Norovirus cases Kerala | Indian Express Tamil

கேரளாவில் கண்டறியப்பட்ட நோரோவைரஸ் பாதிப்பு: இந்த வைரஸ் எவ்வளவு ஆபத்தானது?

வைரஸ் குறைந்த வெப்பநிலையில் உயிர்வாழும் திறன் கொண்டது, மேலும் குளிர்காலம் மற்றும் குளிர் நாடுகளில் அதிகமாக பரவும் – அதனால்தான் இது சில நேரங்களில் “குளிர்கால வாந்தி நோய்” என்று குறிப்பிடப்படுகிறது.

Norovirus
Norovirus

அனோனா தத்

கேரள சுகாதாரத் துறை திங்கள்கிழமை (ஜனவரி 24) எர்ணாகுளம் மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நோரோவைரஸின் இரண்டு பாதிப்புகளை உறுதிப்படுத்தியது.  வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகளுடன் – மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 62 நபர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்த பிறகு இருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

நோரோவைரஸ் என்றால் என்ன

நோரோவைரஸ் புதியதல்ல; இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களிடையே பரவி வருகிறது மற்றும் இரைப்பை குடல் அழற்சியின் முதன்மை காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 200,000 நபர்களைக் கொல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது, பெரும்பாலான இறப்புகள் ஐந்து வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே நிகழ்கின்றன.

வைரஸ் குறைந்த வெப்பநிலையில் உயிர்வாழும் திறன் கொண்டது, மேலும் குளிர்காலம் மற்றும் குளிர் நாடுகளில்  அதிகமாக பரவும் – அதனால்தான் இது சில நேரங்களில் “குளிர்கால வாந்தி நோய்” என்று குறிப்பிடப்படுகிறது.

இங்கிலாந்தில் தொற்றுநோய்களின் போது, நோரோவைரஸ் பாதிப்புகள் சரிவைக் கண்டன, ஆனால் பின்னர் எண்ணிக்கை அதிகரித்தது. 2022 இல் UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) அறிக்கையின் படி, எதிர்பார்க்கப்பட்டதை விட 48% அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

நோரோவைரஸ் நோய்த்தொற்றுகள் அதிக வருமானம் உள்ள நாடுகளில் அடிக்கடி கண்டறியப்படுவதாக, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட வைரஸ்கள் இதழில் வெளியிடப்பட்ட 2022 ஆய்வு கூறுகிறது. இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் பாதிப்புகள் பெரும்பாலும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் போன்ற அமைப்புகளில் கண்டறியப்பட்டுள்ளன, அங்கு மக்கள் உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்தியாவில் தொற்று பாதிப்பு

நோரோவைரஸின் பாதிப்புகள் மற்ற பல இடங்களைப் போல இந்தியாவில் பொதுவானவை அல்ல – அதே நேரத்தில், கேரளாவில் ஏற்கெனவே இந்த வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்த தொற்று முந்தைய ஆண்டுகளிலும், முக்கியமாக தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாக கேரளாவில் இருந்து பதிவாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்- நடத்திய ஆய்வில், 373 பிறந்த குழந்தைகளில் முதல் மூன்று ஆண்டுகளில், 1,856 வயிற்றுப்போக்கு மற்றும் 147 வயிற்றுப்போக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 11.2% வயிற்றுப்போக்கு, 20.4% வாந்தி நிகழ்வுகளிலும் நோரோவைரஸ் கண்டறியப்பட்டதாக ஆய்வு கூறியது.

ஹைதராபாத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடுமையான இரைப்பை குடல் அழற்சியுடன் வந்த 10.3% குழந்தைகளின் மாதிரிகளில் நோரோவைரஸ் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அட்வான்ஸ்டு வைராலஜி-கேரளா நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீகுமார் கூறுகையில், சமீபத்திய ஆண்டுகளில் நோரோவைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இப்போது இந்த வைரஸை மட்டுமல்ல, இன்னும் பலவற்றையும் கண்டறியும் அமைப்புகள் எங்களிடம் உள்ளன. அதுதான் தொற்றை கண்டறிய முதன்மை காரணம்.

சிகிச்சை அளிக்கும் மருத்துவர் சந்தேகிக்கக்கூடிய ஒரு வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை விட, நோயாளியின் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவ முடிவுகளை எடுப்பதில் – நோயாளியின் மாதிரிகளை பரிசோதிப்பதில் ஒரு syndromic approach- ஐ தனது நிறுவனம் பின்பற்றுகிறது என்று டாக்டர் ஸ்ரீகுமார் கூறினார்.

எங்களிடம் 83 வெவ்வேறு வைரஸ்களைக் கண்டறியும் குழு உள்ளது. கோவிட்-19 அல்லது காய்ச்சலைப் பரிசோதிப்பதற்குப் பதிலாக, சுவாச அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய 12 வைரஸ் தொற்றுகளை நாங்கள் பரிசோதிப்போம். அல்லது, ஒரு நபருக்கு இரைப்பை குடல் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர் கூறினால், ஆறு அல்லது ஏழு வைரஸ்களுக்கான குழுவை இயக்குவோம். அதனால்தான் நோரோவைரஸ் முடிவுகளை நாங்கள் கண்டறிகிறோம், என்று டாக்டர் ஸ்ரீகுமார் கூறினார்.

நிறுவனங்கள் மாதிரிகளின் மரபணு வரிசைமுறையைச் செய்யத் தொடங்கினால், அதிகமான வைரஸ்கள் கண்டறியப்பட வாய்ப்புள்ளது, என்றார்.

குறிப்பாக கேரளாவில் இந்த தொற்று ஏன் மிகவும் பொதுவானது?

எந்த பலவீனத்தையும் விட இது கேரளாவின் பலத்துடன் தொடர்புடையது. டாக்டர் ஸ்ரீகுமார் கூறுகையில், மாநிலத்தில் வலுவான பொது சுகாதார அமைப்பு உள்ளது, இது தொற்றுநோய்களின் போது அவற்றை விரைவாக பரிசோதிக்கும் திறன் கொண்டது.

நோரோவைரஸ் தொற்று பெரிய அளவிலான பரவலை ஏற்படுத்துமா?

இல்லை. நோரோவைரஸின் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டாலும், இது பெரிய அளவிலான பரவலுக்கு வழிவகுக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வுகளின் தொற்றுநோயியல் தொடர்புகளை நாங்கள் ஆய்வு செய்யவில்லை என்றாலும், மக்கள் ஒரே மாதிரியான உணவுகளை உட்கொள்ளும் பள்ளிகள் அல்லது விடுதிகளில், நோரோவைரஸ் பாதிப்புகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. நோய்த்தொற்றின் பரவலும் தன்னைத்தானே கட்டுப்படுத்துகிறது. இது ஒரு தனிப்பட்ட பிரச்சனை, பொது சுகாதார பிரச்சனை அல்ல என்று டாக்டர் ஸ்ரீகுமார் கூறினார்.

அறிகுறிகள் என்ன மற்றும் அதன் பரவலை எவ்வாறு தடுப்பது?

நோரோவைரஸ் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலிக்கு வழிவகுக்கிறது. வயிற்றுப்போக்கு நோயாக இருப்பதால், இது நீரிழப்புக்கு வழிவகுக்கும், எனவே ஏராளமான திரவங்களை குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

அசுத்தமான உணவுகள், வைரஸால் பாதிக்கப்பட்ட மேற்பரப்புகளைத் தொட்டு, பின்னர் வாயைத் தொடுதல், தொற்று உள்ள ஒருவரைக் கவனித்துக்கொள்வது, உணவுகள் மற்றும் பாத்திரங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வது போன்ற நேரடித் தொடர்பில் இருப்பது போன்றவற்றின் மூலம் வைரஸ் தொற்று பரவுகிறது.

நல்ல சுகாதாரமே தொற்றுநோயைத் தடுக்க சிறந்த வழியாகும். 20 விநாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீருடன் உங்கள் கைகளை கழுவவும். ஹேண்ட் சானிடைசர் நோரோவைரஸுக்கு எதிராக நன்றாக வேலை செய்யாது என்று கருதப்படுகிறது.

நோய்த்தொற்று உணவுகள் மூலம் பரவக்கூடும் என்பதால், நோய்வாய்ப்பட்ட ஒருவர் மற்றவர்களுக்கு உணவைத் தயாரிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அனைத்து உணவுப் பொருட்களையும் கவனமாகக் கழுவி அதிக வெப்பநிலையில் சமைக்க வேண்டும். நோரோவைரஸ் 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கும்.

நோய்வாய்ப்பட்ட ஒருவர் வாந்தி எடுத்த பகுதிகளை அல்லது கழிப்பறைகளை கிருமிநாசினிகள் அல்லது ப்ளீச் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Norovirus cases kerala symptoms of norovirus