அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் திடீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதுவும் இந்த சம்பவம், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடந்ததாக பழைய குண்டை புதுப்பித்து வீசியிருக்கிறார் அந்தப் பெண். அவரின் பெயர் எமி டோரிஸ்.
தனக்கு, 24 வயதாக இருந்தபோது, நியூயார்க்கில் நடந்த டென்னிஸ் போட்டியில் தன்னை வலுக்கட்டாயமாக பிடித்து டிரம்ப் முத்தமிட்டார் என்று கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார் 48 வயதாகும் அந்தப் பெண். இவரின் குற்றச்சாட்டை தேர்தல் பிரச்சார களத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாக முன்வைத்து டிரம்ப்பை வெளுத்து வாங்கி வருகின்றன. ஆனால் வழக்கம் போல இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் டிரம்ப். இதற்கிடையே, 24 வயதில் நடந்த சம்பவத்தை 24 வருடங்கள் கழித்து கூறியிருக்கும் எமி டோரிஸ் யார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
எமி டோரிஸ் யார்?!
டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுவது முதல்முறையல்ல. அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பு இருந்தே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது அடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளில் இரண்டு டஜனுக்கும் அதிகமான பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். டிரம்ப் பாலியல் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டிய 25 வது பெண் எமி டோரிஸ். 48 வயதான இந்த எமி டோரிஸ், அமெரிக்க முன்னாள் மாடலும் நடிகையும் ஆவார். புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான ‘Law & Order: Special Victims Unit’ என்பதிலும், ‘The Accidental Husband’ and ‘Any Given Sunday’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதுபோக, நியூயார்க் மற்றும் சிகாகோவிலும் ஒரு மாடலாக பணியாற்றியுள்ளார்.
1997 செப்டம்பரில் மியாமியில் ஒரு மாடலாக பணிபுரிந்தபோதுதான் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்த டிரம்ப்பை முதன்முதலில் சந்தித்ததாகவும், அப்போதுதான் இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார் எமி. இதுதொடர்பாக பேசியுள்ள டோரிஸ், ``செப்டம்பர் 5, 1997 அன்று நடந்த டென்னிஸ் போட்டியில் டிரம்ப்பை சந்தித்தேன். டிரம்ப் ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டி பறந்த காலம் அது. அந்தக் காலகட்டத்தில் என் காதலன் பத்திரிகை வெளியீட்டாளர் ஜேசன் பின் மூலம் டிரம்ப்பின் அறிமுகம் நடந்தது. அன்று, டென்னிஸ் போட்டி முடிவதற்கு முன்பாக, டிரம்ப் டவர்ஸில் இருந்த ஒரு விஐபி ரூமில் எங்கள் சந்திப்பு நடந்தது.
அன்று எனது காண்டாக்ட் லென்ஸை சரிசெய்ய ரெஸ்ட் ரூமுக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து வெளியேறியபோது, டிரம்ப் ரெஸ்ட் ரூமின் வெளியே காத்திருந்தார். அப்போது, என்னை வலுக்கட்டாயமாக பிடித்து முத்தமிட்டார். நான் அவரது பிடியில் இருந்தேன், என்னால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. பல முறை நிறுத்தும்படி அவரிடம் கேட்டும், அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் என்னை வன்கொடுமை செய்ய முயற்சித்தார். இந்த சம்பவத்தின் போது டிரம்ப் 51 வயதாக இருந்தார், மேலும் அவரது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸை மணந்தார். டிரம்ப் அப்போதே வேறு மாதிரி. விரும்பியதைச் செய்ய வேண்டும் என்ற நபரை போல இருப்பார். நான் என் காதலனுடன் இருந்தபோதும் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அதிலிருந்தே அவரைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
2016 ஆம் ஆண்டே ட்ரம்பிற்கு எதிரான எனது குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக செல்வது குறித்து பரிசீலித்தேன். இருப்பினும், எனது குடும்பத்தை பாதுகாக்க அந்த முடிவில் இருந்து மாறிவிட்டேன். ஆனால் இப்போது எனது மகள்களுக்கு இதை புரிந்துகொள்ளும் வயது வந்துவிட்டது. அதனால் இப்போது இதை வெளியில் சொல்கிறேன்" என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டிரம்ப்பின் நிலைப்பாடு என்ன?!
டோரிஸின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்ததுள்ள டிரம்ப், அவை அரசியல் நோக்கம் கொண்டவை எனக் கூறியிருக்கிறார்.இதுதொடர்பாக பேசியுள்ள டிரம்ப்பின் சட்ட ஆலோசகர் ஜென்னா எல்லிஸ், ``குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. தாரமற்ற இந்த கதையின் தீங்கிழைக்கும் வெளியீட்டிற்கு கார்டியன் பொறுப்புக் கூற ஒவ்வொரு சட்ட வழிமுறைகளையும் நாங்கள் கருத்தில் கொள்வோம். இது தேர்தலுக்கு முன்பே அதிபர் டிரம்பைத் தாக்கும் மற்றொரு பரிதாபகரமான முயற்சி. டோரிஸின் முன்னாள் காதலன் இந்த சம்பவம் எதுவும் நினைவில் இல்லை என்று கூறியுள்ளார். டிரம்ப் ஒரு பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டிருந்தால், அவரது கூற்றுக்களை உறுதிப்படுத்தக்கூடிய சாட்சிகள் இருந்திருப்பார்கள். ஆனால் இது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது" எனக் கூறியிருக்கிறார்.
டிரம்ப் மீதான முந்தைய பாலியல் குற்றச்சாட்டுகள்!
1970-களுக்கும் 2020-க்கும் இடையில், இரண்டு டஜன் பெண்கள் டொனால்ட் டிரம்ப் பாலியல் அத்துமீறல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் டிரம்ப் இதுவரை ஒவ்வொரு கூற்றையும் மறுத்துள்ளார், மேலும் சில பெண்களைக் கூட கேலி செய்துள்ளார்.
டோரிஸைப் போல குறைந்தது 10 பெண்கள், தங்கள் அனுமதியின்றி டிரம்ப் வலுக்கட்டாயமாக பிடித்து முத்தமிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். 1990களில் ஒரு மன்ஹாட்டன் டிபார்ட்மென்ட் கடையின் ஆடை அறையில் அமெரிக்க ஜனாதிபதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஈ ஜீன் கரோல் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் குற்றம் சாட்டினார். ஆனால் டிரம்ப்போ அதே கரோலை `ஒரு பொய்யர்' என்று கூறி விமர்சித்தார். பின்னர் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதுதான் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இந்தமுறை தேர்தல் காலம் என்பதால் டோரிஸின் குற்றச்சாட்டு தீயாக பரவி வருகிறது. இது தேர்தலில் டிரம்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"