அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நாளில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) இருக்கும் நாசா விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ், விண்வெளியில் இருந்தே வாக்களிப்பார் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 200 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது மற்றும் பூமியை ஒரு மணி நேரத்திற்கு 17,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ், சிறப்பு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்க உள்ளார்.
இது எப்படி சாத்தியம்?
1997-ம் ஆண்டில், டெக்சாஸ் சட்டமன்றங்கள் நிறைவேற்றிய ஒரு மசோதா விண்வெளி வீரர்களுக்கான தொழில்நுட்ப வாக்களிப்பு செயல்முறையை நிறுவியது. இந்த மசோதா விண்வெளியில் இருந்து வாக்களிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குகிறது. அதன்படி, இரகசிய வாக்களிப்பு முறை மூலம் அவர்கள் வாக்களிக்க முடியும். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, விண்வெளி வீரர்களான எட்வர்ட் மைக்கேல் ஃபின்கே மற்றும் கிரெக் சாமிட்டோஃப் ஆகியோர் ஐ.எஸ்.எஸ்-ல் இருந்தனர். இதனையடுத்து அவர்கள் இந்த பாதுகாப்பான இரகசிய வாக்களிப்பு முறை மூலம் வாக்களித்தனர்.
1997 ஆம் ஆண்டில், நாசாவின் டேவிட், ரஷ்ய விண்வெளி நிலையமான மிர்ரில் இருந்தபோது இந்த விதியைப் பயன்படுத்தி வாக்களித்த முதல் விண்வெளி வீரர் ஆனார்.
இது எப்படி இயங்குகிறது?
ஆரம்ப வாக்களிப்பு காலத்திலோ அல்லது தேர்தல் நாளிலோ விண்வெளி விமானத்தில் இருக்கும் ஒருவர் பெடரல் அஞ்சலட்டை விண்ணப்பம் (FPCA) மூலம் விண்ணப்பித்தால் இந்த முறையால் வாக்களிக்க முடியும் என்று 1997 மசோதா கூறுகிறது. ``தேர்தல் காலத்தில் விண்வெளி விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு இரகசிய வாக்குச்சீட்டை அனுப்பும் மற்றும் பெறும் ஒரு முறையை நாசா மாநில செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும்” என்று அந்த மசோதா விதி கூறுகிறது.
நாசா வெளியிட்டுள்ள பதிவின்படி, விண்வெளி நிலையம் செல்லும் ஒருவருடம் முன்பே இந்த வாக்களிப்பு செயல்முறை தொடங்குகிறது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருக்கும்போது எந்தத் தேர்தல்களில் (உள்ளூர் / மாநில / கூட்டாட்சி) பங்கேற்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், விண்வெளி வீரர்களுக்கு "வாக்காளர் பதிவு மற்றும் ஆஜராகாத வாக்குச்சீட்டு கோரிக்கை - கூட்டாட்சி அஞ்சல் அட்டை விண்ணப்பம்" என்று அழைக்கப்படும் நிலையான படிவம் வழங்கப்படுகிறது.
அமெரிக்க தேர்தல் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு சிஸ்டம் விண்வெளி வீரர்களுடன் இணைக்கப்படும். பின்னர் அவர்களுக்கு தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் தனித்துவமான சான்றிதழ்களைப் பயன்படுத்தி தங்கள் வாக்கை செலுத்தலாம். வாக்களித்த பின்னர், அவர்கள் அதை கவுண்டி எழுத்தர் அலுவலகத்திற்கு டவுன்லிங்க் செய்வார்கள். இந்த வழியில் விண்வெளி வீரர்கள் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"