பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜனாதிபதி மாளிகையின் நார்த் மற்றும் சவுத் பிளாக் மற்றும் பார்லிமென்ட் கட்டடத்தை புதிதாக கட்ட தீர்மானித்துள்ளது. இந்த திட்டமே, 7 ஆண்டுகளுக்கு முந்தைய திட்டம் தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் நார்த் மற்றும் சவுத் பிளாக்குகள் மற்றும் பார்லிமென்ட் கட்டடம் உள்ளிட்டவை 1911 மற்றும் 1927ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த கட்டடங்களை சீரமைப்பதோடு மட்டுமல்லாமல், புதிதாகவும் கட்ட திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, டில்லியில் ஊடகங்களை சந்தித்த மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது, இந்த புதிய கட்டடங்கள் 2024ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும். அதாவது அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தான் கூட்டத்தொடரை நடத்தும் என கூறியிருந்தார்.
ஜனாதிபதி மாளிகையின் பிளாக்குகள் சீரமைப்பு, புதிய பார்லிமென்ட் கட்டடம் போன்றவை புதிய திட்டங்களாக தற்போது அறியப்பட்டாலும், இந்த திட்டம் 7 ஆண்டுகளுக்கு முந்தையது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 லோக்சபா சபாநாயகர்கள் இதுதொடர்பான அறிக்கையினை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டில் அப்போதைய லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அப்போதைய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடுவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். இதுமட்டுமல்லாது 2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதியும் மற்றும் 2015ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியும் இதுதொடர்பாக லோக்சபா செயலாளருக்கு கடிதங்கள் வந்துள்ளன.
இடப்பற்றாக்குறை காரணமாக, ஜனாதிபதி மாளிகையின் பிளாக்குகள் மற்றும் புதிய பார்லிமென்ட் கட்டடங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.