யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம், வயதான காலத்தில் குடிமக்கள் அனைவரும் நிதிப் பாதுகாப்பை பெற வேண்டும் என்பதாகும். இந்தத் திட்டத்தின் மூலம், சம்பளம் பெறும் ஊழியர்கள், அமைப்புசாராத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் கிக் தொழிலாளர்கள் ஆகியோரும் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள்.
இந்தத் திட்டம் ஒரு தன்னார்வத் திட்டமாக இருக்கும். அதாவது, ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி இதில் பங்கேற்க முடியும், எனினும், இதில் அரசிடம் இருந்து எந்த நிதி பங்களிப்பும் இருக்காது. தொழிலாளர் அமைச்சகம் இந்தத் திட்டத்தின் முன்மொழிவைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இது அமைப்புசாராத் துறை தொழிலாளர்கள் மற்றும் கிக் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய வசதியை வழங்கும்.
இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இது சமூகம் மற்றும் அரசாங்கம் இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2036-ம் ஆண்டு வாக்கில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 227 மில்லியனை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 15% ஆக இருக்கும். யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் முதுமையிலும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கும்.
தற்போது, அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana)மற்றும் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana) போன்ற பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ், 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கிறது.
யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள்:
யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் அமைப்புசாரா துறைகள் (Unorganised Sector) உட்பட அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கிய திட்டமாக இருக்கும். சம்பளம் பெறும் நபர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் என அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறுவரகள்.
இந்தத் திட்டம் முதுமையில் வழக்கமான வருமானத்தை உறுதி செய்யும். இது முதியவர்களுக்கு நிதி நெருக்கடியைத் தவிர்த்து அவர்களுக்கு நிதி பாதுகாப்பை அளிக்கும்.
இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது தனிநபர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இது மக்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்கும். இது ஒரு தன்னார்வத் திட்டமாகும். இதன் மூலம் அரசு, ஏற்கனவே உள்ள ஓய்வூதியத் திட்டங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் உள்ளது. இதன் மூலம் இது மிகவும் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் சவால்கள்:
இந்த திட்டத்தில் அரசங்கம் எந்த வித பங்களிப்பையும் அளிக்காது. ஆகையால், அது அரசாங்கத்தின் மீது ஒரு பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தாது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு, அனைத்துப் பிரிவுகளுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அவர்களின் ஆதரவைப் பெறுவதும் அவசியம். இந்த திட்டம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சில முக்கிய ஓய்வூதியத் திட்டங்களை இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஒருங்கிணைக்கும் என கூறப்பட்டுள்ளது.