New Indian Union Cabinet Ministers : இன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி. இவருடைய இந்த இரண்டாவது அரசில் முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகள் யாருக்கெல்லாம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது தொடர்பாக பல்வேறு செய்திகள் பரப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் யார் யார் எந்தெந்த துறைகளுக்கு அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று.
இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டிற்கான அமைச்சர்களை தேர்வு செய்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். மிகவும் தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு அனுப்பவது வழக்கம். அது கூட்டணி அமைக்கின்ற ஆட்சி என்றால், அமைச்சரவை உருவாக்குவதில் இன்னும் சிக்கல்கள் இருப்பது வழக்கமான ஒன்றாகும்.
நடைபெற்று முடிந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் 542 தொகுதிகளில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இவர்களின் அமைச்சரவை எந்தெந்த தலைவர்களால் அலங்கரிக்கப்படலாம் என்ற தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில் நம் அனைவருக்கும் தெரிந்துவிடும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் வெற்றிகரமான அமைச்சரவை
இரண்டு முறை சறுக்கல்களை சந்தித்தாலும், இறுதியில், கூட்டணியின் வெற்றியை தேசம் அறிய வைத்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1999ம் ஆண்டு அவர் வைத்த கூட்டணி நல்ல ஒரு ஆட்சியை மக்களுக்கு கொடுத்தது.
கட்சியினருக்கு மட்டுமே முக்கிய பொறுப்புகள் கொடுக்காமல், தன்னுடன் கூட்டணியில் இருந்த திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், அகாலி தளம், மற்றும் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சியினருக்கும் இந்த பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அன்று எல்.கே. அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தார், ஜஸ்வந்த் சின்ஹா வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். யஷ்வந்த் சின்ஹா - நிதி அமைச்சர், முரளி மனோகர் ஜோஷி - மனிதவள மேம்பாட்டுத்துறை, ப்ரமோத் மஹாஜன் - தொலைத்தொடர்பு, சுஷ்மா ஸ்வராஜ் - சுகாதாரத்துறை, வெங்கையா நாயுடு - ஊரக மேம்பாட்டுத்துறை, ராஜ்நாத் சிங் - வேளாண்மை, அருண் ஜெட்லி - நீதித்துறை, உமா பாரதி - குடிநீர் விவகாரம் என தங்கள் கட்சியில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு பாஜக பொறுப்புகள் வழங்கியது.
கூட்டணிக் கட்சியினருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள்
சமதா கட்சியின் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அவர்களுக்கு பாதுகாப்புத்துறை பிரிவும், நிதிஷ் குமாருக்கு ரயில்வேயும், ஷரத் யாதவிற்கு தொழிலாளர்கள் நலத்துறையும் ஒதுக்கப்பட்டது.
சிவசேனா கட்சியின் மனோகர் ஜோஷிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்ப்பட்டது. எல்.ஜி.பி. கட்சியின் ராம்விலாஸ் பஸ்வான் கம்யூனிகேசன் அமைச்சராக பதவி ஏற்றார். பிஜூ ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக்கிற்கு நிலக்கரி சுரங்கம் தொடர்பான துறையும், திமுகவின் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர். பாலுவிற்கு வணிகம் & தொழிற்சாலைகள் நலம் மற்றும் சுற்றுச்சூழல் & காடுகள் துறையும் முறையே ஒதுக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்து விலகுவது வரை ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
மாநில வாரியாக கொடுக்கப்பட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட உறுப்பினர்கள்
வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், சந்தோஷ் கங்வர், மேனகா காந்தி - உத்திரப்பிரதேசம்
அத்வானி - குஜராத்
ஜஸ்வந்த் சின்ஹா - ராஜஸ்தான்
யஷ்வந்த் சின்ஹா, நிதிஷ், சத்ருகன் சின்ஹா, ரவி ஷங்கர் பிரசாத், சஞ்சய் பஸ்வான், ராஜிவ் பிரதாப் ரூடி - பிகார்
சுந்தர்லால் பத்வா, சத்யநாராயணன் ஜத்தியா, உமா பாரதி, சுமித்ரா மஹாஜன், ப்ரஹ்லாத் படேல் - மத்தியப் பிரதேசம்
கரியா முண்டா மற்றும் பாபுலால் மராண்டி (பழங்குடி இனத்தவர்கள்) - ஜார்கண்ட்
சிவசேனா தலைவர்கள் இல்லாமல் ப்ரமோத் மஹாஜன், பாலாசாஹீப் விகே படேல், அன்னாசாஹிப் படேல், வேத் ப்ரகாஷ் கோயல் - மகாராஷ்ட்ரா
ஆந்திராவில் இருந்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை மக்கள் தேர்வு செய்யவில்லை. இருப்பினும், அம்மாநில மக்கள் பிரதிநிதிகளாக வெங்கைய்யா நாயுடு, பங்காரு லட்சுமண்ன், பந்தாரு தத்தத்ரேயா, வித்யாசாகர் ராவ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
தமிழகத்திற்கு பி.ஆர். குமாரமங்கலம், ஜன கிருஷ்ணமூர்த்தி, பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசு ஆகியோரை நியமனம் செய்தது. உமர் அப்துல்லா மற்றும் பாஜக உறுப்பினர் சாமன் லால் குப்தா - ஜம்மு & காஷ்மீர். ஓ.ராஜகோபால் - கேரளாவின் பிரதிநிதியாக பொறுப்பேற்றார்.
வகுப்பு வாரியாக உறுப்பினர்கள்
வாஜ்பாய், ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், மகாஜன், அருண் ஜெய்ட்லி, சாந்த குமார், ஆனந்த் குமார் - பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள். ஜெஷ்வந்த் சின்ஹா, ராஜ்நாத் சிங் மற்றும் ரூடி - ராஜபுத்திரர்கள். அத்வானி மற்றும் ராம் ஜெத்மலானி சிந்தியர்கள். ராம் விலாஸ் பஸ்வான், சத்யநாராயணன், கைலாஷ் மேக்வால், சஞ்சய் பஸ்வான் தலித் இன தலைவர்கள். உமா பாரதி, ப்ரஹ்லாத் படேல் ஆகியோர் லோத் ராஜபுத்திரர்கள். பி.சி. தாமஸ் - கேரள கிறித்துவர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - பிகார் கிறித்துவர். நிதிஷ் குமார் - குர்மி இனத்தவர்.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள்
தேசிய பாதுகாப்பு, உள்துறை வெளித்துறை விவகாரம், நிதி உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகள் கூட்டணிக்கட்சியினருக்கு தரப்படவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்பான கூட்டணியில், சில பிராந்தியக் கட்சித் தலைவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொண்டார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
இடதுசாரி முன்னணி தலைவர் சோம்நாத் சாட்டர்ஜீக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 262 இடங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி மட்டும் 206 இடங்களில் வெற்றி பெற்றது.
சரத் பவார் - விவசாயம், உணவு மற்றும் விநியோகத்துறை
டி.ஆர். பாலு - நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை
ஆர்.ஜே.டில் லாலு பிரசாத் - ரயில்வே
பஸ்வான் - ரசாயனம், உரம் மற்றும் எஃகு
ஏ.ஆர். அந்துலே, சைஃப் - உட் - தின் சோஸ், தஸ்லிமுதீன் மற்றும் அகமது - இஸ்லாமிய தலைவர்கள். ஏ.கே. அந்தோனி, அஸ்கார் ஃபெர்னாண்டஸ், சுஷில்குமார் ஷிண்டே, மெய்ரா குமார், மஹவீர் ப்ரசாத், குமாரி செல்ஜா ஆகியோர் முக்கியமான தலித் தலைவர்கள். சந்தோஷ் மோகன் தேவ், பி.கே. ஹந்திக், க்யூந்தியா - வடகிழக்கு மாநிலங்களில் இருந்ந்து வந்தவர்கள்.
இரண்டாவது முறையாகவும் அந்த கட்சி பொறுப்பேற்றுக் கொண்டபோதும் அதே தலைவர்கள் தான் அமைச்சரவையில் வெவ்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள். அதில் குலாம் நபி அசாத், சல்மான் குர்ஷித், கே.ரஹ்மான் கான், ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே, ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ் போன்றவர்கள் சிறுபான்மையினர் மற்றும் தலித் சமூகத்தில் இருந்து வந்த தலைவர்கள் ஆவார்கள்.
மேலும் படிக்க : மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் யார் யார்?
நரேந்திர மோடி அமைச்சரவை
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவு கூட்டணிக்கட்சிகளுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு மீண்டும் வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி. பஸ்வான் (LJP), ஆனந்த் கீத்தே (சிவசேனா), ஹர்சிம்ரத் கௌர் (அகாலிதளம்) ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினர் மாநிலங்களவை துணை சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாஜகவின் உறுப்பினர்கள் என்னதான் மக்களவையில் அதிக இடம் பெற்றிருந்தாலும், மாநிலங்கள் அவையில் அத்தனை உறுப்பினர்களைப் பெற்றிருக்கவில்லை. ஒரு மசோதா தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்றால் நிச்சயமாக இரு அவைகளில் இருந்தும் பெரும்பான்மை பெற வேண்டும். மேலும் பிராந்திய கூட்டணியினர் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் வரை தான் பாஜகவால் இந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள இயலும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.