ஸ்விக்கி, சோமேட்டோ தளங்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூல்… மக்களுக்கு பாதிப்பா?

உணவு டெலிவரி நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி வசூல் செய்தால், உணவகங்கள் வரி வசூலிக்கக் கூடாது. இதன் மூலம் உணவகத்தில் இரு பில்லிங் சிஸ்டம் இருக்க வேண்டும் ஒன்று உணவகத்திற்கு வந்து சாப்பிடுபவர்களுக்கும், மற்றொன்று உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவானது ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த ஒப்புதல் காரணமாக, உணவு பிரியர்கள் இனி உணவுகளின் விலை அதிகரிக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர். இணையதளத்திலும் பல தரப்பான விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன. உணவு டெலிவரி நிறுவனத்தின் மீதான ஜிஎஸ்டி வரி தொடர்பான முழு தகவலை இச்செய்தி தொகுப்பில் காணுங்கள்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் என்ன மாற்றம் வரும்?

தற்போது, வாடிக்கையாளர் ஒருவர் ஏ என குறிப்பிடும் உணவகத்தில் உணவு ஆர்டர் செய்கிறார். அப்போது, ஸ்விக்கி அல்லது சோமேட்டோ போன்ற உணவு
டெலிவரி தளங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து உணவிற்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டியை வசூலித்து உணவகத்திற்கு வழங்குகிறது.

ஆனால், இந்தச் செயல்முறையில், பல உணவகங்கள் வரிகளை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டே, ஜனவரி 1 ஆம் தேதி முதல் உணவகங்களுக்கு பதிலாக உணவு டெலிவரி நிறுவனங்கள் 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை நேரடியாக அரசாங்கத்திற்குச் செலுத்துகிறது. இதுவரை உணவு டெலிவரி தளங்கள் தங்களிடம் பதிவு செய்துள்ள உணவுகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், புதிய உத்தரவால் முறையாகப் பதிவு செய்த உணவகங்கள் மட்டுமே உணவு டெலிவரி நிறுவனங்கள் வழியாக உணவுகளை விற்பனை செய்திட இயலும்.

நுகர்வோருக்கு பாதிப்பா?

நிச்சயமாக இல்லை. இது தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி இல்லை. ஏற்கனவே, ஆர்டர் செய்த உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் 5 விழுக்காடு ஜிஎஸ்டி செலுத்தும் நடைமுறை தான் தொடர்கிறது. உணவு விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படாது. இந்த முறையிலான வரி வசூல் மூலம் வரி ஏய்ப்பு, வரிச் செலுத்துவதில் செய்யப்படும் ஏமாற்று வேலைகளைத் தடுத்திட முடியும் என அரசு நம்புகிறது.

உணவகங்கள், டெலிவரி நிறுவனங்களில் என்ன மாற்றங்கள் வரும்?

வரி வல்லுநர்கள் கூற்றுப்படி, இதன் தாக்கம் சிறு உணவகங்கள் மீது அதிகளவில் இருக்கும். ஏனென்றால், இதுவரை ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான வருடாந்திர வருவாய் கொண்ட உணவகங்கள், ஜிஎஸ்டி வரம்பிற்குள் சேர்க்கப்படவில்லை. ஆனால், தற்போது உணவு டெலிவரி நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி வசூலிப்பதால், அனைத்து சிறிய உணவகங்களும் ஜிஎஸ்டி வரிகளைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரு பில்லிங் சிஸ்டம்

உணவகங்களுக்கும் தற்போது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி வசூல் செய்தால், உணவகங்கள் வரி வசூலிக்கக் கூடாது. இதன் மூலம் உணவகத்தில் இரு பில்லிங் சிஸ்டம் இருக்க வேண்டும் ஒன்று உணவகத்திற்கு வந்து சாப்பிடுபவர்களுக்கு, மற்றொன்று உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு ஆகும்

அதே போல, உணவகங்கள் ஜிஎஸ்டி வசூல் செய்தால், உணவு டெலிவரி நிறுவனங்கள் தான் உணவை வாங்குபவர்களாகக் கருதப்படும். இதனால் உணவு டெலிவரி நிறுவனங்கள் எவ்விதமான வரியும் ஆன்லைனில் ஆர்டர் செய்வோர் மீது வரி வசூலிக்கக் கூடாது.

வரி வசூலிப்பது பழைய அளவாக இருந்தாலும், வரி யார் வசூலிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது, உணவு டெலிவரி நிறுவனங்களுக்குச் சிரமமாக அமையும். இவ்விவகாரத்தில் அவர்கள் கூடுதல் தெளிவான வழிமுறைகளை அரசிடம் கேட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: New gst structure impacts restaurants and food delivery apps

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com