர்ப்பில், அதை இதேபோன்ற மற்றொரு வழக்குடன் இணைத்தார். அதில் கேரளாவின் சபரிமலை கோயில் உட்பட பல்வேறு மதங்கள் மற்றும் மத இடங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான சட்ட மற்றும் அரசியலமைப்பு சிக்கல்களை நீதிமன்றம் கையாண்டது.
“காந்தரு ராஜீவரு எதிரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம்" என்ற வழக்கின் உத்தரவில் நீதிமன்றம் ஏழு சட்டக் கேள்விகளை உருவாக்கி, மறுஆய்வு மனுவில் பெரிய அமர்வுக்கு அனுப்பியது. அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் மத சுதந்திரத்திற்கான உரிமையின் நோக்கம் மற்றும் வரம்பு மற்றும் பிரிவு 25-ன் கீழ் நபர்களின் உரிமைகள் மற்றும் பிரிவு 26-ன் கீழ் மத பிரிவுகளின் உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு ஆகிய கேள்விகள் அடங்கும். அரசியலிமைப்பின் 25-வது பிரிவு மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் அறநெறி என்ற வார்த்தையின் நோக்கம் மற்றும் அளவு மற்றும் அது அரசியலமைப்பு ஒழுக்கத்தை உள்ளடக்கியதா என்றும் மத நடைமுறைகளை நீதித்துறை மறுஆய்வு நோக்கத்துடன் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
2018 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுவைப் போலவே இந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.