/indian-express-tamil/media/media_files/2025/02/04/kZnpCDZ3cmPW4FNW7bhj.jpg)
பிரதிநிதித்துவ படம் (நாசா)
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் - 2024 YR4 - 2032 இல் பூமியில் மோதுவதற்கு 1% க்கும் அதிகமான வாய்ப்பு உள்ளது என்று தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாக (NASA) அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Newly discovered asteroid 2024 YR4 may hit Earth in 2032. How worried should you be?
ஒரு அறிக்கையில், நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குனர் பால் சோடாஸ், "நாங்கள் கவலைப்படவில்லை, ஏனெனில் 99 சதவீதம் மோதல் நேராது... ஆனால் இது கவனத்திற்குரியது," என்று கூறினார்.
2024 ஓய்.ஆர்4, பூமியில் மோதினால் அது எவ்வளவு அழிவை ஏற்படுத்தும், பூமியில் சிறுகோள்கள் எப்போது மோதுகின்றன, விண்வெளி ஏஜென்சிகள் இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிக்க முயற்சிக்கின்றன என்பதை இங்கே தெரிந்துக் கொள்வோம்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் 2024 ஒய்.ஆர்4 என்பது என்ன?
2024 ஒய்.ஆர்4 முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பரில் சிலியில் உள்ள தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள் ஒரு கால்பந்து மைதானம் போல பெரியது, 40 முதல் 100 மீட்டர் அகலம் கொண்டது. அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, இது கிறிஸ்மஸ் தினத்தன்று பூமிக்கு மிக அருகில் வந்தது – பூமியிலிருந்து சுமார் 800,000 கிலோமீட்டர் தொலைவில், அதாவது சந்திரனை விட இருமடங்கு தூரத்தில் கடந்து சென்றது.
இந்த சிறுகோள் அடுத்த சில மாதங்களில் பார்வையில் இருந்து மறைந்துவிடும், மேலும் 2028 இல் மீண்டும் பூமியின் வழியைக் கடக்கும் வரை மீண்டும் பார்க்க முடியாது. அதனால்தான் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தற்போது 2024 ஒய்.ஆர்4 சிறுகோளின் பாதை மற்றும் அளவை பார்வையில் இருந்து வெளியேறும் முன் தீர்மானிக்க, மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர். இதைச் செய்ய, விஞ்ஞானிகளுக்கு ஏப்ரல் நடுப்பகுதி வரை நேரம் உள்ளது. அதற்கு பின்னர் சிறுகோள் கண்டறிய முடியாத அளவுக்கு மறைந்துவிடும்.
ஒரு சிறுகோள் எவ்வளவு பெரியது என்பதைச் சரிபார்க்க, வானியலாளர்கள் பொருளின் பிரகாசத்தை ஆராய்கின்றனர் - பிரகாசமான பொருள்கள் பெரியவை. இருப்பினும், சிறுகோளின் மேற்பரப்பு எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதைப் பொறுத்து துல்லியமான அளவீடுகளைச் சொல்வது கடினம் (விண்கற்கள் அவற்றின் சொந்த ஒளியை வெளியிடுவதில்லை, அவை சூரிய ஒளியை மட்டுமே பிரதிபலிக்கின்றன). இதன் விளைவாக, ஒரு பெரிய, இருண்ட நிற சிறுகோள் மற்றும் சிறிய, அதிக பிரதிபலிப்பு கொண்ட சிறுகோள் ஆகியவற்றை வேறுபடுத்துவது ஒரு சவாலாக உள்ளது.
2024 ஒய்.ஆர்4 எவ்வளவு அழிவை ஏற்படுத்தும்?
2024 ஒய்.ஆர்4 பெரியது ஆனால் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் மற்றும் பிற உயிரினங்களை அழித்த சிறுகோள் அளவுக்கு பெரியதாக இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இருப்பினும், 2024 ஒய்.ஆர்4, மக்கள் வசிக்கும் பகுதியைத் தாக்கினால், கணிசமான உள்ளூர் சேதத்தை ஏற்படுத்தலாம்.
ஒரு பொருளின் அழிவுத் திறனை வகைப்படுத்த வானியலாளர்கள் டொரினோ அளவுகோல் எனப்படும் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வுகளுக்கான நாசா ஜே.பி.எல் மையம் (CNEOS) 0 முதல் 10 வரையிலான அளவில் ஒய்.ஆர்4 சிறுகோளை 3 என்று மதிப்பிட்டுள்ளது. அபோபிஸ் (Apophis) சிறுகோள், 2004 இல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆரம்பத்தில் 4 என மதிப்பிடப்பட்டது, ஆனால் பின்னர் தரமிறக்கப்பட்டது. குறைந்தது 100 ஆண்டுகளுக்கு இது எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று அவதானிப்புகள் காட்டுகின்றன.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, 2024 ஒய்.ஆர்4 சிறுகோள் விபத்து ஏற்பட்டால் 8 முதல் 10 மெகா டன் ஆற்றலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 15, 2013 அன்று ரஷ்யாவின் செல்யாபின்ஸ்கைத் தாக்கிய சிறுகோள் சுமார் 500 கிலோ டன் டி.என்.டி-க்கு சமமான ஆற்றலை வெளியிட்டது - ஹிரோஷிமா அணுகுண்டை விட சுமார் 30 மடங்கு அதிகம் என்று என்.பி.ஆர் அறிக்கை கூறுகிறது. இந்த சிறுகோள் மோதலில் சுமார் 1,500 பேர் காயமடைந்தனர் மற்றும் பல நகரங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அந்த சிறுகோள் 2024 ஒய்.ஆர்4 அளவில் பாதி அளவு இருந்தது.
சிறுகோள்கள் எப்போது பூமியில் மோதுகின்றன?
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன. பெரும்பாலானவை மிகவும் சிறியவை மற்றும் உராய்வு காரணமாக வளிமண்டலத்தில் எரிகின்றன - சில பெரியவை கண்களுக்கு தெரியும் அளவுக்கு எரியும், மேலும் வானத்தில் தீப்பந்தங்களாக தெரியும். சில நேரங்களில் எரியாத துண்டுகள் மேற்பரப்பைத் தாக்கும், ஆனால் அவை அதிக சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரியதாக இருக்காது.
உலகளாவிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பெரிய சிறுகோள்கள் பூமியை மிகக் குறைவாகவே தாக்குகின்றன. DW இன் அறிக்கையின்படி, டைனோசர்களை அழிவுக்கு அனுப்பிய Chicxulub சிறுகோள் போன்றவை ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டவை, 260 மில்லியன் ஆண்டுகளில் பூமியைத் தாக்கக்கூடும். பூமியின் அளவுடன் ஒப்பிடும்போது நமது சூரிய குடும்பம் மிகப்பெரியது, அதாவது சிறுகோள் போன்ற ஒரு பொருளால் பூமி தாக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் சிறியது.
ஆனால் செல்யாபின்ஸ்கில் செய்ததைப் போல சிறிய சிறுகோள்களும் சேதத்தை ஏற்படுத்தும். இவை அனைத்தும் சிறுகோளின் வேகம் மற்றும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் கோணத்தைப் பொறுத்தது. 40 மீட்டர் அகலமுள்ள பாறை ஒரு முழு நகரத்தையும் தரைமட்டமாக்கும் என்று DW அறிக்கை கூறியது.
சாத்தியமான சிறுகோள் விபத்துகளைத் தவிர்க்க விண்வெளி ஏஜென்சிகள் எவ்வாறு திட்டமிடுகின்றன?
நாசா போன்ற விண்வெளி ஏஜென்சிகள், பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வான் பொருட்கள் பூமியுடன் மோதுவதைத் தடுக்கக்கூடிய கிரக பாதுகாப்பு வழிமுறைகளில் தற்போது செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக, NASA மற்றும் Johns Hopkins Applied Physics Laboratory ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் திட்டமான இரட்டை சிறுகோள் திசைமாற்ற சோதனை (Double Asteroid Redirection Test - DART) என்பது நாசாவின் முதல் கிரக பாதுகாப்பு பணியாகும்.
2022 ஆம் ஆண்டில், ஒரு DART விண்கலம் டிமார்போஸ் (Dimorphos) என்ற சிறுகோள் ஒன்றை மோதியது மற்றும் அதன் வடிவம் மற்றும் அதன் பாதை இரண்டையும் வெற்றிகரமாக மாற்றியது. டிமார்போஸ் பூமிக்கு அச்சுறுத்தலாக இல்லை, மேலும் கிரகத்தில் இருந்து சுமார் 11 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சூரியனை சுற்றி வந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.