பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பல்வேறு வழக்குகளிலும் சிக்கியுள்ள நித்தியானந்தா சமீபத்தில் , இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா என்ற தனி நாட்டினை துவங்கியுள்ளதாக யூடியூப் வாயிலாக தகவல் வெளியிட்டார்.
கடந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று கைலாசா ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டார். அதற்கான கைலாஷா கரன்சியும் வெளியிடப்பட்டுள்ளது. தன்னுடைய இணைய பக்கத்தில். இது இந்துக்கள் மட்டுமே வாழும் கைலாஷா நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கைலாசா நாட்டின் 300 பக்க பொருளாதார கொள்கைகளை வெளியிட்டுள்ளார். மற்றொரு நாட்டுடன் தன்னுடைய வங்கி தொடர்பாக புரிதல் ஒப்பந்தமும் செய்துள்ளார்.
கைலாசா என்பது என்ன?
கடந்தாண்டில் இந்திய உளவு அமைப்புகள், மாநில போலீசார் உள்ளிட்டோரால் தேடப்படும் நபராக இருந்தவர் நித்தியானந்தா. இவர் உருவாக்கிய நாடு தான் கைலாசா. முதலில் பொய் என்று அனைவரும் நினைத்த நிலையில், அதன் நிலப்பரப்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தின் வாயிலாக வெளியிட்டார். இந்த நாட்டை, நித்தியானந்தா, உலகின் சிறந்த டிஜிட்டல் இந்து நாடு என்று அழைத்து வருகிறார்.
டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடுகளுக்கு இடையில் உள்ள தீவே, இந்த கைலாசா நாடு என்று சிலர் கூறிவந்த நிலையில், நித்தியானந்தா, ஈக்வேடார் நாட்டிலிருந்து இந்த தீவினை வாங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைலாசா நாட்டிற்கு என்று தனியாக பாஸ்போர்ட் மற்றும் கொடி வெளியிடப்பட்டுள்ளது.
கைலாசா நாட்டில் குடியுரிமை பெற இந்து மதத்தை கடைப்பிடிக்க வேண்டும் அல்லது இந்து மதத்தை கடைப்பிடிக்க ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கைலாசா இந்துக்களுக்கான பாதுகாப்பான சொர்க்கம். இங்கு அனைவரும் அமைதியான வாழ்க்கை வாழலாம். ஆன்மிக சிந்தனை, கலை, பண்பாடு போன்றவற்றை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். இங்கு யாருடைய தலையீடும் இருக்காது. வன்முறை இல்லாத உலகமாக இருக்கும்.
கைலாசா நாட்டில் சுகாதாரம், கல்வி, வர்த்தகம், தகவல் தொடர்பு போன்ற அனைத்திற்கும் தனித்தனி துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நவீன நாகரீக வாழ்க்கையுடன் அரசு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கைலாசா ரிசர்வ் வங்கி என்றால் என்ன?
ஆகஸ்ட் 22ம் தேதி, நித்தியானந்தா வெளியிட்டிருந்த வீடியோவில், கைலாசாவில் ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அது விரைவில் செயல்படும் எனவும் ராஜிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் அது செயல்படும் எனவும் தெரிவித்தார். ரிசர்வ் வங்கிக்கான கவர்னர் மற்றும் இயக்குனர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனியன்று கைலாசா இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கைலாசா ரிசர்வ் வங்கி சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தனி அமைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அங்கு இந்து பொருளாதார கொள்கைகள் குறித்து 100 புத்தகங்கள் மற்றும் 360 ஆய்வு கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கைலாசா கரன்சி வெளியிடுவதில் நாடு பெருமை கொள்கிறது. கம்போடியா, இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற பழங்கால 56 இந்து நாடுகளின் கொள்கைகளின் அடிப்படையில் கைலாசா நாணயம் வெளியிடப்படுகிறது. கைலாசா 56 நாடுகளில் எந்த ஒரு பிராந்திய உரிமைகளையும் கோரவில்லை ஆனால், அந்நாட்டின் மதமாக இருந்த இந்து மதத்திற்கு கைலாசா புத்துயிர் அளிக்கிறது.
கைலாசா கரன்சி
கைலாசாவில் 8 வெவ்வேறு மதிப்பிலான கரன்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு 77 வகையான தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கைலாசா டாலர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு டாலரில் இருந்து, கால் டாலர், அரை டாலர், முக்கால் டாலர், பத்தில் ஒரு பங்கு டாலர் என வெவ்வேறு மதிப்புகளில் டாலர்கள் வெளியிடப்படும். அவை 56 பழங்கால இந்து நாடுகளின் நாணயங்களை பிரதிபலிக்கும்.
சர்ச்சை நாயகன் நித்தியானந்தா
நித்தியானந்தா தியானபீடம் என்ற அமைப்பினை துவங்கிய நித்தியானந்தா இந்தியாவில் இருந்த போது பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வந்தார். 2010ம் ஆண்டு திரைப்பட நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்ததாக வெளியிடப்பட்ட வீடியோவால் முதன் முதலாக சர்ச்சையில் சிக்கினார். ஆனால், அதன் பின் அதிலிருந்து வெளிவந்தார். பெங்களூரு வழக்கில் சிக்கிய நித்தியானந்தா இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கைதானார்.
ஜாமினில் வெளி வந்த அவர் இரு வருடங்களுக்கு பிறகு அமெரிக்க பெண்மணி கொடுத்த புகாரில் சிக்கினார். கடைசியாக 2019ல் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்கள் குழந்தைகளை கடத்தியதாக வழக்கு தொடர்ந்தனர். மேலும் குழந்தைகளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வைத்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நித்தியானந்தா மீது குழந்தைகளை கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அது தவிர 19 வயது பெண்ணையும் கடத்தியதாக வழக்கு அவர் மீது தொடரப்பட்டது.
நவம்பர் 2019ல் குஜராத் போலீஸ், நித்தியனந்தா இந்தியாவை விட்டு தப்பிவிட்டார் எனவும் மொத்தம் 50 முறை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்தும் அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். எனவே, அவர் தற்போது ஈகுவாடர் நாட்டருகே டிரினிடாட் மற்றும் டோபாகோ இடையே அமைந்த தீவில் இருப்பதாக தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.