பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் 2024ஆம் ஆண்டுக்குள் பொது விநியோக திட்டம் மற்றும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு போன்ற அரசு திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படும் அரிசி சத்தானதாக இருக்கும் என அறிவித்தார்.
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாட்டில் உணவுப் பொருட்களுக்கான தரத்தை நிர்ணயிக்கிறது. உணவு செறிவூட்டலையும் வரையறுக்கிறது. இது உணவின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஒரு உணவில் அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துக்களின் உள்ளடக்கத்தை வேண்டுமென்றே அதிகரிக்கிறது. மேலும், சுகாதாரத்திற்கு குறைந்தபட்ச ஆபத்துடன் ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது.
அரிசி செறிவூட்டல் என்பது வழக்கமான அரிசியில் நுண்ணூட்டச்சத்துக்களைச் சேர்க்கும் ஒரு செயல்முறையாகும். நுண்ணூட்டச்சத்துக்கள் உணவுத் தேவைகளை மனதில் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
செறிவூட்டப்பட்ட அரிசியானது பூச்சுதல் (COATING), நீட்டித்தல் (EXTRUSION), தூவல் (DUSTING), பாத் (PATH) ஆகிய முறைகளில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் நீட்டித்தல் (EXTRUSION) சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.
எக்ஸ்ட்ரூடர் இயந்திரத்தைப் பயன்படுத்தி கலவையிலிருந்து செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல்களை தயாரிப்பது இதில் அடங்கும். அந்த அரிசி கர்னல்கள் பின்னர் வழக்கமான அரிசியுடன் கலக்கப்பட்டு செறிவூட்டப்பட்ட அரிசியை உற்பத்தி செய்கின்றன.
Fortified Rice Kernel(FRK) ஐ உருவாக்க எக்ஸ்ட்ரூஷன் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?
எக்ஸ்ட்ரூஷன் டெக்னாலஜியில், உலர்ந்த அரிசி மாவு நுண்ணூட்டச்சத்துக்களின் ப்ரீமிக்ஸ் உடன் கலக்கப்படுகிறது, மேலும் இந்த கலவையில் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. இந்த கலவை பின்னர் வெப்பம் நிறைந்த இரட்டை-ஸ்க்ரூ எக்ஸ்ட்ரூடருக்குள் செல்கிறது. பின்னர் அரிசி வடிவமாக மாற்றப்படுகிறது. இந்த கர்னல்கள் உலர்த்தப்பட்டு, குளிர்ந்து மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. FRK ஆனது குறைந்தபட்சம் 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
அதாவது அரிசி மாவில் பொடிகளாக மாற்றப்பட்ட வைட்டமின், இரும்பு சத்து, துத்தநாக சத்து, போலிக் அமிலத்தைக் கலந்து ஈரப்பதத்து டன் கூடிய கலவை உருவாக்கப் படும். அந்தக் கலவை இயந்திரம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும். ஆனால், இந்த அரிசியானது நேரடியாக சமைக்க முடியாது மற்ற அரிசிகளோடு சேர்த்து தான் சமைக்க முடியும்.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, செறிவூட்டப்பட்ட அரிசி கருவின் வடிவம் மற்றும் அளவு முடிந்தவரை சாதாரண அரிசியை போல இருக்க வேண்டும். தானியத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 5 மிமீ மற்றும் 2.2 மிமீ இருக்க வேண்டும் என கூறுகிறது.
அரிசி செறிவூட்டல் ஏன் தேவைப்படுகிறது?
இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ளது. உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகில் உள்ள வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. அதேபோல் பெண்களுக்கு அதிக அளவில் ரத்த சோகை ஏற்படுகிறது. உலகளாவிய பசி குறியீட்டில் (GHI) 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. இது 'தீவிர பசி' பிரிவில் உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு உணவுகளை செறிவூட்டுவது மிகவும் பொருத்தமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முக்கிய உணவுகளில் அரிசியும் ஒன்று. . இந்தியாவில் தனிநபர் அரிசி நுகர்வு மாதத்திற்கு 6.8 கிலோ ஆகும். எனவே, அரிசியை நுண்ணூட்டச்சத்துக்களுடன் வலுப்படுத்துவது ஏழைகளின் உணவை நிரப்புவதற்கான ஒரு விருப்பமாகும்.
செறிவூட்டலுக்கான தரநிலைகள் என்ன?
அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசி 1 கிலோ வழக்கமான அரிசியுடன் கலக்கப்பட வேண்டும்.
FSSAI விதிமுறைகளின்படி, 1-கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு (28 மில்லி கிராம்-42.5 மில்லி கிராம்), ஃபோலிக் அமிலம் (75-125 மைக்ரோ கிராம்) மற்றும் வைட்டமின் B-12 (0.75-1.25 மைக்ரோ கிராம்) இருக்க வேண்டும். கூடுதலாக, அரிசி நுண்ணிய ஊட்டச்சத்துக்களுடன், தனித்தனியாக அல்லது கலவையில், துத்தநாகம் (10 மில்லி கிராம் – 15மில்லி கிராம்), வைட்டமின் A (500-750 மைக்ரோ கிராம் ஆர்.இ), வைட்டமின் B1 (1மில்லி கிராம் -1.5மில்லி கிராம்), வைட்டமின் B2 (1.25 மில்லி கிராம்-1.75 மில்லி கிராம்), வைட்டமின் B3 (12.5 மில்லி கிராம்-20 மில்லி கிராம்) மற்றும் வைட்டமின் B6 ஒரு கிலோவிற்கு (1.5 மில்லி கிராம் -2.5 மில்லி கிராம் ) இருக்க வேண்டும்.
செறிவூட்டப்பட்ட அரிசியை சமைப்பது எப்படி?
செறிவூட்டப்பட்ட அரிசியை சமைப்பதற்கு எந்த சிறப்பு செய்முறையும் தேவையில்லை. அரிசியை சமைப்பதற்கு முன் வழக்கம்போல் சுத்தம் செய்து கழுவ வேண்டும். இந்த அரிசி சமைத்த பின்னரும் முன்பு இருந்த அதே நுண்ணூட்டச்சத்து அளவுகளை தக்க வைத்துக் கொள்ளும்.
செறிவூட்டலுக்கான இந்தியாவின் திறன் என்ன?
கிட்டத்தட்ட 2,690 அரிசி ஆலைகள் செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்திக்கான கலப்பு அலகுகளை நிறுவியுள்ளன. மேலும் 14 முக்கிய மாநிலங்களில் தற்போதைய கலவை திறன் 13.67 லட்சம் டன்னாக உள்ளது. FRK உற்பத்தி 2 ஆண்டுகளில் 7,250 டன்னிலிருந்து 60,000 டன்னாக உயர்ந்துள்ளது.
தற்போதுள்ள அரிசி ஆலைகள் செறிவூட்ட வசதிகளாக மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான செலவு உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவைப் பொறுத்து மாறுபடும். ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 5 டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அரிசி ஆலையாக மேம்படுத்த ரூ.15 முதல் 20 லட்சம் முதலீடு தேவைப்படும் என அமைச்சகம் கூறியுள்ளது.
செறிவூட்டலுக்கான செலவு என்ன?
இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி -12 ஆகிய மூன்று நுண்ணூட்டச்சத்துக்களுடன் FRK உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.0.60 ஆக இருக்கும் என்று அமைச்சகம் மதிப்பிடுகிறது. இந்த செலவை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். இந்த செலவை அரிசி ஆலைகளுக்கு அரசு செலுத்தும்.
செறிவூட்டப்பட்ட அரிசியை அடையாளம் காண்பது எப்படி?
செறிவூட்டப்பட்ட அரிசி சணல் பைகளில் லோகோ (‘+F’) மற்றும் “இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 உடன் செறிவூட்டப்பட்டது” ஆகிய வாசகத்துடன் கட்டாயம் அச்சிடப்படும்.
செறிவூட்டப்பட்ட அரிசி அரசால் முன்பு விநியோகிக்கப்பட்டதா?
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் 2019-20ம் ஆண்டிலிருந்து தொடங்கி மூன்று வருட காலத்திற்கு பொது விநியோக முறையின் கீழ் (PDS) “அரிசி செறிவூட்டல் என்ற திட்டத்தை மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.174.64 கோடி மதிப்பில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் 15 மாவட்டங்களில் கவனம் செலுத்துகிறது.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உட்பட 6 மாநிலங்கள் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கத் தொடங்கியுள்ளன. ஜூன் 2021 வரை சுமார் 2.03 லட்சம் டன் விநியோகிக்கப்பட்டது. மேலும் நான்கு மாநிலங்கள் செப்டம்பரில் இந்த திட்டத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நாடுகள் இதனை முயற்சித்துள்ளதா?
அமெரிக்கா, பனாமா, கோஸ்டாரிகா, நிகரகுவா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சாலமன் தீவுகள் ஆகிய ஏழு நாடுகள் அரிசி செறிவூட்டலை கட்டாயமாக்கியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.