Nobel Prize 2019 Economics : why Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer won
Nobel Prize 2019 Economics : ஸ்வீடன் தலைநகரம் ஸ்டாக்ஹோல்மில் 6 பிரிவில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் உலகில் சிறப்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்த பரிசு அல்ஃப்ரெட் நோபல் நினைவாக வழங்கப்படுவது வழக்கம்.
Advertisment
இம்முறை பொருளாதரத்திற்கான நோபல் பரிசினை மூவர் பெற்றனர். இந்த அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டது நோபல் பரிசு அமைப்பு. பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் தங்களின் வாழ்த்துகளை அபிஜித்துக்கு கூறினர். இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி, அவருடைய துணைவியார் எஸ்தர் துஃப்லோ மற்றும் மைக்கேல் க்ரெமெர் ஆகியோருக்கு வறுமையை ஒழிக்க பாடுபட்டதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அபிஜித் மற்றும் எஸ்தர் இருவரும் கணவன் - மனைவி. இவர்கள் ஒன்றாக எம்.ஐ.டி.யில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து புவர் எக்கனாமிக்ஸ் (Poor Economics) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளனர். மைக்கேல் க்ரெமெர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியாளர்கள் சமூகத்தில் இருக்கும் ஏழ்மையை வறுமையை ஒழிக்க புதிய வழிமுறைகளை கையாண்டனர். அதற்காக புதிய கொள்கைகளை உருவாக்கினார்கள். அது முறையாக செயல்படுகிறதா என்பதை சோதனை செய்து பார்த்தனர். அந்த சோதனைகளில் எது சமுதாயத்திற்கு உதவியாக இருக்கிறது, எது சமுதாயத்திற்கு உதவியற்றதாக இருக்கிறது என்பதையும் நடைமுறைப்படுத்தி பட்டியலிட்டனர்.
எதற்காக நோபல்? விளக்கம் அளித்த நோபல் அமைப்பின் செய்தி தொடர்பாளர்
இது குறித்து நோபல் பரிசு அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “அவர்கள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் மற்றவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. ஒரு பெரிய பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு அதனை சிறிது சிறிதாக பிரித்து ஒவ்வொரு பிரச்சனைக்குமான காரணங்கள், மாற்றங்கள், நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளை ஆராய்ந்தனர். உதாரணத்திற்கு பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கற்றுக் கொள்வதில்லை என்பது பிரச்சனை என்றால் அந்த குழு ஏன் குழந்தைகளின் கற்றல் திறம்பாடு சரியாக மேம்படவில்லை என்று ஆராய்வார்கள். பின்னர் அவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்படுவதில்லை என்று அறிந்தார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக புத்தகங்கள் கொடுப்பதும் உபயோகமற்றதாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். அதற்கு காரணம் பள்ளிகள் தேவையான மாற்றங்களை உருவாக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இதனை மாற்றி அமைக்கும் விதமாக சில கொள்கைகளை உருவாக்கி அது மாணவர்களின் கற்றல் திறனை மேம்பாடு அடைய செய்கிறதா இல்லையா என்பதையும் அவர்கள் ஆராய்ந்து அறிந்தனர்” என்றும் விளக்கம் அளித்தார்.
உலக வரலாற்றில், பொருளாதரத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது பெண் எஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது. “பிரச்சனையின் வேர் என்ன என்பதை யாரும் அறிய முற்படாமல் வெறும் வறுமையைப் பற்றி மட்டுமே பேசி வருகின்றனர் மக்கள். அதனால் தான் ஒவ்வொரு பிரச்சனைகளுக்குமான காரணங்களை நாங்கள் சோதனை செய்து கண்டறிந்தோம்” என்று கூறுகிறார் எஸ்தர்.