Narayan Rane arrest : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான அடித்தளத்தை வலுவாக அமைக்க பாஜக, மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், கொங்கன் பகுதிகளுக்கு அனுப்பியது. சிவசேனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிர்ஹான் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட சிவசேனாவின் கோட்டைகளில் வெற்றியை உறுதி செய்வதற்காக இந்த பயணம் ஏற்பாடானது.
ரானே மற்றும் சேனாவுக்கு இடையேயான மோதல் மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று ரானே கைது செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் தொடர்பாக சிவசேனா பேசிய போது, முதல்வருக்கு எதிராக ரானே பேசியது தொண்டர்களுக்கு கோபத்தை மூட்டியது என்று கூறியது. சிவசேனா தெருக்களில் செய்த வன்முறைகள் பாஜகவிற்கு ஆதரவாக முடியலாம் என்று பாஜக எதிர்பார்க்கிறது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற வன்முறைகள் மூலம், சிவசேனாவினால் அணி திரட்ட முடியும் என்பதை காட்டினாலும், சிவசேனா தலைமையில் நடைபெறும் மஹா விகாஸ் அகாடி அரசு ரானேவை கைது செய்ய தன்னுடைய தனிப்பட்ட வழியை கொண்டிருக்கிறது தெளிவாகிறது. 2019ம் ஆண்டில் ரானேவை கட்சிக்குள் கொண்டு வர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உட்பட மாநில பாஜக தலைவர்கள் பணியாற்றினார்கள். அவருடைய கருத்துகளில் இருந்து அவர்கள் விலகி இருந்தாலும், அவர் பின்னாள் அனைவரும் ஒரே அணியாக திரண்டனர்.
ரானே மற்றும் தாக்கரே இடையேயான சண்டையின் மற்றொரு அத்தியாயம் இந்த கைது. சிவசேனாவில் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றிய ரானே, தாக்கரேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2005ம் ஆண்டு கட்சியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், தற்போது பாஜகவில் மத்திய அமைச்சராக பணியாற்றுகின்ற போதும் தாக்கரேவை இலக்காக வைத்து விமர்சனங்களை எழுப்பினார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ரானே பாஜகவில் இணைந்தார்.
கடந்த வாரம் ஜன் ஆசிர்வாத் யாத்திரையின் தொடக்கத்திலிருந்து, ரானே தனது திட்டத்தில் தெளிவாக இருந்தார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய பிறகு சேனாவின் தொகுதிகளான மும்பை, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் கொங்கன் பகுதியில் உள்ள சிந்துர்க் போன்ற பகுதிகளை கைப்பற்ற முடிவு செய்த அவர், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு அரும். பி.எம்.சியில் முப்பது ஆண்டுகால சிவசேனா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும்” என்று கூறினார்.
மும்பை மற்றும் தானே உள்ளிட்ட 10 மாநகராட்சிகளுக்கும், 25 மாவட்ட பரிஷத்துகளுக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களை கட்சிகள் சிறு சட்டமன்ற தேர்தல்கள் என்று வரையறுப்பதுண்டு.
சேனாவின் கோட்டையான சிவாஜி பூங்காவில் உள்ள பால் தாக்கரே நினைவிடத்திற்கு வருகை தந்தபோது, அவரது யாத்திரையின் முதல் நாளிலிருந்து ரானேவை விமர்சிக்க துவங்கியிருந்தனர் சிவசேனா தொண்டர்கள். ரானேவை புறக்கணித்துவிட்டு வேறு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தருவோம் என்று சேனா தலைவர்கள் கூறியதால் அந்த நிகழ்வு அமைதியாக நடைபெற்றது. ஆனால் ரானே அங்கிருந்து சென்ற போது, கட்சியின் பழைய காவலாளிகளில் ஒருவர் சுத்திகாரன் என்று கூறி நினைவிடத்தை சுத்தம் செய்துவிட்டார்.
தெரு போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகள் சேனாவுக்கும், சேனா தொண்டர்களுக்கும் மிகவும் பழக்கமானது. . சேனா அரசியல் எப்போதுமே உணர்ச்சிபூர்வமான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது … இந்த சர்ச்சை மும்பை மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் அதிக எண்ணிக்கையில் அணிதிரண்டு, பாஜகவுக்கு எதிராக ஒன்றாக நிற்கும் வாய்ப்பை எங்கள் தொண்டர்களுக்கு வழங்கியுள்ளது என்று சிவசேனா தலைவர் ஒருவர் கூறினார்.
பிஎம்சி தேர்தலில் ரானேவின் வருகை எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார் மற்றொரு சிவசேனா தலைவர். 2015ம் ஆண்டில், பாந்த்ரா (கிழக்கு) தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் ரானே போட்டியிட்டு, சேனாவினால் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய இடத்தை நாங்கள் அவருக்குக் காட்டியுள்ளோம், ”என்றார்.
தாக்கரேவுக்கு எதிராக அப்பட்டமாக பேசுவதால் பெயர்பெற்ற 69 வயதான ரானேவுக்கு ஒரே ஒரு பணி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது மட்டோஸ்ரீ மற்றும் தாக்கரே குடும்பத்தினரை தொடர்ந்து தாக்கி விமர்சனம் செய்வது மட்டுமே என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்கரேக்களுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்கள் என்று வரும்போது, பாஜகவில் இதை நம்பிக்கையுடன் செய்ய யாருமில்லை. சிவசேனாவுடனான நீண்ட தொடர்பைக் கருத்தில் கொண்டு, ரானேவுக்கு சிவசேனாவின் அனைத்து அம்சங்களும் நன்கு தெரியும் என்று பாஜகவை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்தார். குடிமை அமைப்பு தேர்தல்களுக்கு முன்னதாக, கொங்கன் பிராந்தியத்தில் அவரை தனது முகமாக முன்னிறுத்த கட்சி விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.