சர் ஜான் மார்ஷல், கி.மு 3300 முதல் 1300 வரை சிந்து பள்ளத்தாக்கில் செழித்து வளர்ந்த வெண்கல கால கலாச்சாரத்தை கண்டுபிடித்ததாக அறிவித்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து வரும் புதிரான, சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை, புரிந்துகொள்ள வழிவகை செய்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Mystery of the Indus script, and the over 100 failed deciphering attempts
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கல்வெட்டுவியலாளர்கள், மொழியியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஹரப்பான்களின் எழுத்து முறையைப் புரிந்துகொள்ள 100 க்கும் மேற்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் வெற்றி பெறவில்லை.
தென்னிந்தியாவின் 90% க்கும் அதிகமான குறியீடுகளுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துவடிவ குறியீடுகளுக்கும் இடையே உள்ள ”ஒற்றுமைகளை" கண்டறிந்த தமிழக தொல்லியல் துறையின் 'தமிழ்நாட்டின் சிந்து அடையாளங்கள் மற்றும் எழுத்துவடிவ குறியீடுகள்' என்ற ஆய்வின் வெளியீட்டைத் தொடர்ந்து ஸ்டாலினின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது, தமிழ்நாட்டில் உள்ள 140 தொல்லியல் தளங்களில் காணப்படும் 15,000 பானைத் துண்டுகளின் குறியீடுகளை சிந்து சமவெளி இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகள் உட்பட 4,000 கலைப்பொருட்களுடன் ஒப்பிட்டு, 42 "அடிப்படை அடையாளங்கள்", 544 "மாறுபாடான வடிவங்கள்" மற்றும் 1,521 "கலவை வடிவங்கள்" ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளது.
சிந்து எழுத்துக்களில் உள்ள அடையாளங்கள்
கி.மு 2600 மற்றும் 1900 க்கு இடையில் உச்சநிலையை அடைந்த சிந்து நாகரிகம், இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் 800,000 சதுர கி.மீக்கு மேல் பரவி இருந்தது. அந்த காலக் கட்டத்தில், வணிகம், வரிவிதிப்பு மற்றும் வடிகால் ஆகியவற்றின் விரிவான அமைப்புடன் சிந்து நாகரிகம் உலகின் அதிநவீன நகர்ப்புற கலாச்சாரமாக இருந்தது.
சிந்து இடங்களில் காணப்படும் முத்திரைகள் மற்றும் டெரகோட்டா வடிவங்கள் மீதான வெட்டெழுத்துக்களில் அதிக அளவில் பல்வேறு குறியீடுகள் உள்ளன - மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உருவங்கள், மற்றும் மறந்துபோன எழுத்து வடிவத்தின் பகுதிகள் என்று அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இருப்பினும், கூறப்படும் எழுத்து வடிவத்தில் உள்ள சின்னங்களின் எண்ணிக்கையில் உடன்பாடு இல்லை.
புரிந்து கொள்ளும் முயற்சியில் முன்னோடியாக இருந்த தொல்பொருள் ஆய்வாளர் எஸ்.ஆர் ராவ், 1982 இல் எழுத்து வடிவத்தில் 62 அடையாளங்கள் இருப்பதாகக் கூறினார். இதை ஃபின்னிஷ் இண்டாலஜிஸ்ட் அஸ்கோ பர்போலா மறுத்தார், இந்த விஷயத்தில் மிகவும் அதிகாரப்பூர்வ குரல்களில் ஒருவரான, அஸ்கோ பர்போலா 425 அடையாளங்கள் இருப்பதாக கூறினார் (சிந்து ஸ்கிரிப்டைப் புரிந்துகொள்வது (1994)). பின்னர், 2016 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆய்வாளரும் கல்வெட்டு ஆசிரியருமான பிரையன் கே.வெல்ஸ் 676 அடையாளங்கள் இருப்பதாக பரிந்துரைத்தார்.
சிந்து எழுத்துக்களின் தன்மை பற்றிய பல அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளில் இதுவே முதன்மையானது.
மொழி பற்றிய விவாதம்
சிந்து எழுத்து (மற்றும் மொழி) மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பைக் கண்டறிய அறிஞர்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர். இது இந்தியாவின் மக்கள் மற்றும் கலாச்சாரத்தின் பூர்வீகத்தன்மையை வலியுறுத்தி, சிந்து சமவெளி நாகரிகத்தை வேத காலத்துடன் இணைக்கும் பெரிய தேசியவாத திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த குரல்களில் எஸ்.ஆர்.ராவ் மிகவும் குறிப்பிடத்தக்கவர் - ஆனால் மற்ற நிபுணர்கள் ஏற்கவில்லை.
ராவ் "சிந்து மொழியானது வட இந்தியாவின் பெரும்பாலான நவீன மொழிகளின் மூல மொழியான சமஸ்கிருதத்தின் மூதாதையர் என்பதை நிரூபிக்க உறுதியாக இருக்கிறார், எனவே சமஸ்கிருதம் மேற்கிலிருந்து மத்திய ஆசியா வழியாக இந்தியாவின் மீதான இந்தோ-ஆரிய (இந்தோ-ஐரோப்பிய) 'படையெடுப்பு'களின் விளைபொருளாக இல்லை, மாறாக பூர்வீக இந்திய (சிந்து) மேதையின் வெளிப்பாடாகும்” (இழந்த மொழிகள்: உலகின் புரிந்துகொள்ளப்படாத எழுத்துக்களின் புதிர் (2008)) என்று ஆண்ட்ரூ ராபின்சன் எழுதினார்.
கடந்த ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வைதிக ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை சிந்து எழுத்துக்களுடன் ஏன் இணைக்க முடியவில்லை என்பதை பர்போலா விளக்கினார். "சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பிறகு கி.மு இரண்டாம் மில்லினியத்தில் மட்டுமே ஆரியர்கள் சிந்து சமவெளிக்கு வந்ததாகக் கூறுவதற்கு தொல்பொருள் சான்றுகள் உள்ளன," என்று பர்போலா கூறினார்.
1964 இல் தொடங்கிய பர்போலாவின் ஆய்வுகள், கி.மு 2500 இல் அனைத்து முக்கிய கலாச்சாரங்களாலும் பயன்படுத்தப்பட்ட வகையான லோகோசிலபிக் எழுத்து வடிவத்தைச் சேர்ந்த சிந்து எழுத்துகள் திராவிட வேர்களைக் கொண்டுள்ளது என்று முடிவு செய்தது. "அடிப்படையில் அடையாளங்கள் முழுமையான வார்த்தைகளை தாங்களாகவே குறிக்கும் படங்கள்" என்று பர்போலா கூறினார்.
எழுத்துவடிவம் 'ரீபஸ்' (புதிர்ச் சின்னங்கள் கொண்டு எழுத்துக்களை உணர்த்துதல்) எனப்படும் ஒரு கருத்தைப் பயன்படுத்தியது, இதில் பிக்டோகிராம்கள் பொருள் அல்லது செயலுக்கான வார்த்தையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, அல்லது அர்த்தத்தைப் பொருட்படுத்தாமல் ஒத்த ஒலியைக் கொண்ட வேறு எந்த வார்த்தையையும் குறிக்கின்றன.
எனவே, சிந்து முத்திரைகளில் ஏராளமாகக் காணப்படும் மீன் அடையாளம் உண்மையான மீனைக் குறிக்க வாய்ப்பில்லை என்று பர்போலா கூறினார். மாறாக, அவர் அதை ‘ஸ்டார்’ (விண்மீன்) உடன் இணைத்தார் - மீன் (மின் அல்லது மீன்) என்ற திராவிட வார்த்தையின் ஹோமோஃபோன் (ஒரே உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் ஆனால் வேறு அர்த்தம்).
இந்த கருதுகோளுடன் தொடங்கி, பர்போலா அனைத்து கிரகங்களின் பழைய தமிழ் பெயர்களையும் சிந்து எழுத்துக்களில் கண்டுபிடித்ததாகக் கூறினார். அவரது கோட்பாடு மேற்கத்திய மற்றும் இந்திய அறிஞர்களிடமிருந்து ஆதரவை பெற்றது, இதில் நாட்டின் சிந்து எழுத்துக்களின் முன்னணி ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் உட்பட பலர் ஆதரவு தெரிவித்தனர்.
இன்றைய பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் ஒரு சிறிய இனக்குழுவால் பேசப்படும் ஒரு திராவிட மொழியான பிராகுயியின் இருப்பு, திராவிடக் கருதுகோளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
‘எழுத்து மட்டும் இல்லை’
2000 களின் முற்பகுதியில் இருந்து, சிந்து "எழுத்து" என்று அழைக்கப்படுவது எந்த மொழியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த கருதுகோள் முக்கியமாக அனைத்து சிந்து கல்வெட்டுகளும் மிகக் குறுகியவை - சராசரியாக ஐந்து எழுத்துக்கள் மட்டுமே கொண்டவை - மிக நீளமானது 26 எழுத்துக்கள் மட்டுமே என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது.
2004 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், வரலாற்றாசிரியர் ஸ்டீவ் ஃபார்மர், கணினி மொழியியலாளர் ரிச்சர்ட் ஸ்ப்ரோட் மற்றும் இந்தியவியலாளர் மைக்கேல் விட்செல் ஆகியோர் சிந்து "எழுத்து" ஒரு மொழி அடிப்படையிலான எழுத்து முறையை உருவாக்கவில்லை, ஆனால் முக்கியமாக அரசியல் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த மொழியற்ற சின்னங்களை உள்ளடக்கியதாகக் கூறினர்.
ஆய்வறிக்கை (சிந்து எழுத்துக்களின் சரிவு: கல்வியறிவு பெற்ற ஹரப்பா நாகரிகத்தின் கட்டுக்கதை) கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சிந்து கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்களை விட எழுத்து முறைகள் நீளமான நூல்களை உருவாக்க வேண்டும் என்ற முதன்மைக் கூற்றை பர்போலா நிராகரித்தார் - எகிப்திய ஹைரோகிளிஃபிக் எழுத்து ஒத்த தன்மை கொண்டது என்று சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், சில சமீபத்திய ஆய்வுகள், ஸ்டீவ் பார்மர், ரிச்சர்ட் ஸ்ப்ரோட் மற்றும் மைக்கேல் விட்செலின் சில முடிவுகளை ஆதரித்துள்ளது. சிந்து எழுத்துக்களை ஆய்வு செய்த மென்பொருள் பொறியாளர் பஹாதா அன்சுமாலி முகோபாத்யாய், ஹரப்பன்கள் "படிக்காதவர்களாக" இருக்கவில்லை என்றாலும், சின்னங்கள் "எந்த மொழியின் வார்த்தைகளையும் ஒலிப்பு ரீதியாக உச்சரிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
2023 இல் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் தகவல்தொடர்பு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், பொறிக்கப்பட்ட சிந்து முத்திரைகள் முக்கியமாக வரி முத்திரைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் வரைப்பட்டிகை வரி வசூல், கைவினைத் தயாரிப்பு அல்லது வர்த்தகத்திற்கான அனுமதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று வாதிட்டார். சிந்து எழுத்துக்கள் மத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை, அல்லது பண்டைய வேத அல்லது தமிழ் தெய்வங்களின் பெயர்களை குறியீடாக்க ஒலிப்பு வார்த்தைகளை உச்சரிக்கவில்லை என்று முகோபாத்யாய் எழுதினார்.
”அலைந்து திரிபவர்கள், அரசர்கள், வணிகர்கள்: அதன் மொழிகள் மூலம் இந்தியாவின் கதை (2021)” (Wanderers, Kings, Merchants: The Story of India through its Languages (2021)) என்ற புத்தகத்தின் ஆசிரியரும் மொழியியலாளரும் பெக்கி மோகன், கடந்த ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் சிந்து முத்திரைகளில் உள்ள அடையாளங்களை எழுத்துக்களின் ஒரு பகுதியாகக் குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார். அவை ஹால்மார்க்கிங் அமைப்பாக இருக்க வேண்டும். "இன்றும் கூட இந்தியாவில் உள்ள தோபிகளுக்கு அவற்றின் சொந்த அடையாளங்கள் உள்ளன, அவை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவை நீங்கள் அழைக்கும் மொழி அல்ல," என்று பெக்கி மோகன் கூறினார். "பெரும்பாலான வரலாற்றுக்கு முந்தைய சமூகங்கள் இன்று நாம் எழுதும் விஷயங்களை எழுதவில்லை. எந்தவொரு சமூகமும் எழுத்தில் பதிவு செய்யும் முதல் விஷயம் வணிகத் தகவல்களாக இருக்கலாம்,” என்றும் பெக்கி மோகன் கூறினார்.
சின்னங்களின் பொருளைப் புரிந்துகொள்வது முக்கியம். அன்சுமாலி முகோபாத்யாய், "லீனியர் பி (ஆரம்பகால கிரேக்க எழுத்துக்களில்) புரிந்து கொள்ளப்பட்டபோது, சில அறிஞர்கள் ஹோமரின் இலியட் மற்றும் ஒடிஸியின் துணுக்குகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்பினர், ஆனால் அதற்குப் பதிலாக அரண்மனை புத்தகக் காப்புப் பதிவைக் கண்டுபிடித்தனர். ஆயினும்கூட, இது அரண்மனை பொருளாதாரம் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்களை வழங்கியது.
"அதேபோல், சிந்து எழுத்துக்களைப் பொறுத்தவரை, அது வணிகத் தகவல்களைத் தருகிறது என்றாலும், அந்த நேரத்தில் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பற்றி இது நிறைய சொல்ல முடியும்," என்று முகோபாத்யாய் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.